வியட்நாமின் Hanoi நகரில் பெருந்தொற்றைத் தடுக்க மருத்துவப் பணியாளர்கள் வியட்நாமின் Hanoi நகரில் பெருந்தொற்றைத் தடுக்க மருத்துவப் பணியாளர்கள் 

மதங்கள் ஆற்றும் மக்கள் சேவையை பாராட்டும் கம்யூனிச அரசு

வியட்நாமில் கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள Dong Nai மாவட்டத்தின் பொது மருத்துவமனைகளுக்கென ஆறு செயற்கை சுவாசக் கருவிகளை Xuan Loc மறைமாவட்டம் வழங்கியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், வியட்நாம் நாட்டின் மத அமைப்புக்கள் ஆற்றியுள்ள பணியை பாராட்டியுள்ளது வியட்நாம் அரசு.

வியட்நாம் கம்யூனிச அரசின் 'தந்தைநாடு முன்னணி' என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில மாவட்டங்களில் புதிய வகை டெல்டா கொரோனா தொற்று பரவாமல் தடுத்ததில், மத அமைப்புக்களின் பணி பாராட்டப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.

அரசின் தடுப்பூசித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்தது, தங்கள் மருத்துவ மையங்களை தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்கென வழங்கியது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கியது, தங்கள் அங்கத்தினர்களை சுயவிருப்பப் பணியாளர்களாக செயல்பட ஊக்கமூட்டி அனுப்பியது போன்றவைகள் வழியாக, இந்த துயரமான காலத்தில் வியட்நாமின் மதங்கள் சிறப்புப் பங்காற்றியுள்ளன என பாராட்டியுள்ளது அந்நாட்டின் கம்யூனிச அரசு.

இதற்கிடையே, தற்காலிக மருத்துவமனைகளில் சேவையாற்ற 102 அருள்பணியாளர்கள், அருள்பணித்துவ பயிற்சிபெறும் மாணவர்கள், துறவறத்தாரை உள்ளடக்கிய குழு ஒன்றை தன் மறைமாவட்டம் தயாரித்து அனுப்பியுள்ளதாக Xuan Loc மறைமாவட்ட ஆயர் John Do Van Ngan அவர்கள் தெரிவித்தார்.

வியட்நாமில் அதிக கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள இம்மறைமாவட்டம், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஏறக்குறைய 100 சுயவிருப்பப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, கொரோனா தொற்று நோயாளிகளிடையே மருத்துவமனைகளில் பணிபுரிய அனுப்பிவருகிறது.

இக்குழுக்கள் இரண்டு வாரங்கள் சேவையாற்றியபின், கத்தோலிக்க மையங்களில் சில நாட்கள் தங்களை தனிமைப்படுத்தியபின், சமுதாயத்தில் தங்கள் பணிகளைத் தொடர்வர்.

வியட்நாமில், கொரோனா தொற்றால், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள Dong Nai மாவட்டத்தின் பொது மருத்துவமனைகளுக்கென ஆறு செயற்கை சுவாசக் கருவிகளையும் Xuan Loc மறைமாவட்டம் வழங்கியுள்ளதாக அறிவித்தார் ஆயர் Ngan.

அவசர தொலைபேசித் திட்டம் ஒன்றை உருவாக்கி, 22 அருள்பணியாளர்கள், மற்றும் அருள்சகோதரிகள் அடங்கிய குழு ஒன்று, உதவி தேவைப்படும் மக்களுக்கு மருந்து, மற்றும் ஆன்மீக ஆலோசனைகளை தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை வழங்கி வருவதாகவும் ஆயர் Ngan அவர்கள் கூறினார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2021, 14:05