கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு 

படைப்பிற்கான அர்ப்பணத்தை வெளியிடும் செபநாள்

இயற்கையைப் பாதுகாத்து, மதிக்கவேண்டிய பணியில் இறையியல் கருத்துக்களோடும், அறிவியல் கண்டுபிடிப்புக்களோடும் கைகோர்த்து நடக்க வேண்டிய அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றங்களாலும், உலகம் முழுவதும் அழிவுதரும் பெருவெள்ளம் மற்றும், தீ விபத்துக்களின் காரணத்தாலும், கொரோனா பெருந்தொற்றின் சமுதாய, மற்றும் பொருளாதார விளைவுகளாலும், இந்த ஆண்டும், பூமி தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது என, தன் அறிக்கையில் கூறியுள்ளார், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு.

இறைவனின் படைப்பைப் பேணிக்காக்கும் அக்கறையை வெளிப்படுத்தும், இறைவேண்டல் நாள், செப்டம்பர் மாதம் முதல் தேதி, இப்புதனன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, செய்தியொன்றை வெளியிட்டுள்ள கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், அண்மைக் காலங்களில் நச்சு வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகள், பருவ நிலை மாற்றங்களுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் போன்றவைகள் மீது, தீவிரக் கட்டுப்பாடுகளைக் கொணர்ந்துள்ளது, உலகில் அனைத்து நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது, என தன் செய்தியில் கூறியுள்ளார்.

இயற்கையான சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து மதிக்கவேண்டிய பணியில் இறையியல் கருத்துக்களோடும், அறிவியல் கண்டுபிடிப்புக்களோடும் கைகோர்த்து நடக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு.

தற்போதைய கொரோனா காலத்திற்கு முன்பிருந்த பொருளாதாரப் போட்டிகளும், அதற்கான இயற்கை வளச் சுரண்டல்களும் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக  உலகத் தலைவர்களின் மனநிலை மாற்றத்திற்காக இறைவனை வேண்டுவோம் என்ற அழைப்பையும் விடுத்துள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தை குறைவாக மதிப்பிடும் கருத்துக்களும், தடுப்பூசிகளுக்கு சிலரின் எதிர்ப்புக்களும் களையப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ளார்.

பருவநிலை மாற்றங்களின் பாதிப்புக்கள் குறித்த தவறான கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றன என தன் செய்தியில் கூறும் முதுபெரும்தந்தை, உண்மை நிலைகளை உணர்ந்து, பொறுப்புணர்வுடனும், ஒத்துழைப்பு மனப்பான்மையுடனும், பொதுக்கனவுகளுடனும் உழைக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

நமக்கு அடுத்திருப்பவரின் துயர் நிலைகள் குறித்து அக்கறையின்றிச் செயல்படுவதும், இறைவன் படைத்த இயற்கையை அழிவுக்குள்ளாக்குவதும், இறைவனுக்கு எதிராக நாம் செயல்படுவதற்குச் சமமாகும் எனவும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு.

கொரோனா பெருந்தொற்றால் உலகம் துயர்களை அடைந்துவரும் இன்றையக் காலக்கட்டத்தில், தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்குப் பகிரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயுவின் செய்தி, இயற்கையைப்  பராமரித்து, பாதுகாத்து, அதனை அன்புகூர்வதன் வழியாகவே, படைப்புகளுக்காக, இறைவனுக்கு நாம் நன்றிகூற முடியும் என மேலும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2021, 11:33