படைப்பின் கொடையாக விளங்கும் குறிஞ்சி மலர்கள் படைப்பின் கொடையாக விளங்கும் குறிஞ்சி மலர்கள் 

படைப்பின் காலம் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்களின் அழைப்பு

இவ்வாண்டு, செப்டம்பர் 1ம் தேதி துவங்கும் படைப்பின் காலத்தை, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் பொருளுள்ள முறையில் கடைபிடிக்கும்படியாக, அந்நாட்டு ஆயர் பேரவை அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தின் ஆபத்தான தாக்கங்களைக் குறித்து, அண்மையில் ஐ.நா. அவை வெளியிட்ட எச்சரிக்கைகள் நிறைந்த அறிக்கையை மனதில்கொண்டு, இவ்வாண்டு, செப்டம்பர் 1ம் தேதி துவங்கும் படைப்பின் காலத்தை, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் பொருளுள்ள முறையில் கடைபிடிக்கும்படியாக, அந்நாட்டு ஆயர் பேரவை அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

ஆயர் பேரவை சார்பில், ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று மடல் ஒன்றை அனுப்பியுள்ள, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Romulo Valles அவர்கள், அண்மையில் வெளியான ஐ.நா. அறிக்கை, நம் அனைவரையும் விழித்தெழச் செய்துள்ளது என்றும், மனிதர்களின் அக்கறையற்ற நடவடிக்கையால், இந்த பூமிக்கோளம் மீளமுடியாத அளவு சிதைந்து வருகிறது என்றும், கூறினார்.

செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் படைப்பின் காலம் என்ற முயற்சியில் அனைத்து கிறிஸ்தவர்களும் கலந்துகொள்ளுமாறும், படைப்பைக் காப்பாற்றும்படி உலகத் தலைவர்களுக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் அனுப்பவிருக்கும் ஒரு விண்ணப்பத்தில், அனைத்து கிறிஸ்தவர்களும் கையொப்பமிடுமாறும், அழைப்பு விடப்பட்டுள்ளது.

"அனைவருக்கும் உரித்தான ஓர் இல்லமா? கடவுளின் இல்லத்தைப் புதுப்பிக்க" என்ற மையக்கருத்துடன், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, 2021ம் ஆண்டு படைப்பின் காலத்தை சிறப்பிக்கவிருப்பதாகவும், படைப்பின் காலம் அக்டோபர் 4ம் தேதி நிறைவடைவதற்குப்பதில், அக்டோபர் இரண்டாவது ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் பழங்குடியின மக்களின் ஞாயிறோடு நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்த்தடாக்ஸ் திருஅவை, செப்டம்பர் முதல் தேதியை, தன் வழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகச் சிறப்பித்து வந்தவேளையில், 1989ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை முதலாம் Dimitrios அவர்கள், இந்த முதல் நாளை, படைப்பின் பாதுகாப்பு இறைவேண்டல் நாளாக கடைபிடிக்கும் மரபைத் துவக்கி வைத்தார்.

ஆர்த்தடாக்ஸ் சபைகள், காட்டும் நல்வழியைப் பின்பற்றி, அதே செப்டம்பர் முதல் நாளன்று, கத்தோலிக்கத் திருஅவையும் படைப்பின் பாதுகாப்பு உலக செபநாளை கடைபிடிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்று, கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த உலக நாள் கத்தோலிக்க மக்களால் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2021, 14:54