பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள Chaman நகர நட்புறவு வாயிலில் மக்கள் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள Chaman நகர நட்புறவு வாயிலில் மக்கள் 

ஆப்கானுக்காக செபம், ஒருமைப்பாடு, செயல்திட்டம்

ஆப்கான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு உதவும் மனிதாபிமான வாயில்கள் திறந்துவிடப்படுவதற்கு, EU நாடுகள் கருவிகளாகச் செயல்படுமாறு ஐரோப்பிய கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்போது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளைக் களைவதற்கு, நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, அந்நாடுகளின் கத்தோலிக்க ஆயர்களும், கிறிஸ்தவத் தலைவர்களும் அழைப்புவிடுத்துள்ளனர்.

EU நாடுகளின் அரசியல் தலைவர்கள், ஆப்கானிஸ்தான் பற்றி கூட்டம் நடத்திவருவதை முன்னிட்டு, CEC எனப்படும் ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் அமைப்பும், COMECE எனப்படும், ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பும் இணைந்து செப்டம்பர் 02, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலையை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மக்களோடு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் வெளிப்படுத்தியுள்ள ஐரோப்பிய கிறிஸ்தவத் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆப்கான் மக்களுக்கு ஆதரவு காட்டுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்கானைவிட்டு வெளியேறுவதற்கு காத்திருக்கும் மக்கள், அந்நாட்டில் தொடர்ந்து வாழ்வதற்குரிய வாய்ப்புக்களை இழந்திருக்கின்றனர் எனவும், அவர்கள், கடுமையான உரிமைமீறல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் கூறியுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், அம்மக்களை, நாட்டைவிட்டு வெளியேற்றும் பணியிலும், மனிதாபிமான உதவிகளையும் ஆற்றிவரும் பன்னாட்டு சமுதாயத்தோடு, EU நாடுகள் இணைந்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பயங்கரவாதம், மற்றும், வன்முறைக்கு அஞ்சி வெளியேறும் ஆப்கான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு உதவும் மனிதாபிமான வாயில்கள் திறந்துவிடப்படுவதற்கு, EU நாடுகள் கருவிகளாகச் செயல்படுமாறு கூறியுள்ள அத்தலைவர்கள், பயங்கரவாதத்தின் அனைத்துவிதமான வடிவங்களுக்கு எதிரான, தங்களின் வன்மையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர். 

இந்த அறிக்கையில் COMECE கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Jean-Claude Hollerich அவர்களும், CEC அமைப்பின் தலைவர் அருள்திரு Christian Krieger அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2021, 15:01