தேடுதல்

நிகராகுவாவில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர் ஒருவரின் அன்னை நிகராகுவாவில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர் ஒருவரின் அன்னை  

நல்ல தலைவர்களுக்காக செபிக்க, நிகராகுவா ஆயர்கள் விண்ணப்பம்

நிகராகுவாவில், அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த உரிமைகள் மீறப்படுவது குறித்து மனாகுவாப் பெருமறைமாவட்டம், தன் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நிகராகுவா நாட்டிற்கு ஞானமும் மதிப்பும் நிறைந்த தலைவர்களைத் தருமாறு இறைவனை நோக்கி வேண்டுவோம் என, அந்நாட்டின் 200வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, தலத்திருஅவை.

நிகராகுவா நாடு, சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டை, செப்டம்பர் 15, இப்புதனன்று சிறப்பித்ததையொட்டி, செய்தியொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், இன்றைய காலத்தின் வரலாற்று நிகழ்வுகள் குறித்து, மக்கள் ஆழமாக தியானிப்பதுடன், நல்ல தலைவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும் விண்ணப்பித்துள்ளனர்.

சமுதாய நட்புணர்வுடனும், சகிப்புத்தன்மையுடனும், மதிப்புடன்கூடிய கலந்துரையாடலில் பொதுநலனை மனதில்கொண்டு, நீதியும், சமுதாய அமைதியும் நிறைந்த ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்காக இறைவேண்டலில் ஈடுபடவேண்டிய நேரமிது என மக்களை நோக்கி விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.

நிகராகுவா நாட்டில் மீண்டும் நம்பிக்கையைத் தூண்டவும், பிரிவினைகள், வன்முறைகள், மற்றும் சுயநலப்போக்குகளுக்கு எதிராகப் போரிடவும், பிறரன்பும், ஒருமைப்பாடும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும், இந்த 200மாம் ஆண்டு சுதந்திர தினக்கொண்டாட்டத்தில் உறுதியெடுப்போம் என, ஆயர்களின் மடல் அழைப்பு விடுக்கறது.

நவம்பர் மாதம் நிகராகுவாவில் இடம்பெற உள்ள தேர்தலையொட்டியப் பிரச்சாரத்தில், அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த உரிமைகள் மீறப்படுவது குறித்து மனாகுவாப் பெருமறைமாவட்டம் தன் கடுமையான கண்டனத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, அரசுக்கும் தலத்திருஅவைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக, செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நவமபர் 7ம் தேதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னோடியாக, அரசியல் கட்சிகள் தடைச் செய்யப்படுவது, வேட்பாளர்களின் மனுதாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்படாதது, அரசியல்வாதிகள், விவசாயத் தலைவர்கள், மாணவர்கள், மனித உரிமை நடவடிக்கையாளர்கள் போன்றோர் கைதுசெய்யப்படுவது தொடர்வதாக, ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையும் குற்றம் சாட்டியுள்ளது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2021, 14:27