பெருந்தொற்று தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் இலங்கை குடிமக்கள் பெருந்தொற்று தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் இலங்கை குடிமக்கள் 

கொரோனா நோயைத் தீர்க்க இலங்கையில் செப நாள்

பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்போர் குணம்பெறவும், மற்றவர்கள் இந்நோயால் தாக்கப்படாமல் இருக்கவும், இந்நோய் குறித்த வீண் அச்சங்களை நீக்கவும், அனைவரும் இணைந்து செபமாலையை செபிப்போம் - கர்தினால் இரஞ்சித்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா நோயைத் தீர்க்க அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, செப்டம்பர் 8 புதன்கிழமை, இலங்கை தலத்திருஅவை, செபம் மற்றும் உண்ணாநோன்பு நாளை கடைபிடித்தது.

அன்னை மரியாவின் பிறந்தநாளன்று, இலங்கை கத்தோலிக்கர் அனைவரும், செபமாலை செபிப்பதோடு, அந்நாளை, உண்ணாநோன்பின் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என கொழும்பு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கத்தோலிக்கர்களால் இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் உலகின் நலனுக்காக செபிக்கும் நாளாக செப்டம்பர் 8ம் தேதியை அறிவித்திருந்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், சக்தி மிகுந்த நாடுகளின் அதிகாரப் போட்டியின் ஒருபகுதியாக, ஆய்வகங்களில், இந்த நோய்க்கிருமிகள் உருவாக்கப்பட்டன என கருதப்படும் வேளையில், இந்தப் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்போர் குணம்பெறவும், மற்றவர்கள் இந்நோயால் தாக்கப்படாமல் இருக்கவும், இந்நோய் குறித்த வீண் அச்சங்களை நீக்கவும், அனைவரும் இணைந்து செபமாலையை செபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்திருந்தார்.

இலங்கையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை, முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் 13ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், ஒவ்வொருவரும் வீட்டிலிருந்தபடியே, செபமாலை செபிக்கவும், உண்ணாநோன்பை மேற்கொள்ளவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.

இலங்கையின் கத்தோலிக்க தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையங்கள் வழியாக, செப்டம்பர் 8ம் தேதி நள்ளிரவு வரை செபமாலை செபித்தல், ஒளி, மற்றும் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

இலங்கையில், 4 இலட்சத்து 72,000 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்க, 10,500 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த மக்கள்தொகையில் 43 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

இலங்கையின் பெருந்தொற்று காரணமாக, பல அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, 2019ம் ஆண்டு 37 வெளிநாட்டவர்கள் உட்பட, 279 பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமான உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்த உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் என மீண்டுமொருமுறை அரசுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார் கர்தினால் இரஞ்சித்.

இலங்கை கிறிஸ்தவக் கோவில்கள், மற்றும் உணவு விடுதிகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து, உண்மைகளும் நீதியும் நிரம்பிய விசாரணைகள் இடம்பெறும் என தற்போதைய அரசுத்தலைவர் கோத்தபய ராஜபக்சே அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2021, 14:11