"மௌனம் காக்கும் பார்வையாளன் அல்ல நான்" - அருள்பணி ஸ்டான் சுவாமி எழுதிய நூல் "மௌனம் காக்கும் பார்வையாளன் அல்ல நான்" - அருள்பணி ஸ்டான் சுவாமி எழுதிய நூல் 

பொதுக்காலம் 21ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

யோசுவாவைப் போல, பேதுருவைப் போல, அருள்பணி ஸ்டான் சுவாமியைப் போல, இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து, நம் வாழ்வின் முடிவுகள் அமைய, இறையருளை இறைஞ்சுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 21ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

கடந்த நான்கு வாரங்களில், தூய கன்னிமரியாவின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடிய சென்ற ஞாயிறைத் தவிர, முந்தைய மூன்று ஞாயிறு வழிபாடுகளில், யோவான் நற்செய்தி 6ம் பிரிவிலிருந்து நற்செய்திப் பகுதிகளை கேட்டுவந்துள்ளோம். இந்த ஞாயிறன்று, இப்பிரிவின் இறுதிப் பகுதி, நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.

5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு, இயேசு வழங்கிய அற்புத விருந்துடன், யோவான் நற்செய்தி 6ம் பிரிவு ஆரம்பமாகிறது. அந்த விருந்துக்குப்பின், மக்கள், தங்கள் வயிற்றுப்பசியைத் தீர்க்க, தன்னை, மீண்டும், மீண்டும் தேடிவருகின்றனர் என்பதை உணர்ந்த இயேசு, அவர்களுக்கு வழங்கும் உரையில், கசப்பான உண்மைகளைக் கூறுகிறார். கடினமான சவால்களை முன்வைக்கிறார். அவ்வுரையின் இறுதியில், இயேசுவைப் பின்தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டிய ஓர் இக்கட்டானச் சூழல் உருவாவதை, இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம்.

முடிவெடுக்கும் திறமை, மனிதர்களாகிய நமக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள ஓர் அழகியக் கொடை. இக்கொடையைக் குறித்து சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

ஏனைய உயிரினங்கள், சூழ்நிலையால் உந்தப்பட்டு செயல்படும் வேளையில், மனிதர்களாகிய நாம் மட்டுமே, சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, நல்லது, கெட்டது இவற்றை உணர்ந்து, முடிவெடுக்க, ஆற்றல் பெற்றுள்ளோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி, காரண, காரியங்களை ஆராய்ந்து, கணக்குப் பார்த்து முடிவெடுப்பது ஒரு வகை. வர்த்தக உலகிலும், அரசியல் உலகிலும், சுயநலனும், இலாபமும், இந்த முடிவுகளை வழிநடத்துகின்றன.

இதற்கு மாறாக, இலாப, நட்ட கணக்குகளைப் புறந்தள்ளி, நம் வாழ்வை வழிநடத்தும் கொள்கைகள், மதநம்பிக்கை, நன்னெறி விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, முடிவெடுப்பது, உன்னதமான மற்றோரு வழி. இத்தகைய முடிவுகள், அறிவுத்திறனிலிருந்து பிறப்பதைக்காட்டிலும், ஆழ்மனதிலிருந்து பிறக்கும். பல வேளைகளில், இத்தகைய முடிவுகள், நடைமுறை வாழ்வில், கடினமான விளைவுகளை உருவாக்கினாலும், ஆழ்மனதில், உண்மையான விடுதலை உணர்வை வழங்கும்.

ஆகஸ்ட் 15, கடந்த ஞாயிறு, இந்தியாவின் 75வது விடுதலைநாளைக் கொண்டாடினோம். 'கொண்டாடினோம்' என்ற சொல்லைக் கேட்டதும், 'என்னத்த கொண்டாடினோம்' என்ற விரக்தி கலந்த ஒரு கூற்று, பலரது எண்ணத்தில் எழுந்திருக்கலாம். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலையடைந்தோம், ஆனால், கொள்ளைக்காரர்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகிறோம் என்ற எண்ணம், ஒவ்வொரு விடுதலை நாளன்றும், நம் உள்ளங்களில், வேதனையை உருவாக்குகின்றது.

நம் பாராளுமன்றத்தை, சட்டப்பேரவைகளை, நீதி மன்றங்களை ஆக்கிரமித்துள்ள இந்தக் கொள்ளைக்காரர்களைப்பற்றி என்ன முடிவெடுக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுந்தால், ‘என்னால் என்ன செய்யமுடியும்’ என்ற ஒரு மலைப்பு நமக்குள் உருவாகிறது. அந்த மலைப்பு, நம்மைச் செயலிழக்கச் செய்து, விரக்தியில் ஆழ்த்துகிறது.

