தேடுதல்

Tijuanaவில் ஸ்காலாபிரினி சபை அருள்சகோதரிகளின் புலம்பெயர்ந்தோர் மையம் Tijuanaவில் ஸ்காலாபிரினி சபை அருள்சகோதரிகளின் புலம்பெயர்ந்தோர் மையம்  

21ம் நூற்றாண்டில் மனிதப் புலம்பெயர்வின் இறையியல்

எக்காலத்தையும்விட இக்காலத்தில், புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, சமுதாயத்திற்கும் திருஅவைக்கும் பெரும் சவாலாக உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"நம் மூதாதையரைப் போலவே (காண்க.1குறிப்பேடு29,15) புலம்பெயர்ந்தோர் மற்றும் திருப்பயணிகள் - 21ம் நூற்றாண்டில் மனிதப் புலம்பெயர்வின் இறையியல்" என்ற தலைப்பில், உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பும் (UISG), ஆண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பும் (USG), ஸ்கலாபிரினி உலகளாவிய புலம்பெயர்ந்தோர் நிறுவனமும் (SIMI) இணைந்து, செப்டம்பர் 20, இத்திங்கள் முதல், செப்டம்பர் 22, இப்புதன் முடிய மூன்று நாள் கூட்டம் ஒன்றை உரோம் நகரில் நடத்தின.  

செப்டம்பர் 26, இஞ்ஞாயிறன்று, 107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு இந்த அமைப்புகள் நடத்திய கூட்டத்தில், இம்மக்களுக்கென்று பணியாற்றும், ஏறத்தாழ 70 துறவு சபைகளின் 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய, துறவிகள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Joao Braz de Aviz அவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் இம்மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள், அவர்களின் அர்ப்பண வாழ்வுக்குச் சான்று பகர்வதாக உள்ளது என்று கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்கலாபிரினி சபையைச் சேர்ந்த கர்தினால் சில்வானோ மரிய தொமாசி அவர்கள், தவிர்க்கமுடியாத சூழல்களால் தங்கள் இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் இம்மக்களைப் பராமரிப்பது, துறவியரின் கடமை எனவும், கடவுளுக்குச் சொந்தமான இப்பூமியில் நாம் அனைவரும் புலம்பெயர்ந்தோரே எனவும் கூறினார்.

எக்காலத்தையும்விட இக்காலத்தில், புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, சமுதாயத்திற்கும் திருஅவைக்கும் பெரும் சவாலாக உள்ளது என்றும், அவர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்வதோடு, அவர்கள் மனித முகங்களைக் கொண்டவர்கள் என்பதை நினைவில் வைத்து, அவர்களின் துன்பச் சுமைகளை அகற்ற நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும், இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2021, 15:37