பெய்ரூட் வெடிவிபத்தின் முதல் ஆண்டு நினைவாக, திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Boutros Rai பெய்ரூட் வெடிவிபத்தின் முதல் ஆண்டு நினைவாக, திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Boutros Rai 

பெய்ரூட் வெடிவிபத்து முதலாம் ஆண்டு – கர்தினால் மறையுரை

207 பேரின் உயிர்கள், 6,500க்கும் அதிகமானோரின் காயங்கள், இன்னும் பல்லாயிரம் பேர் பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி, உழைத்துச் சேர்த்த சொத்துக்கள், வீடுகள் ஆகியவை, விலைமதிக்க முடியாத பேரிழப்புக்கள் - கர்தினால் Boutros Rai

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட காரணமாக இருந்தோர் அனைவரின் மனசாட்சியிலும் இறைவனின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது என்று, மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Rai அவர்கள் கூறினார்.

லெபனோன் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி நிகழ்ந்த பெரும் வெடிவிபத்தின் முதல் ஆண்டு நினைவாக, திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Boutros Rai அவர்கள், "அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்" (மத்தேயு 17:23) என்ற நற்செய்தி வாக்கியத்தை தன் மறையுரையின் மையப்பொருளாக வழங்கினார்.

இந்த முதல் ஆண்டு நினைவுநாளன்று, கோபம், கண்டனம், கலகம் ஆகியவை வெடிக்கவேண்டும் என்று பலர் விரும்பியிருந்த வேளையில், இறைவனின் வார்த்தைகள், நமக்கு உறுதியை வழங்குவதாகவும், இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பானவர்களின் மனச்சான்று குரலாகவும் இன்று ஒலிக்கிறது என்று, கர்தினால் Boutros Rai அவர்கள் தன் மறையுரையின் துவக்கத்தில்  குறிப்பிட்டார்.

207 பேரின் உயிர்கள், 6,500க்கும் அதிகமானோரின் காயங்கள், இன்னும் பல்லாயிரம் பேர் பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி, உழைத்துச் சேர்த்த சொத்துக்கள், வீடுகள் ஆகியவை, விலைமதிக்க முடியாத பேரிழப்புக்கள் என்பதை, கர்தினால் Boutros Rai அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

இத்தனை இழப்புக்களைச் சந்தித்துள்ள நாம், மனம் தளராமல் இருப்போம், ஏனெனில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, இயேசுவும், நம்மோடு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், அவரது உயிர்ப்பின் சக்தியால் நாம் மீண்டும் எழுந்துவருவோம் என்றும் கர்தினால் Boutros Rai அவர்கள் உறுதி வழங்கினார்.

ஆகஸ்ட் 4, புதனன்று தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லெபனோன் நாட்டிற்காக விடுத்த விண்ணப்பத்தையும், அவர் அந்நாட்டிற்கு வருகை தர விழைவதாக கூறியதையும் கர்தினால் Boutros Rai அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த பேரிழப்பின் வழியே நாம் இழந்தோருக்காக செபிக்கும் அதே வேளையில், இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, தங்கள் உயிரையும் பணயம் வைத்து உழைத்தவர்களையும் நாம் நினைவுகூரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட கர்தினால் Boutros Rai அவர்கள், அதே வேளையில், இந்த கொடூரத்தின் பின்புலத்தில் இருக்கும் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கும், நீதி நிலைநாட்டப்படுவதற்கும் நாம் தொடர்ந்து குரல் எழுப்பவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

இந்த வெடிவிபத்தின் முதல் ஆண்டு நினைவாக, போராட்ட ஊர்வலங்கள் மேற்கொள்ளும் அனைவரும், வன்முறைகளில் ஈடுபடாமல், தங்கள் உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட கர்தினால் Boutros Rai அவர்கள், இந்த விபத்தால் பாதிக்கு மேல் அழிந்துபோன பெய்ரூட் நகரையும், லெபனோன் நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு, அனைவரையும் சார்ந்தது என்பதையும், தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2021, 14:02