கொரோனா நோயாளிகளுக்கான இந்தோனேசிய கத்தோலிக்க மையத்தில் உதவிகள் கொரோனா நோயாளிகளுக்கான இந்தோனேசிய கத்தோலிக்க மையத்தில் உதவிகள் 

கத்தோலிக்கத் திருஅவையின் நடமாடும் தடுப்பூசித் திட்டம்

தடுப்பூசிகளை வழங்கும் மையங்களாக தங்கள் கல்விக் கூடங்களை வழங்கியுள்ள இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவை, வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் துவக்கியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், நடமாடும் தடுப்பூசி திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது, அந்நாட்டின் தலத்திருஅவை.

Ursuline அருள்சகோதரிகள் நடத்தும் 3 கத்தோலிக்க பள்ளிகளால் துவக்கப்பட்டுள்ள, இலவசத் தடுப்பூசித் திட்டம், இந்தோனேசிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு, ஏழு வாகனங்கள், மற்றும் ஒரு மருத்துவ  ஊர்தியுடன் இயங்கிவருகிறது.

12 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும், இந்தோனேசியாவின் நடமாடும் தடுப்பூசித் திட்டம், முதலில் தலைநகர் ஜகார்த்தாவில் தன் பணிகளைத் துவக்கியுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையால் இத்திட்டம் ஆசீர்வதிக்கப்பட்டு, துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வில், இந்தோனேசியாவின்,  'பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு' துறை அமைச்சர் Gusti Ayu Bintang Darmawati, ஜகார்த்தா ஆளுநர் Anies Rasyid Baswedan  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கும் மையங்களாக தங்கள் கல்விக் கடங்களை வழங்கியுள்ள இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவை, இம்மையங்களுக்கு வந்து தடுப்பூசி போடமுடியாத மக்களுக்கு உதவும் நோக்கத்துடன், நடமாடும் தடுப்பூசித் திட்டத்தையும் துவக்கியுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு தாதியர், இரு நிர்வாகப் பணியாளர்கள், ஓர் ஓட்டுநர் என 5 பேரைக் கொண்டுள்ள இத்திட்டத்தில், ஒவ்வொரு வாகனக்குழு வழியாகவும், ஒவ்வொரு நாளும், குறைந்தது 100 பேருக்கு தடுப்பூசி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2021, 13:57