தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டு பள்ளி ஒன்றில் அமெரிக்க ஐக்கிய நாட்டு பள்ளி ஒன்றில்  

மகிழ்வின் மந்திரம் : பாலியல் கல்வியின் தேவை

அன்பிற்கான கல்வி, மற்றும், ஒருவருக்கொருவர் தன்னையே வழங்குதல் என்ற பரந்த கட்டமைப்பிற்குள் மட்டுமே பாலியல் கல்வியை நாம் பார்க்க இயலும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில், வாழ்வுப் பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் முதல் கல்விக்கூடம் குடும்பமே என்பதை விளக்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் 280ம் பத்தியிலிருந்து ஏழு பத்திகளில், 'பாலியல் கல்வியின் தேவை' குறித்து விளக்கியுள்ளார். அதன் முதல் பத்தியில் கூறியுள்ளவை இதோ: 

நேர்மறை மற்றும் விவேகமான பாலியல் கல்வியின் தேவை குறித்து, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பேசப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வளர்ந்து வரும் சூழலில் அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. உளவியல், போதனைமுறை கல்வி, அறிவியல் தரும் பாடங்கள்  போன்றவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். பாலியல் கல்வி குறித்த சவாலை நம் கல்வி நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளனவா என்ற கேள்வியை நமக்குள் கேட்பது நல்லது. பாலியல் கல்வி பிரச்சனை என்பது, அற்பமான ஒன்றாகவும், போதிய ஆதரவு பெறாத ஒன்றாகவும் இருக்கும் ஒரு காலக்கட்டத்தில், இந்த சவாலை அணுகுவது அவ்வளவு எளிதல்ல. அன்பிற்கான கல்வி, மற்றும், ஒருவருக்கொருவர் தன்னையே வழங்குதல் என்ற பரந்த கட்டமைப்பிற்குள் மட்டுமே இக்கல்வியை நாம் பார்க்க இயலும். இப்பாலியல் கல்விமுறை, அற்பமானதாகவும், ஆதரவற்றதாகவும் நோக்கப்படாமல், ஒளியூட்டப்பட்டு வளப்படுத்தப்பட்டதாக மாறவேண்டும். பாலியல் தூண்டுதல் என்பது, சுய அறிவு, மற்றும் சுய கட்டுப்பாடு என்ற வளர்ச்சி நடைமுறையின் வழியாக, உயரிய திறன்களை வளர்க்கும், மகிழ்ச்சி மற்றும் அன்புநிறை சந்திப்புக்களுக்கு உரமூட்டுவதாக உள்ளது. (அன்பின் மகிழ்வு 280)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2021, 14:57