ஆப்கானிஸ்தானில் பதட்ட நிலைகள் ஆப்கானிஸ்தானில் பதட்ட நிலைகள்  

ஆப்கான் புலம்பெயர்ந்தோருடன் கத்தோலிக்க மையங்களின் பணி

ஆப்கானின் இந்நெருக்கடி நேரத்தில், ஆப்கான் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் அனைத்துலக சமுதாயத்தின் கடமையை வலியுறுத்தியுள்ளது, Astalli இயேசு சபை மையம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் வாழும் அனைத்து ஆப்கான் புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாட்டை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, இயேசு சபையினரின் Astalli  மையம்.

ஆபிகானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி, நாட்டில் பெரும் நெருக்கடி அதிகரித்துள்ள இவ்வேளையில், தாங்கள் கடந்த பல ஆண்டுகளாக வரவேற்று உதவி வரும், ஆப்கானிலிருந்து புலம்பெயர்ந்த இளையோருடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது, உரோம் நகரில் இயங்கும் Astalli மையம்.

ஆப்கானில் வாழும் தங்கள் உறவினர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இத்தாலி வாழ் ஆப்கான் புலம்பெயர்ந்தோருடன் இவ்வேளையில் மிக நெருக்கமாக இருக்க விரும்புவதாகக் கூறும் Astalli இயேசு சபை மையம், ஆப்கான் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதில் அனைத்துலக சமுதாயத்தின் கடமையை வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து, கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தில் தாங்களும் இணைவதாக, ஏழைகளிடையே பணியாற்றிவரும் புனித திருத்தந்தை 23ம் யோவான் அமைப்பு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் மனிதகுல நெருக்கடி அதிகரித்துள்ள இவ்வேளையில், ஆப்கான் மக்களை உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் மையங்களுக்கு வரவேற்பதாக உரைத்த இவ்வமைப்பின் தலைவர் Giovanni Paolo Ramonda அவர்கள், அவர்களுக்கு பாதுகாப்பையும், நிலையான வாழ்வு குறித்த உறுதியையும், ஆறுதலையும் தரவேண்டியது தங்கள் கடமை என உரைத்தார்.

ஐரோப்பிய சமுதாயம், ஆப்கானிலிருந்து புலம்பெயர்ந்தோரை வரவேற்பதோடு, அடைக்கலம் தேடும் அவர்களை தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற்ற முயலும் சில அரசுகளின் முயற்சிகளை எதிர்க்கவேண்டும் என விண்ணப்பிக்கும் இந்த அமைப்பு, வன்முறைகளின் வழி வெற்றிகாண முயலும் முறைகளை எதிர்க்க முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2021, 14:41