உள்கட்டமைப்புப் பணிகள் பற்றி அரசுத்தலைவர் பைடன் விளக்கமளித்தல் உள்கட்டமைப்புப் பணிகள் பற்றி அரசுத்தலைவர் பைடன் விளக்கமளித்தல் 

உள்கட்டமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு – ஆயர்கள் பாராட்டு

எக்காரணம் கொண்டும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கருக்கலைப்பு முயற்சிகள் இடம்பெறக்கூடாது - பேராயர் Paul Coakley

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் செனட் அவை, அந்நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கென 1,200 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்ய, இவ்வாரத்தின் துவக்கத்தில் எடுத்த முடிவைக் குறித்து, அந்நாட்டு ஆயர் பேரவை, தன் மகிழ்வையும், பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மக்களின் வாழ்வை முன்னேற்றும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை பாராட்டும் அதே வேளையில், இன்னும் பல்வேறு அம்சங்களில் மக்களின் வாழ்வை முன்னேற்றவும், பாதுகாக்கவும், அரசு, முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின், உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர், பேராயர் Paul Coakley அவர்கள் கூறியுள்ளார்.

தற்போது செனட் அவை எடுத்துள்ள இந்த முடிவினால், நாட்டில் உள்ள சாலைகள், பாலங்கள், இரயில் பாதைகள் ஆகியவை மறுசீரமைப்பு பெறும் என்றும், மக்கள் பயன்படுத்தும் இணையவழி தொடர்புகளின் வேகம் பல மடங்கு உயரும் என்றும், கூறப்படுகிறது.

மேலும், இந்த உள்கட்டமைப்பு பணிகளால் மக்களின் வேலைவாய்ப்பு உயரும் என்பது குறித்தும், சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்பது குறித்தும் தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ள ஆயர் பேரவை, இந்த முன்னேற்ற திட்டங்களில், இயற்கையை பேணிக்க்காக்கும் முயற்சிகளும் இணைந்து செல்லவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

ஆயர் பேரவையின் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பேராயர் Paul Coakley அவர்கள், எக்காரணம் கொண்டும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கருக்கலைப்பு முயற்சிகள் இடம்பெறக்கூடாது என்பதை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கிவரும் கத்தோலிக்க நிறுவனங்கள், தங்கள் மனசாட்சியின் குரலுக்கு செவிமடுத்து முடிவுகள் எடுப்பதற்கு, அரசு, எவ்வகையிலும் தடையாக இருக்கக்கூடாது என்பதையும், பேராயர் Paul Coakley அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2021, 14:29