தேடுதல்

சூழலியல் பாதுகாப்பைக் கற்றுக்கொடுக்கும் தந்தை சூழலியல் பாதுகாப்பைக் கற்றுக்கொடுக்கும் தந்தை 

மகிழ்வின் மந்திரம்: சூழலியல் பாதுகாப்பில் குடும்பமாக...

நோயுற்றர் மீது அக்கறைகாட்ட குடும்பத்தில் கற்றுக்கொடுக்கப்படவில்லையெனில், அது, இளையோரை, மற்றவரின் துன்பங்களுக்கு உணர்வற்று இருக்கச் செய்யும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

நாம் வாழ்கின்ற இந்த உலகமும், சமுதாயமும்கூட நம் இல்லம்தான் என்ற உணர்வில்,

மற்றவர்களிடம், நெருக்கமாயிருத்தல், அக்கறையுடன் செயல்படுதல், மரியாதை செலுத்துதல் ஆகியவற்றைக் குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். இவ்வாறு, தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 276ம் பத்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கடுத்த 277ம் பத்தியில், சூழலியல் பாதுகாப்பு, நோயுற்றோர் மீது அக்கறை ஆகியவற்றில் குடும்பங்களின் பங்கு பற்றி பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம்...

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதற்கு குடும்பமாக இணைந்து ஆற்றவேண்டிய பணிகள் பற்றியும், நம் நுகர்வு பழக்கவழக்கங்கள் பற்றியும் குடும்பத்திலும், நாம் சிந்தித்துப் பார்க்கலாம். ஒருங்கிணைந்த சூழலியலைப் பாதுகாப்பதற்கு, குடும்பமே, முக்கிய பொறுப்பு வகிக்கிறது. ஏனென்றால், இப்பூமியில் மனிதக் கலாச்சாரத்தின் இரு அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கும் குடும்பமே, சமூகத்தின் முதன்மை அமைப்பாகும். அதேபோல், வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்கள், மற்றும், பிரச்சனைகள் ஆகிய நேரங்கள், குடும்ப வாழ்வில் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக, நோயுற்ற காலத்தைக் குறிப்பிடலாம். நோயாய் இருக்கும்போது குடும்பத்திலும், மனிதப் பலவீனத்தால் இன்னல்கள் எழுகின்றன. ஆயினும், பொதுவாக, நோயுற்ற நேரங்களே,  குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துகின்றன. நோயுற்றவர் மீது அக்கறை காட்ட குடும்பத்தில் கற்றுக்கொடுக்கப்படவில்லையெனில், அது, இதயத்தை இறுகிய நிலையில் வளரச்செய்யும். மேலும், இளையோரை, துயரங்களை எதிர்கொள்ள திறனற்றும், வலுவற்ற நிலையில் வாழ்கின்ற மற்றவரின் துன்பங்களுக்கும் உணர்வற்று இருக்கச் செய்யும். (அன்பின் மகிழ்வு 277)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2021, 15:09