நைஜீரியாவில் அமைதி நிலவ ஒரு வார செபம், நோன்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வட மாநிலங்கள் மற்றும், நாடெங்கும் இடம்பெறும் ஆள்கடத்தல்கள், கொள்ளைக்கும்பலின் எழுச்சி, மற்றும், இவை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதுகுறித்து அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சூழல்களை எதிர்கொள்ளும் நைஜீரியா நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்பதற்காக, கதுனா மாநிலத்தின் அனைத்து கத்தோலிக்கரும், ஆகஸ்ட் 15, ஞாயிறு முதல், 22 வருகிற ஞாயிறு வரை, ஒரு வார இறைவேண்டல், மற்றும், நோன்பு பக்திமுயற்சிகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
‘எங்களது நம்பிக்கை எங்களை ஏமாற்றியதில்லை’ என்ற தலைப்பில், மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், வட மாநில ஆளுனர்கள், ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சாதமாகக் கொள்கைகள், மற்றும், திட்டங்களை அமைக்க முயற்சிப்பது, குற்றவாளிகளை ஊக்கப்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நைஜீரியாவில் இப்போது இடம்பெற்றுவரும் கொடூரமான செயல்களும், அழிவுகளும், இரத்தம் சிந்தல்களும், அந்நாட்டில், உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தைத் தவிர, ஒருபோதும் அந்நாடு எதிர்கொண்டதில்லை என்று, கதுனா மாநில ஆயர்கள் கூறியுள்ளனர்.
நைஜீரியாவில், மனிதவாழ்வு இவ்வளவு கீழ்த்தரமாக ஒருபோதும் நோக்கப்பட்டது கிடையாது என்றுரைத்துள்ள ஆயர்கள், கடத்தல்கார்கள், விலங்கு மேய்ப்பவர்கள், கொள்ளைக்கும்பல், பயங்கரவாதக் குழுக்கள் ஆகியோர் நடத்தும் மனிதக் கொலைகள், உலகில், பயங்கரவாதம் அதிகமாக இடம்பெறும் நாடாக, நைஜீரியாவை அமைத்துள்ளது என்று கவலை தெரிவித்துள்ளனர். (Agencies)