புனித திருத்தந்தை 9ம் லியோ புனித திருத்தந்தை 9ம் லியோ 

திருத்தந்தையர் வரலாறு – போர்வீரரான புனித திருத்தந்தை

இடம் பிடிப்பதற்கோ, பொருள் திரட்டவோ அல்ல, மாறாக, தென் இத்தாலி மக்களை விடுவிக்க, போர் நடத்திய புனிதர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1049ம் ஆண்டு உரோமை நகர் பொதுமக்கள் அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் பிப்ரவரி மாதம் 12ம் தேதி பதவியேற்ற திருத்தந்தை ஒன்பதாம் லியோ, இரண்டே மாதங்களில், அதாவது ஏப்ரல் மாதத்திலேயே ஆயர் பேரவையைக் கூட்டினார். இப்புனித திருத்தந்தை, முதலில் இந்த ஆயர் பேரவையில் திருஅவைக்குள் நிதி முறைகேடுகள் குறித்தும், சில திருஅவை அதிகாரிகளின் சிற்றின்ப ஆசைகள் குறித்தும், வன்மையாகக் கண்டித்தார். மே மாதமே Pavia நகர் சென்று அங்கேயும் சீர்திருத்தங்களுக்கென, அவை ஒன்றைக் கூட்டினார். பின்னர் ஜெர்மனி சென்று தலத்திருஅவையில் சில மாற்றங்களைக் கொணர்ந்தார். அங்கிருந்து பிரான்ஸ் செல்ல விரும்பியபோது, பிரான்ஸ் மன்னர் முதலாம் Henry தடைவிதிக்க முனைந்தார். ஆனால் மன்னரின் தடைகளையும் தாண்டி Reims சென்ற திருத்தந்தை ஒன்பதாம் லியோ, அத்திருஅவையிலும் பல சீர்திருத்தங்களைப் புகுத்தினார். சென்றவிடமெல்லாம் அப்புனித திருத்தந்தையைக் காண எண்ணற்ற மக்கள் கூடினர். இவர் Reimsல் கூட்டிய ஆயர் பேரவைக் கூட்டத்தில் இங்கிலாந்தின் ஆயர்களும் வந்து கலந்துகொண்டனர். இவர் காலத்தில்தான் ஐஸ்லாந்தின் குடிமகன் ஒருவர் முதன் முதலாக அங்கு ஆயராக நியமிக்கப்பட்டார். 1049ம் ஆண்டு மே மாதம் துவக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு 1050ம் ஆண்டு சனவரியில் உரோம் நகர் திரும்பினார் திருத்தந்தை 9ம் லியோ.

உரோம் நகர் திரும்பிய பின்னரும் திருத்தந்தை ஒன்பதாம் லியோவால் ஓய்வெடுக்க முடியவில்லை. தென் இத்தாலிய மக்கள் Norman படையால் அடக்கி ஒடுக்கப்படுவதைக் கேள்வியுற்று, உடனே அங்குச் சென்றார். நார்மனியர்களோ, இத்தாலிய மக்களை கொடுமைப்படுத்துவதில்லை என திருத்தந்தைக்கு வாக்களித்தனர். ஆனால் திருத்தந்தை உரோம் நகருக்குத் திரும்பியபின்னர், தங்கள் அடக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர், பிரான்சைச் சேர்ந்த இந்த நார்மானியர்கள். இடையில், Hungary  மக்களுக்காக பேரரசரிடம் பரிந்து பேச, இன்னொரு பயணமும் இவர் மேற்கொள்ள வேண்டியதாகியது. அந்த பயணம் நினைத்த அளவு வெற்றி கொடுக்கவில்லையெனினும், நார்மானியர்கள் கையில் துன்புறும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மனவுறுத்தல் திருத்தந்தைக்கு இருந்து கொண்டேயிருந்தது. பேரரசரின் உதவியும் கிட்டவில்லை. ஆகவே, அரச குடும்பத்தைச் சேர்ந்த தன் உறவினர்களின் வழி ஜெர்மானியர்களைக் கொண்ட சிறு படை ஒன்றைத் திரட்டினார். இதனுடன், சில இத்தாலிய இளவரசர்களிடமும் பேசி ஒரு சிறு படையும் பெற்றார். இப்படையுடன் நார்மானியர்களை விரட்டி அடிக்கச் சென்றபோது, கிரேக்க படைத்தளபதியின் உதவியையும் வேண்டிப் பெற்றார் திருத்தந்தை 9ம் லியோ. இடம் பிடிப்பதற்கோ, பொருள் திரட்டவோ, யாரையும் தோற்கடிக்கவோ படை நடத்திச் செல்லவில்லை இத்திருத்தந்தை. மாறாக, தென் இத்தாலி மக்களை விடுவிக்கவே அவர் சென்றார். ஆனால், முதலில் கிரேக்க படைத் தளபதியைத் தோற்கடித்த நார்மானியர்கள், திருத்தந்தையின் படையையும் வீழ்த்தினர். திருத்தந்தையோ தன்னை நார்மானியர்களிடம் சிறைக்கைதியாக ஒப்படைத்தார். ஆனால் இங்குதான் எதிர்பாராத ஒரு திருப்பம் நடந்தது.

