போர்த்துக்கல் நாட்டில் ஏழைகளுக்கு உணவு போர்த்துக்கல் நாட்டில் ஏழைகளுக்கு உணவு 

வின்சென்ட் குழுமத்தின் உலகளாவிய கூட்டம் செப்.16,17

புனித வின்சென்ட் தெ பவுலின் தனிவரத்தைப் பின்பற்றி இயங்கும் வின்சென்ட் குழுமத்தில், 162 நாடுகளிலிருந்து, 160 துறவு சபைகள், மற்றும், பொதுநிலையினர் கழகங்களின் 40 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வின்சென்ட் சபைகளின் கூட்டமைப்பு, வருகிற செப்டம்பர் 16,17 ஆகிய இரு நாள்களில், இணையதளம் வழியாக மேற்கொள்ளவிருக்கும் உலகளாவிய மெய்நிகர் கூட்டத்தில்,  புனித வின்சென்ட் தெ பவுலின் ஆன்மீகத்தைப் பகிர்ந்துகொள்ளும் அனைவரும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

“வறியோருக்காகப் பணியாற்றும் அனைவரோடும் இறைவேண்டல், கனவு காணுதல், மற்றும், ஒத்துழைப்பு” என்ற தலைப்பில், வின்சென்ட் குழுமம் மேற்கொள்ளவிருக்கும் உலகளாவிய கூட்டம் பற்றி, ஆகஸ்ட் 03, இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த உலகளாவிய மெய்நிகர் கூட்டம், இரண்டு நிலைகளில் நடைபெறும் எனவும்,  செப்டம்பர் 16ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், ஆசியா மற்றும், ஓசியானியா ஆகிய பகுதிகளின் தலைவர்களும், 17ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், ஐரோப்பா, ஆப்ரிக்கா, மற்றும், அமெரிக்கா ஆகிய பகுதிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுமம், ஐந்து கண்டங்களிலுள்ள பல்வேறு கிளைகளின் தலைவர்களுக்கு, வருகிற செப்டம்பரில், இந்த மெய்நிகர் கூட்டத்தை நடத்தவுள்ளது.  2020ம் ஆண்டில் உரோம் நகரில் நடைபெற்ற இக்குழுமத்தின் முதல் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒற்றுமை உணர்வின் ஒளியில், இந்த இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது.

புனித வின்சென்ட் தெ பவுலின் தனிவரத்தைப் பின்பற்றி இயங்கும் உலகளாவிய இயக்கமான வின்சென்ட் குழுமத்தில், 162 நாடுகளிலிருந்து, 160 துறவு சபைகள், மற்றும், பொதுநிலையினர் கழகங்களின் நாற்பது இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  

புனித வின்சென்ட் தெ பவுலின் ஆன்மீகம் உருவான 400ம் ஆண்டு, 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டபோது, உலகில் ஏழைகளுக்கு ஆற்றும் சேவைகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதை, இக்குழுமம் தொடர்ந்து செயல்படுத்த முயற்சிப்பதாக, இச்செவ்வாய் செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2021, 14:57