திருநற்கருணையில் பொறுமையாகக் காத்திருக்கும் இயேசு திருநற்கருணையில் பொறுமையாகக் காத்திருக்கும் இயேசு 

"திருநற்கருணையில் காணப்படும் தெய்வீகப் பொறுமை" – கர்தினால் போ

பெருந்தொற்றைத் தொடர்ந்து நாம் வாழப்போகும் காலத்தில், நாம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் அனைத்திலும், நமக்கு பொறுமை மிக அவசியமானது என்பதை, திருநற்கருணையில் காத்திருக்கும் இயேசு நமக்கு சொல்லித்தருகிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருநற்கருணையில் நமக்காக பொறுமையாகக் காத்திருக்கும் இயேசு, இந்த பெருந்தொற்று விளைவித்துள்ள பிரச்சனைகள் நடுவே, நமக்கு, பொறுமை என்ற புண்ணியத்தை, சொல்லித்தர விழைகிறார் என்று, மியான்மார் கர்தினால், சார்ல்ஸ் மாங் போ அவர்கள், செப்டம்பர் 8, இப்புதனன்று, 52வது அகில உலக திருநற்கருணை மாநாட்டில் வழங்கிய உரையில் கூறினார்.

ஹங்கேரி நாட்டின் தலைநகர் பூடபெஸ்ட்டில் நடைபெறுவரும் திருநற்கருணை மாநாட்டில், "திருநற்கருணையில் காணப்படும் தெய்வீகப் பொறுமை" என்ற தலைப்பில் உரை வழங்கிய கர்தினால் போ அவர்கள், இன்றைய  மனிதர்கள், இன்னும் அதிகம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற ஆவலில், ஒரு நிமிடமும் அமைதி காக்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றனர் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

திருநற்கருணை என்பது, நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு பொருள் அல்ல, மாறாக, இது, இதயங்களின் ஒன்றிணைப்பு என்றும், இங்கு இயேசு நமக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார் என்றும், கர்தினால் போ அவர்கள் எடுத்துரைத்தார்.

வாழ்வு, ஒரு துரித உணவகம் அல்ல, மாறாக, அது, பொறுமையுடன் மேற்கொள்ளப்படவேண்டியத் திருப்பயணம் என்றும், குழந்தையின் வரவுக்காக பல மாதங்கள் பொறுமையுடன் காத்திருக்கும் அன்னையைப் போல, வாழ்வின் நிறைவை அடைய, நாம் பொறுமை காக்கவேண்டும் என்பதை, நற்கருணை நாதர் சொல்லித்தருகிறார் என்றும், கர்தினால் போ அவர்கள், தன் உரையில், வலியுறுத்திக் கூறினார்.

கோவிட் பெருந்தொற்று, எரிச்சலூட்டும் ஒரு ஆசிரியராக நம்மிடையே வந்து, பொறுமை என்ற புண்ணியத்தின் பாடங்களைப் புகட்டியுள்ளது என்று கூறிய ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் போ அவர்கள், இந்த பெருந்தொற்று, நம் ஆன்மீக வாழ்வின் அடித்தளமாக விளங்கும் திருப்பலியையும், திருவிருந்தையும் நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது என்று கூறினார்.

இந்த பெருந்தொற்றைத் தொடர்ந்து நாம் வாழப்போகும் காலத்தில், நாம் சந்திக்கவிருக்கும் பொருளாதார, சமுதாய, கலாச்சார மற்றும் மதம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்திலும், நமக்கு பொறுமை மிக அவசியமானது என்பதை, திருநற்கருணையில் காத்திருக்கும் இயேசு நமக்கு சொல்லித்தருகிறார் என்று, கர்தினால் போ அவர்கள் கூறினார்.

தன் உரையின் இறுதிப் பகுதியில், மியான்மார் நாடு அடைந்துவரும் துயரங்களைக் குறித்து கர்தினால் போ அவர்கள் பேசுகையில், பொறுமையைக் கடைபிடிக்கும் ஆசிய கலாச்சாரத்தில் வளர்ந்துள்ள தங்கள் நாட்டினர், இவ்வாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் அடைந்துவரும் துயரங்களால், அவர்களின் பொறுமை, பெருமளவு சோதிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

வன்முறையற்ற அகிம்சை வழியில் தன் நாட்டு மக்கள் மீண்டும் தங்கள் குடியுரிமைகளைப் பெறுவதற்குத் தேவையான பொறுமையை, நற்கருணை ஆண்டவர் தங்களுக்கு வழங்க, மாநாட்டில் கூடியிருந்த அனைவரின் செபங்களுக்கும் அழைப்பு விடுத்தார் கர்தினால் போ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2021, 14:16