பிலிப்பீன்சின் 'பூமிக் கோவில்' என்ற பெயரில் இயற்கையுடன் இயைந்த கோவில் பிலிப்பீன்சின் 'பூமிக் கோவில்' என்ற பெயரில் இயற்கையுடன் இயைந்த கோவில்  

இயற்கையுடன் இயைந்த வாழ்வைக் காட்டும் பிலிப்பீன்ஸ் கோவில்

சுத்தமான குடிநீர் போன்ற இயற்கையின் கொடைகளுக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது, மற்றும், ஒரு பிரிவினர் இந்தக்கொடைகளை விற்று இலாபம் சம்பாதிப்பது ஏன்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

படைப்பைப் பாதுகாக்கும் உலக இறைவேண்டல் நாள், செப்டம்பர் மாதம் முதல் தேதி, புதன்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, பிலிப்பீன்சின் Yanga கல்லுரி, 'பூமிக் கோவில்' என்ற பெயரில் இயற்கையுடன் இயைந்த கோவில் ஒன்றை திறந்துள்ளது.

தலைநகர் மணிலாவிற்கு வடக்கேயுள்ள Bulacan மாவட்டத்தின் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள இந்த சிற்றாலயம், செடிகளாலும், இயற்கை குறித்த கலை வேலைப்பாடுகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் பாதுகாவலர்களாகக் கருதப்படும், அசிசியின் புனிதர்கள் பிரான்சிஸ், மற்றும் கிளாரா ஆகியோர்ரின் உருவங்கள் மொசைக் எனப்படும் வண்ணக்கற்களால் செய்யப்பட்டுள்ளன.

பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பினும், இந்த கோவில் திறக்கப்பட்டுள்ளதற்கு ஒரு முக்கிய காரணம், துயரத்தின்போது இளவயது மாணவர்கள்  நம்பிக்கையுடன் நாடிவரும் ஓர் இடமாக இது இருக்கவேண்டும் என்பதற்காகவே என்று, Yanga கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இயற்கையுடன் இயைந்த ஒன்றித்த வாழ்வை நினைவுறுத்தி நிற்கும் இந்த கோவிலை திருநிலைப்படுத்திய அருள்பணி Jovi Sebastian அவர்கள் பேசுகையில், நம்மை ஒருபோதும் கைவிடாத இயற்கையின் இறைவனுக்கு நன்றியுரைப்பதன் அடையாளமாக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, படைப்பைப் பாதுகாக்கும் உலக இறைவேண்டல் நாளையொட்டி புதன்கிழமையன்று, மணிலா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் Jose Advincula அவர்கள், சுத்தமான குடிநீர் போன்ற இயற்கையின் கொடைகளுக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது, மற்றும், ஒரு பிரிவினர் இந்தக்கொடைகளை விற்று இலாபம் சம்பாதிப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2021, 14:14