படைப்பின் காலம் - செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய - கோப்புப் படம் 2020  படைப்பின் காலம் - செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய - கோப்புப் படம் 2020  

காலநிலை மாற்றம் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது

அனைவருக்கும் ஓர் இல்லம், கடவுளின் இல்லத்தைப் புதுப்பித்தல் என்ற தலைப்பில், இவ்வாண்டு செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய படைப்பின் காலம் சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றம், எல்லா நாடுகளுக்கும் பொதுவானதாகவும், அது எல்லைக் கட்டுப்பாடின்றி எல்லாப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது என்றும், ஆஸ்ட்ரிய ஆயர் பேரவையின் சுற்றுச்சூழல் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Alois Schwarz அவர்கள், துவங்கவிருக்கும் படைப்பின் காலத்தை முன்னிட்டு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 1, வருகிற புதன்கிழமையன்று துவங்கும் படைப்பின் காலத்தை முன்னிட்டு, ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு மனிதரும், வாழ்கின்ற முறையில், பல்வேறு வழிகளில் மாற்றங்களைக் கொணர உள்ள வாய்ப்புக்களை நடைமுறைப்படுத்தினால், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உதவமுடியும் என்று ஆயர் Schwarz அவர்கள் கூறினார்.

சிறிய மற்றும், பெரிய அளிவில் ஆஸ்ட்ரியா நாடு, காலநிலை மாற்றத்தின் தீமைகளைச் சந்தித்துவருகின்றது என்றும், மக்களின் நுகர்வுத்தன்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டியது முக்கியம் என்றும், ஆயர் Alois Schwarz அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தென்னாப்ரிக்கத் திருஅவை, படைப்பின் காலத்தைக் கடைப்பிடிக்கும் முறைகள் பற்றி விளக்கியுள்ள, அந்நாட்டு Marianhill அப்போஸ்தலிக்க நிர்வாகி, பேராயர் William Slattery, அவர்கள், காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைவருக்கும் ஓர் இல்லம், கடவுளின் இல்லத்தைப் புதுப்பித்தல் என்ற தலைப்பில், இவ்வாண்டு செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய சிறப்பிக்கப்படும் படைப்பின் காலம், கடவுளின் பிள்ளைகள் அனைவருக்கும், படைப்பு, பொதுவான ஓர் இல்லமாக மாறுவதற்கு அனைவரும் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது என்று, பேராயர் William Slattery அவர்கள் கூறியுள்ளார். 

படைப்பின் காலம்

ஆர்த்தடாக்ஸ் திருஅவை, செப்டம்பர் முதல் தேதியை, தன் வழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகச் சிறப்பித்து வந்தவேளையில், 1989ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை முதலாம் Dimitrios அவர்கள், இந்த முதல் நாளை, படைப்பின் பாதுகாப்பு இறைவேண்டல் நாளாக கடைபிடிக்கும் மரபைத் துவக்கிவைத்தார்.

ஆர்த்தடாக்ஸ் சபைகள், காட்டும் நல்வழியைப் பின்பற்றி, அதே செப்டம்பர் முதல் நாளன்று, கத்தோலிக்கத் திருஅவையும் படைப்பின் பாதுகாப்பு உலக செபநாளை கடைபிடிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்று, கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த உலக நாள் கத்தோலிக்க மக்களால் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2021, 14:55