தேடுதல்

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அமெரிக்க மக்களின் போராட்டம் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அமெரிக்க மக்களின் போராட்டம் 

அமெரிக்காவில் கூடுதலான புலம்பெயர்ந்தோர் தங்க அனுமதி

தற்போதைய நிதி ஆண்டில், 1,25,000 புலம்பெயர்ந்தோர் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு வழிசெய்யும் வண்ணம் அரசுத்தலைவர் பைடன் அவர்கள் பரிந்துரைத்ததற்காக, JRS என்ற இயேசு சபை அமைப்பினரின் நன்றி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் புகலிடம் தேடிவரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கும் எண்ணிக்கையை, அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள், இருமடங்காக உயர்த்தியுள்ளதற்கு, அந்நாட்டில், புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டிருக்கும் கத்தோலிக்க அமைப்புகள் தங்கள் நன்றியை வெளியிட்டுள்ளன.

தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்தோரில், ஒவ்வோரு நிதி ஆண்டிலும், அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுவரை, 62,500 என்று இருந்ததை மாற்றி, தற்போதைய நிதி ஆண்டில், 1,25,000 பேர் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு வழிசெய்யும் வண்ணம் பைடன் அவர்கள் பரிந்துரைத்ததை, புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள JRS என்ற இயேசு சபை அமைப்பு பெரிதும் வரவேற்றுள்ளது.

JRS அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான Joan Rosenhauer அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு பைடன் அவர்கள் வழங்கியுள்ள இந்த உதவிக்கு நன்றி கூறிய அதே வேளையில், தற்போது, ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடியை மனதில் கொண்டு, அரசுத்தலைவர், இந்த எண்ணிக்கையை, 2,00,000மாக உயர்த்துவது உதவியாக இருக்கும் என்று கூறினார்.

கத்தோலிக்க துயர்துடைப்பு பணிகள் என்றழைக்கப்படும் CRS அமைப்பின் துணைத்தலைவர், Bill O’Keefe அவர்கள் அரசுத்தலைவர் பைடன் அவர்களின் முடிவைக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த வேளையில், அந்நியரை வரவேற்பது, கத்தோலிக்கத் திருஅவையின் ஒரு முக்கிய பணி என்பதை சிறப்பாக குறிப்பிட்டார்.

2017ம் நிதி ஆண்டில், அப்போது பணியை நிறைவு செய்த அரசுத்தலைவர் பராக் ஒபாமா அவர்கள், புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 1,10,000 என்று நிர்ணயத்திருந்ததை, அவருக்குப்பின் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் அவர்கள், 50,000 என்று குறைத்தார்.

ஜோ பைடன் அவர்கள் அரசுத்தலைவராக பணியேற்றதும், இந்த எண்ணிக்கையை, 62,500 என்று உயர்த்தியதோடு, தற்போது, இந்த எண்ணிக்கையை இந்த நிதி ஆண்டில் 1,25,000 ஆக உயர்த்துவதற்குப் பரிந்துரைத்துள்ளார்.

அனுமதி பெறும் புலம்பெயர்ந்தோரில், மிகக் குறைவானவர்களே அமெரிக்க ஐக்கிய நாட்டில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறிய JRS அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Rosenhauer அவர்கள், புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, உலகெங்கும், இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ள நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு மறுவாழ்வளிக்கும் பணியில், உலகெங்கும் இன்னும் அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று கூறினார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2021, 12:48