இந்த கொள்ளைக்காரர்களையும், அவர்களது அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்த, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் எடுத்த முடிவையும், அதற்கு அவர் தந்த விலையையும், நாம் அறிவோம். இந்தியாவின் விடுதலை நாளுக்கு நாற்பது நாள்கள் முன்னதாக, ஜூலை 5ம் தேதி, இந்தக் கொள்ளைக்காரர்களின் சித்ரவதைகளிலிருந்து விடுதலையடைந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், தன் வாழ்வை வழிநடத்திய எண்ணங்களையும், வெவ்வேறு நிலைகளில் தான் எடுத்த முடிவுகளையும், வருங்காலத்திற்கு உதவும் என்ற எண்ணத்தில், தொகுத்துள்ளார். அவரது சிந்தனைத் தொகுப்பு, அவரது மரணத்திற்குப்பின், ஒரு நூலாக, அண்மையில் வெளியிடப்பட்டது.

“I am not a silent spectator” அதாவது, "மௌனம் காக்கும் பார்வையாளன் அல்ல நான்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலின் அறிமுகத்தில், அவர் பதிவுசெய்துள்ள முதல் வரிகள், அவர், தன் வாழ்வில் எடுத்த முடிவுகளுக்கு காரணம் என்ன என்பதை, ஓரளவு புரிந்துகொள்ள உதவுகின்றன. அந்த முதல் வரிகள் இதோ:

உண்மை ஏன் இவ்வளவு கசப்பாயிற்று, கருத்துவேறுபாடு இவ்வளவு சகிக்கமுடியாததாயிற்று, நீதி இவ்வளவு எட்டமுடியாததாயிற்று? ஏனெனில், அதிகாரத்தில் இருப்போருக்கு, உண்மை மிகவும் கசந்துபோனது, கருத்துவேறுபாடு விழுங்கமுடியாமல்போனது, சக்தியற்றவர்களுக்கு, சமுதாயத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களுக்கு, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு, நீதி, எட்டமுடியாத தூரத்தில் உள்ளது. இருப்பினும், உண்மை பேசப்படவேண்டும், கருத்துவேறுபாடு கொள்ளும் உரிமை உயர்த்திப்பிடிக்கப்படவேண்டும், வறியோரின் வாசலை, நீதி அடையவேண்டும். மௌனம் காக்கும் பார்வையாளன் அல்ல நான்.

அநீதிகள் நிறைந்த சூழலில், நம்மில் பலர், மௌனம் காப்பதே சிறந்த வழி என்று எண்ணுகிறோம். தற்காப்பு என்ற அடிப்படை மனிதத்தேவையிலிருந்து எழும் முடிவு இது. மௌனம் காக்க முடிவெடுப்போரைக் குறித்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறிய ஒரு கூற்று, நினைவில்கொள்ளத்தக்கது: “சமுதாய மாற்றத்தை நோக்கிச்செல்லும் காலத்தின் மிகப்பெரும் வேதனை என்னவென்று சிந்தித்தால், அது, தீமைகளைச் செய்யும் ஒரு சிலர் போடும் கூப்பாடு அல்ல... மாறாக, நல்லவர்களின் அதிர்ச்சியூட்டும் அமைதியே, பெரும் வேதனைதரும் காரியம்” என்று, மார்ட்டின் அவர்கள் கூறிய வார்த்தைகள், இன்றும், பொருள் உள்ளவைகளாகத் தெரிகின்றன.

அநீதிகள் நடந்தவேளையில், கைகட்டி, வாய்மூடி, பார்வையாளராக இல்லாமல், அந்த அநீதிகளைத் தட்டிக்கேட்ட போராட்டத்தில் பங்கேற்பாளராக மாற முடிவெடுத்து, அதன் விலையாக தன் உயிரையே தந்தவர், அருள்பணி ஸ்டான் சுவாமி. அவரைப் பின்பற்றி, ஆயிரமாயிரம் இந்தியர்கள், குறிப்பாக, இளையோர், அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் முடிவுகளை எடுப்பதற்கு, அருள்பணி ஸ்டான் அவர்கள், இறைவன் முன் நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இக்கட்டானச் சூழல்களில், யோசுவா, மற்றும் புனித பேதுரு ஆகிய இருவரும் எவ்வாறு முடிவெடுத்தனர் என்பதை, இன்றைய வழிபாட்டு வாசகங்களில் காண்கிறோம். "நானும் என்  வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை, இன்றைய முதல்வாசகத்தில் கேட்கிறோம். யோவான் நற்செய்தியில், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் 6: 68) என்ற புகழ்பெற்ற சொற்களைப் பதிலாகச் சொல்கிறார், சீமோன் பேதுரு. யோசுவாவும், பேதுருவும் எடுத்த முடிவுகள், அறிவுத்திறனிலிருந்து பிறக்கவில்லை, ஆழ்மனதிலிருந்து பிறந்தன. அத்துடன், அவர்கள் எடுத்த முடிவுகள், வாய் வார்த்தைகளாகமட்டும் இருந்துவிடாமல், செயல்களாகவும் மாறின.

