கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க உதவும் புதிய நூல் வெளியீட்டு நிகழ்வு கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க உதவும் புதிய நூல் வெளியீட்டு நிகழ்வு 

இந்தியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க புதிய நூல்

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக: கத்தோலிக்க கண்ணோட்டத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு" - இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் சார்பில் வெளியிடப்பட்ட நூல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்கும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு நூலை, இந்தியாவின் திருப்பீடத்தூதராகப் பணியாற்றும் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி (Leopoldo Girelli) அவர்கள், ஆகஸ்ட் 31, இச்செவ்வாயன்று வெளியிட்டார்.

இறைவேண்டல் மற்றும் உரையாடல் வழியே கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்ப்பதற்கு இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் பரிந்துரைத்த அறிவுரைகளை மீண்டும் நமக்கு நினைவுறுத்தி, இந்தியாவின் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இந்நூல் அழைப்பு விடுக்கிறது என்று பேராயர் ஜிரெல்லி அவர்கள் இந்த வெளியீட்டு விழாவில் கூறினார்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக: கத்தோலிக்க கண்ணோட்டத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு" என்ற தலைப்பில், இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் சார்பில் உருவாக்கபப்ட்டுள்ள இந்நூல், டில்லி பேராயர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள Yusuf Sadan என்ற அரங்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற மனநிலை வளரவேண்டுமெனில், அருள்பணியாளரை உருவாக்கும் ஒவ்வொரு பயிற்சி இல்லத்திலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாறவேண்டும் என்று, இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட டில்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் கூறினார்.

இந்தியாவில் பணியாற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவப் போதகரும், மறைப்பணியாளரும், தங்களுக்குள் நிலவும் பிளவுகளையும், இப்பிளவுகளால் உருவான காயங்களையும் குணமாக்க, 322 பக்கங்கள் கொண்ட இந்நூல் உதவியாக இருக்கும் என்று, இந்நூலை வெளியிட்ட இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

135 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் வாழும் 2.3 விழுக்காடு கிறிஸ்தவர்கள், தங்களுக்குள் இருக்கும் பிளவுகளை நீக்கி, ஒருங்கிணைந்து வாழ்வதற்கும், உழைப்பதற்கும், இந்நூல் உதவியாக இருக்கும் என்று, ஜலந்தர் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர், அருள்பணி ஜோஸ் அவர்கள் கூறினார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2021, 14:23