திருத்தம் பெறுகின்ற சிறுமி திருத்தம் பெறுகின்ற சிறுமி 

மகிழ்வின் மந்திரம்: பெற்றோரே,பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள

குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம், தீங்கு விளைவிக்கும், மற்றும், அவர்களுக்கு அது உதவாது. இது மனச்சோர்வு மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில், 263 முதல் 267ம் வரையுள்ள பத்திகளில், பிள்ளைகளின் நன்னெறி  உருவாக்கம் என்ற தலைப்பில், பெற்றோருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அவற்றின் தொடர்ச்சியாக, பிள்ளைகள் தவறிழைக்கும்போது அவர்களைத் திருத்தும் முறைகளுக்கும், 268, 269ம் பத்திகளில், திருத்தந்தை வழிகாட்டியுள்ளார். அவற்றின் சுருக்கம் இதோ...

சிறாரும், வளர்இளம்பருவத்தினரும் தங்களின் தவறான நடத்தைகளின் எதிர்விளைவுகளை உணர்வதற்கு அவர்களுக்கு உதவுவது முக்கியம். தங்களின் தவறுகள், மற்றவரை எவ்வளவு தூரம் புண்படுத்தியுள்ளது என்பதை ஏற்பதற்கும், அந்த நேரங்களில், மற்றவரை, தங்களது இடத்தில் வைத்துப் பார்ப்பதற்கும், அவர்கள் ஊக்கப்படுத்தப்படவேண்டும். இந்த முறையானது, போர்க்குணமுள்ள, மற்றவர் நலனில் அக்கறையற்ற நடத்தைகளுக்கு வழங்கப்படும் சில தண்டனைகளுக்கு ஒரளவு உதவும். பிள்ளைகள் தாங்கள் ஆற்றிய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவும், மற்றவருக்கு இழைத்த தீமைக்கு பிராயச்சித்தம் செய்யவும் அவர்களுக்குப் பயிற்சியளிப்பது முக்கியம். பள்ளிகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நன்னெறி பயிற்சிகள், அவர்கள், தனிப்பட்ட சுதந்திரத்தில் வளர்வதில் பலன்களை நல்குகின்றன. மேலும், அவர்கள், குடும்பத்தில் வளர்வதும், தங்களின் உருவாக்கத்தில் வழங்கப்படும் எல்லா பயிற்சிகளுமே தங்களுக்கு நல்லதே என அறிய வருவார்கள். பிள்ளைகள், தங்களின் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கையில், அவற்றை ஏற்று, பாராட்டும்போது,  அவர்களுக்கு அளிக்கப்படும் திருத்தங்களும் ஊக்கமளிப்பதாய் இருக்கும். மேலும் அந்நேரங்களில், அவர்கள், தங்கள் பெற்றோரின் உறுதியான, பொறுமைநிறைந்த நம்பிக்கையையும் உணர்கிறார்கள். திருத்தங்களை, அன்போடு கொடுக்கும்போது, தங்கள் மீது அக்கறை காட்டப்படுகின்றது என்பதை பிள்ளைகள் உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் சொந்த வரையறைகளை, தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளவும், தங்களை மேம்படுத்தவும் முயற்சி செய்யவேண்டும். ஏதாவது தவறு செய்யும் ஒரு குழந்தை, திருத்தப்படவேண்டும். ஆனால், அக்குழந்தை, பகைவனாகவோ, அல்லது, ஒருவரின் சொந்த ஏமாற்றங்களைப் பறித்துச் செல்லும் ஒரு பொருளாகவோ ஒருபோதும் நடத்தப்படக் கூடாது. “பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்” (எபேசி.6:4; காண்க. கொலோ. 3:21) என்று, புனித பவுல் தன் திருமடல்களில் கூறியுள்ளதுபோன்று, குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம், தீங்கு விளைவிக்கும், மற்றும், பிள்ளைகளுக்கு அது உதவாது. இது மனச்சோர்வு மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும். (அன்பின் மகிழ்வு 268, 269)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2021, 14:23