இவ்விருவரும் எடுத்த முடிவுகளில், மற்றோர் அம்சம், நம் கவனத்தை ஈர்க்கின்றது. இருவருமே, தங்கள் முடிவுகளை, தனி மனிதர்களாக எடுக்கவில்லை. தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24: 15) என்று யோசுவா உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா குறிப்பிட்டுள்ளதை, அவரது குடும்பத்தினர் என்றுமட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று, தன் குலத்தைச் சார்ந்த அனைவரையும் இந்த வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி, சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் முடிவெடுக்கிறார்.

தங்கள் குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை, முழுமையாக நம்புகிறவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே, மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும், நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்து பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மேற்கத்திய நாடுகளில் வாழும் குடும்பங்களில், 'தாமரை இலை மேல் நீர்' போன்ற உறவுகள் நிலவுவதைக் காணலாம். அத்தகைய ஒரு போக்கு, தற்போது, ஆசிய நாடுகளிலும் பரவிவருவதை, நாம் வேதனையோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்தப் போக்கு, ஒவ்வொருவரையும், தனிமரமாக மாற்றிவிடுவதால், தவறான முடிவுகள் எடுக்க வழிவகுக்கிறது. குடும்ப உறவுகள் வலுப்பெற்று, அனைவருக்கும் நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்கும் சூழல், நம்மிடையே வளரவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

எவ்வகையான சூழல்களில் முடிவுகள் எடுக்கிறோம் என்பதைச் சிந்திக்கவும், இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. வாழ்வில் எல்லாமே சுமுகமாகச் செல்லும் வேளைகளில், முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. அந்நேரங்களில் சிறு, சிறு முடிவுகள் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது, முடிவுகள் எடுப்பது, கடினமாக இருக்கும்.

அண்மையில், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளிவந்த செய்திகளும், புகைப்படங்களும், காணொளித் தொகுப்புகளும் நம் நினைவுகளைக் காயப்படுத்தியுள்ளன. தாலிபான் அமைப்பின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் முடிவில், மக்கள், காபூல் விமான நிலையத்தில் மேற்கொண்ட முயற்சிகள், அமெரிக்க இராணுவ விமானம் கிளம்பியபோது, அந்த விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடியே செல்ல முடிவெடுத்த சிலர், விமானத்திலிருந்து விழுந்து உயிர் நீத்தது ஆகியவை, மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முடிவெடுக்கும் திறமையை ஆய்வுசெய்ய அழைப்புவிடுக்கின்றன.

முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பி, இந்த முடிவுகளை எடுக்கும்போது, அதனால் கிடைக்கும் ஆழ்மன அமைதியும், விடுதலையும் மிக உன்னதமானவை. இப்படிப்பட்ட ஓர் உணர்வையே, பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்: "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் 6: 68)

"வேறு யாரிடம் போவோம்?" என்று பேதுரு கூறுவதை, "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் பொருள்கொள்ள முடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும், அவரது நண்பர்களும், மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு இணைந்து, தங்கள் பழையவாழ்வுக்குத் திரும்ப முடிவெடுத்திருக்கலாம். ஆனால், பேதுருவும், ஏனையச் சீடர்களும், இயேசுவுடன் தங்க முடிவெடுத்தனர். அந்த முடிவு, கொடூரமான மரணம்வரை அவர்களை அழைத்துச் சென்றபோதும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததால், சக்திமிகுந்த சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.

இயேசுவை நம்பி தங்கள் வாழ்வையே தகனமாக்கிய சீடர்களைப் பின்பற்றி, கோடான கோடி பெண்களும், ஆண்களும் தங்களுக்காகவும், தங்களைச் சார்ந்தோருக்காகவும் நல்ல முடிவுகள் எடுத்துள்ளதை, கிறிஸ்தவ வரலாறு தொடர்ந்து நமக்கு உணர்த்திவருகிறது. இந்த வரிசையில், நல்ல முடிவுகளை எடுத்து, தன் வாழ்வை தகனப்பலியாக்கி, இவ்வுலகிலிருந்து அண்மையில் விடைபெற்றவர், அருள்பணி ஸ்டான் சுவாமி.

தங்கள் சொந்த வாழ்வில் பெரும் துயரங்களைச் சந்தித்தாலும், அத்துயரங்களின் பாரத்தால் நொறுங்கிப் போகாமல், அத்துயரங்களை மற்றவர்கள் அடையக்கூடாது என்ற மேலான எண்ணத்துடன், ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்து, அவற்றிற்கு செயல்வடிவம் கொடுத்த அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற உன்னத உள்ளங்களுக்காக இறைவனுக்கு இன்று நன்றி செலுத்துவோம். இவர்கள் உள்ளத்தில் தோன்றிய அந்த உறுதியில், ஒரு சிறிதளவாகிலும், நம் உள்ளத்திலும் தோன்ற, இறைவனை இறைஞ்சுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல, அருள்பணி ஸ்டான் சுவாமியைப் போல, இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து, நம் வாழ்வின் முடிவுகள் அமைய, இறையருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2021, 14:08