தேடுதல்

சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கென திறக்கப்படும் இல்லம் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கென திறக்கப்படும் இல்லம் 

சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கென திறக்கப்பட்டுள்ள இல்லம்

சிறைக்கைதிகளின் குழந்தைகள், பாதிப்புகள் அதிகமின்றி வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில், அக்குழந்தைகளுக்கென இல்லம் ஒன்றைத் துவக்கியுள்ளது, இந்தியாவின் Sindhudurg மறைமாவட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறைக்கைதிகளின் குழந்தைகள், தங்கள் குடும்பச்சூழல் காரணமாக, மனதளவிலும், உணர்வு நிலையிலும், சமுதாயத்திலும், பாதிப்பின்றி வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில், அக்குழந்தைகளுக்கென இல்லம் ஒன்றைத் துவக்கியுள்ளது, இந்தியாவின் Sindhudurg மறைமாவட்டம்.

பெற்றோர் சிறையிலிருப்பதால், சிறாரின் வாழ்வும் வருங்காலமும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இல்லம், திருச்சிலுவை சகோதரிகள் துறவு சபையால் நடத்தப்படும் என இவ்வில்ல திறப்புவிழாவில் உரையாற்றிய Sindhudurg ஆயர் Alwyn Barreto அவர்கள், சிறைச்சாலைகளில் இருப்போர் அனைவருமே குற்றவாளிகள் அல்ல என்பதையும், பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார்.

மகராஷ்டிரா மாநிலத்தில், சிறைக்கைதிகள் குழந்தைகளின் நலவாழ்வுக்கென திறக்கப்பட்டுள்ள இந்த முதல் இல்லத்தில், வளரும் குழந்தைகள், அவர்களது பெற்றோரின் குற்றங்களுக்காக தவறான கண்ணோட்டத்துடன் நடத்தப்படும்  நிலையிலிருந்து தப்புவதற்கு இந்த இல்லம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று பயிலவிருக்கும் இக்குழந்தைகள், பின் ஒரே கூரையின் கீழ் வாழும்போது, அவர்களுக்கு மனவியல், மற்றும் உணர்வியல் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவித்தார் ஆயர் Barreto.

Sindhudurg மறைமாவட்டத்தின் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உதவி அமைப்புகள் அனைத்தும், எவ்வித இனம், மற்றும் மதப்பாகுபாடுகளின்றி அனைத்து ஏழை மக்களுக்கும் உதவிவருவதாகக் கூறிய ஆயர் Barreto அவர்கள், ஏழைமக்களுக்கு சட்ட உதவிகளையும் வழங்கிவருவதாகவும், சிறைக்கைதிகளின் பெண் குழந்தைகளுக்கென மற்றோர் இல்லத்தை துவக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2021, 14:05