வட கொரியாவின் Hungnam துறைமுகத்திலிருந்து புறப்படும் புலம்பெயர்ந்தோர் வட கொரியாவின் Hungnam துறைமுகத்திலிருந்து புறப்படும் புலம்பெயர்ந்தோர்  

இறையடியார் Marinus LaRue ஆப்கானிஸ்தானுக்கு பரிந்துபேச...

மிகக் கடினமான கப்பல் பயணத்தை வழிநடத்திய அருள்சகோதரர் Marinus அவர்கள், தற்போது, ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடியிலிருந்து வெளியேற விழையும் புலம் பெயர்ந்தோருக்கு சிறந்ததொரு பரிந்துரையாளாராக இருப்பார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற முயன்றுவரும் இந்த நெருக்கடியில், இறையடியாரான Marinus LaRue அவர்கள், மக்களுக்காகப் பரிந்துபேசுபவராக விளங்குகிறார் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் நெவார்க் (Newark) உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர், Elias Lorenzo அவர்கள் கூறியுள்ளார்.

1950ம் ஆண்டு, வட, மற்றும், தென் கொரிய நாடுகளுக்கிடையே போர் துவங்கியபோது, அங்கு கப்பல் தலைவராக பணியாற்றிய Leonard LaRue என்ற இயற்பெயர் கொண்ட கத்தோலிக்கர், போரிடும் நாடுகளிலிருந்து தப்பித்துச்செல்ல விழைந்த 14,000த்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை, தன் கப்பலில் ஏற்றி, ஜப்பான் நாட்டிற்கு கொண்டு சேர்த்தார்.

1950ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, கப்பல் தலைவர் Leonard LaRue அவர்கள், S.S. Meredith Victory என்ற கப்பலில், 14,000த்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, வட கொரியாவின் Hungnam துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, மிகக் கடினமான 450 மைல் கடல் பயணத்திற்குப் பின், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, ஜப்பான் நாட்டை அடைந்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் திரும்பியபின், கப்பல் தலைவர் பணியைவிட்டு விலகிய Leonard LaRue அவர்கள், புனித பெனடிக்ட் துறவு சபையில் இணைந்து, அருள்சகோதரர் Marinus என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

தன் வாழ்நாளெல்லாம், இத்துறவு சபையில் மிகவும் எளிய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அருள்சகோதரர் Marinus அவர்கள் 2001ம் ஆண்டு இறையடி சேர்ந்தபின், அவரது புண்ணிய வாழ்வை அடிப்படையாகக் கொண்டு, அவரை, புனிதராக உயர்த்தும் பணிகளுக்கு, அமெரிக்க ஆயர் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புலம் பெயர்ந்தோரின் நலனுக்காக, மிகக் கடினமான கப்பல் பயணத்தை வழிநடத்திய அருள்சகோதரர் Marinus அவர்கள், தற்போது, ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடியிலிருந்து வெளியேற விழையும் புலம் பெயர்ந்தோருக்கு சிறந்ததொரு பரிந்துரையாளாராக இருப்பார் என்று ஆயர் Elias Lorenzo அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2021, 13:47