பிலிப்பீன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிலுவைப்பாதை - கோப்புப் படம் பிலிப்பீன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிலுவைப்பாதை - கோப்புப் படம் 

கோவிட் -19 ஒழிய 40 நாள்கள், உண்ணாநோன்பு தவம்

நவம்பர் 21ம் நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று இடம்பெறும் தவப்பயணத்தோடு 40 நாள், இறைவேண்டல், நோன்பு மற்றும், தவம் ஆகிய பக்திமுயற்சிகள் முடிவடையும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று ஒழிய, நாற்பது நாள்கள், உண்ணாநோன்பு தவம் இறைவேண்டல் ஆகிய பக்திமுயற்சிகளை அறிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

கோவிட்-19 பெருந்தொற்று ஒழிய, இவ்வாண்டு அக்டோபர் 13ம் தேதி முதல், நவம்பர் 21ம் தேதி வரை, பிலிப்பீன்ஸ் நாட்டின் Zamboanga உயர்மறைமாவட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஆன்மீக நடவடிக்கைக்கு, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Zamboanga உயர்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Moises Cuevas அவர்கள் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், இப்பெருந்தொற்றால் துன்புறுவோருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, 40 நாள்கள், நோன்பு மற்றும், தவ முயற்சிகளில் ஈடுபடுமாறு, கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயேசு பாலைநிலத்தில் 40 நாள்கள் நோன்பிருந்ததை நினைவுபடுத்தியுள்ள ஆயர் Cuevas அவர்கள், வருகிற அக்டோபர் 13ம் தேதி, இரவு 8 மணிக்கு அனைத்து ஆலய மணிகளும் ஒலிக்கப்படும், அதைத் தொடர்ந்து செபமாலை பக்திமுயற்சி செபிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தவ முயற்சிகளுக்குத் தயாரிப்பாக மறைக்கல்விகள் நடத்தப்படும், ஒப்புரவு அருள்சாதனங்களைப் பெற வாய்ப்புகள் வழங்கப்படும் என்றுரைத்துள்ள ஆயர் Cuevas அவர்கள், நவம்பர் 21ம் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று இடம்பெறும் தவப்பயணத்தோடு, 40 நாள், இறைவேண்டல், நோன்பு மற்றும், தவம் ஆகிய பக்திமுயற்சிகள் முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பீன்ஸில் இவ்வாரத்தில் 16,313 பேர், கோவிட்-19 பெருந்தொற்றால் புதிதாக தாக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்நாட்டில், இந்நோயால், 18,99,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2021, 14:50