புனிதரான திருத்தந்தை ஒன்பதாம் லியோ புனிதரான திருத்தந்தை ஒன்பதாம் லியோ 

திருத்தந்தையர் வரலாறு – புனித திருத்தந்தை ஒன்பதாம் லியோ

உரோம் நகருக்கு செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் வந்த லியோ, ஒரு சாதாரண திருப்பயணிபோல் எளிய உடை அணிந்து உரோமை மக்கள் முன் நின்று, அவர்களின் இசைவைக் கேட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை 9ம் லியோ, 1049ம் ஆண்டு, திருஅவையை வழிநடத்த தேந்தெடுக்கப்பட்டார். இவர், திருஅவையின் 152வது திருத்தந்தை. இத்திருத்தந்தை ஒரு புனிதர். திருஅவை வரலாற்றில், 109வது திருத்தந்தை மூன்றாம் ஏட்ரியனுக்குப்பின், 40 திருத்தந்தையர்களைத் தாண்டி, இத்திருத்தந்தையே, புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். 885ம் ஆண்டுக்குப்பின், 1049ம் ஆண்டு, அதாவது, 64 ஆண்டுகள், திருஅவையை வழிநடத்திய 40 திருத்தந்தையர்களும், புனிதர்களாக அறிவிக்கப்படாத நிலையில், அவர்களைத் தொடர்நது வந்த திருத்தந்தை 9ம் லியோ அவர்கள், புனிதரென அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் குடும்ப அங்கத்தினர்கள், அரசர்களாகவும், புனிதர்களாகவும் ஆகியுள்ளனர். இவர், இளம்வயதிலேயே மிகுந்த அறிவாளியாக இருந்தார். இவரைக் குறித்து நிறையக் கதைகள் உள்ளன. இளம் வயதிலேயே படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு, ஒருமுறை இவரின் தாய் ஓர் அழகான புத்தகத்தை வாங்கி பரிசளிக்க, அதிலிருந்து, எப்புத்தகத்தையும் இவரால் வாசிக்கமுடியவில்லை. காரணம் யாருக்கும் புரியவில்லை. ஆனால், பின்னர்தான் தெரிந்தது, அவரது தாய் பரிசளித்த அப்புத்தகம், ஒரு துறவுமடத்திலிருந்து யாராலோ திருடப்பட்டு, இவர் தாய்க்கு விற்கப்பட்ட புத்தகம் என்று. அப்புத்தகத்தை, உடைமையாளரிடம் ஒப்படைத்தபின், ஒன்பதாம் லியோவால் தெளிவாக எதையும் வாசிக்க முடிந்ததாம்.

இன்னொரு நிகழ்வையும் இவர் வாழ்வில் குறிப்பிடுகிறார்கள். ஒருநாள் இரவில், இவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இவரைத் தாக்கி மிகவும் காயப்படுத்தியது. பல நாட்கள் இவர் இதனால், படுக்கையிலேயே மரணப் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. இவ்வேளையில், புனித பெனடிக்ட் இவருக்கு காட்சி கொடுத்து, இவர் காயங்களை சிலுவையால் தொட்டு குணப்படுத்தினார். இந்நிகழ்வு புனித ஒன்பதாம் லியோவாலேயே அவரின் நண்பர்களிடம் பிற்காலத்தில் சொல்லப்பட்டது. 1024ல், அதாவது, நம் திருத்தந்தை ஒன்பதாம் லியோவுக்கு 22 வயது இருக்கும்போது, அவரின் நெருங்கிய உறவினரான Conrad பேரரசரானார். ஏனைய உறவினர்கள் லியோவை அரசவையில் அருள்பணியாளராகப் பணிபுரிய அனுப்பிவைத்தனர். ஆனால் Toul நகர ஆயர் இறந்தபோது, அப்பதவி லியோவைத் தேடிவந்தது. ஆனால் லியோவுக்கு அதைவிட பெரும் பதவிகள் கொடுக்க விரும்பிய பேரரசர், Toul நகர ஆயர் பதவியை ஏற்கவேண்டாம் என Bruno என்ற இயற்பெயருடைய லியோவைக் கேட்டுக்கொண்டார். சாதாரணப்  பணிகளையே விரும்பிய லியோவோ, பகட்டான பெரும்பதவிகளைவிட, எளிமையுடன் அப்பதவியை ஏற்றுக்கொண்டு 20 ஆண்டுகளுக்குமேல் அங்கு சேவையாற்றினார். இத்திருத்தந்தை, இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராயிருந்தார்.

இவ்வேளையில் 1048ம்ஆண்டு ஜெர்மன் திருத்தந்தை இரண்டாம் தமாசுஸ் இறைபதம் அடைய, உரோமைய மக்களோ Conradக்குப்பின் வந்த பேரரசர் மூன்றாம் ஹென்றியிடம் ஆலோசனை கேட்டுவந்தனர். அவர்கள் லியோவையே தங்களுக்கு திருத்தந்தையாகத் தரும்படி பரிந்துரைக்க, பேரரசரும் இசைவளித்தார். ஆனால் லியோவோ, அப்பொறுப்பை ஏற்கமறுத்தார். ஜெர்மானியர்களும், உரோமையர்களும், பேரரசரும் கட்டாயப்படுத்தியதால், திருத்தந்தையாக பொறுப்பேற்க லியோ சம்மதித்தார். ஆனால், உரோமையர்கள் அனைவரும் சம்மதித்தால் மட்டுமே, தான் இப்பதவியை ஏற்பேன் என்ற நிபந்தனையையும் விதித்தார். உரோம் நகருக்கு செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் வந்த லியோ, ஒரு சாதாரண திருப்பயணிபோல் எளிய உடை அணிந்து உரோமை மக்கள் முன் நின்று, அவர்களின் இசைவைக் கேட்டார். மக்கள் அனைவரும் ஒரேகுரலில், அவரே தங்கள் திருத்தந்தை எனக்கூற, அவர் அப்பொறுப்பைக் கட்டாயமாக ஏற்கவேண்டியதாகியது. ஆகவே, 1049ம் ஆண்டு, பிப்ரவரி 12ந் தேதி, ஒன்பதாம் லியோ அவர்கள், திருத்தந்தையாக பொறுப்பேற்றார்.

இவருக்கு முன்னால் இரண்டு கடமைகள் முதலில் நின்றன. முதலில், முன்னாள் திருத்தந்தை 9ம் பெனடிக்டின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை ஒடுக்குவது, இரண்டாவது, திருப்பீடத்தின் பொருளாதார நிலைகளைச் சீர்படுத்துவது.

அன்பு நெஞ்சங்களே! புனிதரான நம் திருத்தந்தை ஒன்பதாம் லியோ, இவ்விரண்டு நோக்கங்களிலும், குறிப்பாக, திருஅவையை சீரமைக்கும் முயற்சிகளில், எவ்வளவு தூரம் வெற்றிகண்டார் என்பதை, வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2021, 14:45