இது எதிர்பாராத திருப்பம்தான். யாரும் இப்படியொரு திருப்பத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை. அதாவது, திருத்தந்தையின் படையைத் தோற்கடித்த நார்மானியப் படைவீரர்கள், திருத்தந்தையை மிகுந்த மரியாதையுடன் நடத்தியதுடன், தங்களை திருத்தந்தையின் படை வீரர்களாக அறிவித்துக் கொண்டனர். திருத்தந்தை இப்போரில் வெற்றி பெற்றிருந்தால் என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட அவர் தோல்வியுற்றதால் அதிகம் கிடைத்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரை வெல்வதற்காக வந்தாரோ, அப்படையே இவரின் தலைமையின்கீழ் தாங்களே முன்வந்து அடைக்கலம் புகுந்தது, எதிர்பாராத வெற்றி. இருப்பினும், Civitella என்ற இடத்தில் நடந்த போரையும் உயிரிழப்புக்களையும் இவரால் மறக்க முடியவில்லை. இதனால் திருத்தந்தை ஒன்பதாம் லியோ அவர்கள், மிகவும் கவலையுற்றார். இதற்கிடையில், Constntinople முதுபெரும்தந்தை Michael Caerularius, திருத்தந்தையையோ, மன்னரையோ, தன் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தார். இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையை வன்மையாக எதிர்த்தார். அதற்கு அவர் கூறிய காரணம் என்னவெனில், இலத்தீன் முறை வழிபாட்டில் புளிக்காத மாவால் செய்யப்பட்ட அப்பத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதே. இதனால் Constantinopleல் உள்ள அனைத்து இலத்தீன் வழிபாட்டுமுறை கோவில்களையும், அதாவது, திருத்தந்தையின்கீழ் உள்ள அனைத்துக் கோவில்களையும் மூடிவிட்டார் முதுபெரும்தந்தை Michael Caerularius. திருத்தந்தையும் இதனைக் கண்டித்து அப்பேராயருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். எத்தனையோ பேர் ஆலோசனை கூறினாலும், நம் திருத்தந்தை ஒன்பதாம் லியோ பிரச்சனையை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பியதால், கிரேக்க மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். இங்கும் எதிர்பாராத மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இந்த எதிர்பாராத மாற்றம் குறித்துக் கொஞ்சம் நோக்குவோம்.

தென் இத்தாலியில் ஆக்கிரமிப்பைக் கொண்டிருந்த கிரேக்கப் படையினர், நார்மானியர்களால் தோற்கடிக்கப்பட்டது குறித்து இன்று நோக்கினோம். இந்த நிலையில், இத்தாலியில் கிரேக்கர்களின் பிடி தளர்ந்து வருவதை உணர்ந்த மன்னர் Constantine,  தன் படையை வலிமையாக்கிக் கொள்ள விரும்பி, திருத்தந்தையை ஆதரிக்க முன்வந்தார். ஆகவே, தன் நாட்டில் தன் கீழுள்ள Constantinople முதுபெரும்தந்தை Michael அவர்களிடம், திருத்தந்தையை மதித்து நடத்தவேண்டும் என கட்டளையிட்டார். இதனால் ஒருவித இணக்கத்துடன் மன்னரும், முதுபெரும்தந்தையும் திருத்தந்தைக்கு கடிதங்களை எழுதினர். புனிதரும் நல்ல அறிவாளியுமாகிய திருத்தந்தை ஒன்பதாம் லியோ, சரியான  பதில்களுடன் 1054ம் ஆண்டு சனவரியில் Humbert, Frederick  என்ற  புகழ்வாய்ந்த இரு கர்தினால்களை Constantinopleக்கு அனுப்பினார். ஆனால், இக்கர்தினால்கள் அங்குச் சென்று தன் செய்தியை வழங்கியபோது என்ன பதில் கிட்டியது என்பதை அறியும் முன்னரே திருத்தந்தை 9ம் லியோவின் உயிர் 1054ம் ஆண்டு ஏப்ரல் 19ல் பிரிந்தது. இவரின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரால் அனுப்பப்பட்ட கர்தினால்கள் இருவரும் 1054ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி முதுபெரும்தந்தை Michael Caerulariusஐ திருஅவையிலிருந்து விலக்கி வைத்தனர். இதனால் கீழை வழிபாட்டுமுறை திருஅவை முற்றிலுமாக கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து விலகி தனிப்பிரிவானது.

ஷேக்ஸ்பியர் எழுதிய மேக்பத் வரலாற்று நாடகம் குறித்து அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். Duncanஐ கொன்றதாக நம்பப்படும் மன்னர் Macbeth, இத்திருத்தந்தை ஒன்பதாம் லியோவின் காலத்தில் உரோம் நகர் வந்து திருத்தந்தையை சந்தித்தார் என நம்பப்படுகிறது. நம் இத்திருத்தந்தை 9ம் லியோவின் மரணத்திற்குப்பின் திருஅவையை வழிநடத்தும் பொறுப்பேற்றார் திருத்தந்தை இரண்டாம் விக்டர். இவர் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2021, 12:55