பிரான்சில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பிரான்சில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் 

மகிழ்வின் மந்திரம் : குழந்தையின் சுதந்திரம் சரியாக வழிநடத்தப்பட

மதிப்பீடுகளை குழந்தைகளிடம் பரிந்துரைத்து, வளர்க்க முயற்சிகளை மேற்கொள்ளும்போது, குழந்தைகளின் வயது, மற்றும் திறன்களைக் கருத்தில்கொண்டு செயல்முறைகளில் ஈடுபடவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில், குடும்பங்களில் குழந்தைகள் வளர்க்கப்படும்போது, கண்டிப்பு, கட்டுப்பாடுகள் என்பவைகளுடன் இணைந்து தேவையான அளவு சுதந்திரமும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். 'நன்னடத்தை உருவாக்கம்' எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிப் பேசும்போது, பொறுமையாக யதார்த்தங்களைப் புரிந்துகொள்வது பற்றி, அதிலும் குறிப்பாக, தன்னிச்சையான செயல்களுக்கும், சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் இடையே காணும் வேறுபாடுகள் குறித்து, அம்மடலின் 273ம் பத்தி கூறும் கருத்துக்களின் சுருக்கம் இதோ.

மதிப்பீடுகளை குழந்தைகளிடம் பரிந்துரைத்து, அவர்களை வளர்க்க முயற்சிகளை மேற்கொள்ளும்போது, குழந்தைகளின் வயது மற்றும் திறன்களைக் கருத்தில் கொண்டு, கண்டிப்பான முறைகளைக் கையாளாமல், மெதுவாக முன்னோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டும். ஒரு குழந்தையின் நடத்தையை மாற்றுவது, படிப்படியான செயல்முறையை உள்ளடக்கியது என்பதை, உளவியல், மற்றும் கல்வி அறிவியலின் உயரிய பங்களிப்புகள் காட்டுகின்றன. ஆனால், இது மட்டுமே குழ்நதையின் முதிர்ச்சியின் வளர்ச்சியை உறுதி செய்யாது என்பதால், குழந்தையின் சுதந்திரம் சரியான முறையில் வழிநடத்தப்பட்டு, ஊக்குவிக்கப்படவேண்டும். சூழ்நிலை சுதந்திரம், உண்மையான சுதந்திரம், வரையறைகள், மற்றும், நிபந்தனைகளுக்கு உட்பட்டதுமாகும். இது முழுமையான தன்னிச்சையுடன் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் திறன் மட்டுமல்ல. தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கு இடையே நிலவும் வேறுபாடுகள், அல்லது தனித்தன்மைகள் எல்லா வேளைகளிலும் தெளிவாக வரையறுக்கப்பட முடியாதவைகளாக உள்ளன. ஒருவர் தெளிவாகவும் விருப்பார்வத்துடனும் ஒரு தீமையை விரும்பும் வேளைகளில்,  கட்டுப்படுத்தமுடியாத ஆர்வம், மற்றும் சரியான வளர்ப்பின்மை காரணமாக அதனை ஆற்றிவிடுவது உண்டு. இதுபோன்ற வேளைகளில், முடிவு தன்னிச்சையானதாகவும், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இல்லாததாகவும் இருக்கின்றபோதிலும், அது சுதந்திரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஏனெனில், அந்த தீமையைத் தவிர வேறொன்றை தேர்ந்தெடுப்பது அவர்களுக்கு அங்கு நடைமுறை சாத்தியமில்லை. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் விடயத்தில் இதைப் பார்க்கிறோம். அவர்கள் ஒரு தீர்வை விரும்பும்போது, அவர்கள் அதை முழுமையாக விரும்புகிறார்கள், ஆனால், அந்த நேரத்தில் அவர்களைப் பொறுத்தவரையில் அங்கு வேறு எந்த முடிவும் சாத்தியமில்லை என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களின் முடிவு தன்னிச்சையானது, ஆனால், சுதந்திரமானது அல்ல. "அவர்கள் சுதந்திரமாகத் தேர்வு செய்யட்டும்" என்று கூறி அனுமதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஏனென்றால், உண்மையில் அவர்களால் தேர்வு செய்ய இயலாது. மேலும், போதைப்பொருட்களை அனுமதிப்பது, அவர்களின் போதை அடிமைநிலை அதிகரிக்கவே உதவும். அவர்களுக்கு மற்றவர்களின் உதவி, மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தேவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2021, 13:46