தேடுதல்

செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 

CCBI பேரவையில் புதிய உயிரியல் நன்னெறி பணிக்குழு

CCBI பேரவையின் இறையியல் மற்றும், கோட்பாட்டு பணிக்குழுவின் தலைவராகிய, இராஞ்சி பேராயர் ஃபெலிக்ஸ் டோப்போ அவர்கள், உயிரியல்நன்னெறி பணிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, உயிரியல் நன்னெறி பணிக்குழு ஒன்றை உருவாக்கி, அதன் முதல் இயக்குனராக, பெங்களூரு உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி கிறிஸ்டோபர் விமல்ராஜ் அவர்களை நியமித்துள்ளது.

இம்மாதம் 20, 21 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற, CCBI பேரவையின் 87வது செயல்திட்ட குழு கூட்டத்தில், உயிரியல் நன்னெறி பணிக்குழு உருவாக்குவது பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும், இந்த பணிக்குழு, இறையியல் மற்றும், கோட்பாட்டு பணிக்குழுவின்கீழ் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

CCBI பேரவையின் இறையியல் மற்றும், கோட்பாட்டு பணிக்குழுவின் தலைவராகிய, இராஞ்சி பேராயர் ஃபெலிக்ஸ் டோப்போ அவர்களே, உயிரியல் நன்னெறி பணிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுவார்.

மருத்துவமனைகள் செயல்படும்முறை, மருத்துவ ஆய்வுகள், நலவாழ்வு குறித்த பொதுவான கொள்கைகள் போன்றவை பற்றி எழுப்பப்படும் நன்னெறி சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நடவடிக்கைகளில், இப்புதிய பணிக்குழு ஈடுபடும் எனவும், இதன் அனைத்து நடவடிக்கைகளும் மனிதரை மையப்படுத்தியே இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்பணி கிறிஸ்டோபர் விமல்ராஜ் அவர்கள், பெங்களூரு புனித ஜான் தேசிய நலவாழ்வு மையத்தில், உயிரியல் நன்னெறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். உரோம் அல்போன்சியானம் பாப்பிறை நிறுவனத்தில் நன்னெறி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உரோம் ஜெமெல்லி மருத்துவ கல்லூரியில், உயிரியல் நன்னெறியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2021, 15:34