இந்தோனேசியா கர்தினால் Ignatius Suharyo இந்தோனேசியா கர்தினால் Ignatius Suharyo 

பங்குத்தள கோவில் கட்ட 31 ஆண்டுகளுக்குப்பின் அரசு அனுமதி

1990ம் ஆண்டு ஜகார்த்தாவின் பேராயர் Leo Sukoto அவர்களால் புனித பெர்னதெத் பெயரில் உருவாக்கப்பட்ட பங்குதளத்திற்குரிய ஆலயத்தை எழுப்ப, அந்நாட்டு அரசு, 31 ஆண்டுகளுக்குப்பின், அனுமதி அளித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில் பங்குகோவில் கட்டுவதற்குத் தேவையான உரிமையை, 31 ஆண்டு போராட்டத்திற்குப்பின் தற்போது பெற்றுள்ளது, அந்நாட்டின் Tangerang நகர் பங்குத்தளம்.

1990ம் ஆண்டு ஜகார்த்தாவின் இயேசு சபை பேராயர் Leo Sukoto அவர்களால் புனித பெர்னதெத் பெயரில் உருவாக்கப்பட்ட பங்குதளத்திற்குரிய ஆலயத்தை எழுப்புபவதற்கு, அப்பங்குதளத்தில், அரசு விதிகளின்படி, 10,000 அங்கத்தினர்கள் இருந்தும், கடந்த 31 ஆண்டுகளாக, அரசு அதிகாரிகள், அனுமதி மறுத்தே வந்துள்ளனர்.

Sang Timur பெண் துறவுசபையால் நடத்தப்படும்  Sang Timur பள்ளியின் அரங்கு ஒன்றில் 1990ம் ஆண்டு, மக்கள், வழிபாடுகளை நடத்தத் துவங்கியபோது, அப்பகுதி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2004, மற்றும் 2013ம் ஆண்டுகளில் இப்பள்ளியே இழுத்து மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனித பெர்னதத் பங்குத்தளத்திற்கு ஆலயம் ஒன்று தேவை என 31 ஆண்டுகள் போராடி வந்த பங்குமக்களின் முயற்சிகளுக்குப்பின், இவ்வாரத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் இசைவை அளித்ததைத் தொடர்ந்து, புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தோனேசியா கர்தினால் Ignatius Suharyo அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில், இந்தோனேசிய மதங்களிடையே உரையாடல் குழுவின் அங்கத்தினர்கள், அப்பகுதியின் சில இஸ்லாமியர்கள், அரசு அதிகாரிகள் என முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புனித பெர்னதெத் பங்குதள அருள்பணி Lammarudut Hot Paian Haryono Chaeli Sihombing  அவர்கள் உரைக்கையில், 31 ஆண்டு போராட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், இந்தோனேசிய மத விவகார அமைச்சகம், அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றியை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2021, 15:29