இலங்கை - கொழும்புவின் புனித அந்தோனியார் திருத்தலத்தில் கருப்புக்கொடி இலங்கை - கொழும்புவின் புனித அந்தோனியார் திருத்தலத்தில் கருப்புக்கொடி 

இலங்கை ஆலயங்களிலும், இல்லங்களிலும் கருப்புக்கொடி

கர்தினால் இரஞ்சித் அவர்களின் அழைப்பின்பேரில், கிறிஸ்தவ ஆலயங்களிலும், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் இல்லங்களிலும், இன்னும் ஏனைய இல்லங்கள், மற்றும், பொது இடங்களிலும் கருப்புக்கொடி பறக்கவிடப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு, உயிர்ப்பு பெருவிழாவன்று இலங்கையின் கிறிஸ்தவ ஆலயங்களில், ஞாயிறு வழிபாட்டு நேரத்தில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்களைப்பற்றிய உண்மைகளை இலங்கை அரசு வெளியிடாமல் இருப்பதை கண்டனம் செய்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும், இல்லங்களிலும் கருப்புக்கொடி பறக்கவிடப்பட்டது.

269 பேரின் மரணத்திற்கும், 500க்கும் அதிகமானோரின் காயங்களுக்கும் காரணமான இந்த தீவிரவாதத் தாக்குதலைக் குறித்து இலங்கை அரசு முழு உண்மைகளை வெளியிட மறுத்துவருவதைக் குறித்து, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், தன் வன்மையான கண்டனத்தை, செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.

கர்தினால் இரஞ்சித் அவர்களின் அழைப்பின்பேரில், ஆகஸ்ட் 21, கடந்த சனிக்கிழமையன்று, கிறிஸ்தவ ஆலயங்களிலும், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் இல்லங்களிலும், இன்னும் ஏனைய இல்லங்கள், மற்றும், பொது இடங்களிலும், கருப்புக்கொடி பறக்கவிடப்பட்டது.

இந்த கொலைகளுக்கு காரணமானவர்களைக்குறித்த உண்மைகளை அரசு மறைக்க முயல்வது, இத்தகைய கொலைக் கலாச்சாரத்திற்கு அரசு தரும் ஆதரவாகத் தெரிகிறது என்றும், இந்த தீவிரவாத வன்முறைகளுக்குப் பலியானோரின் இரத்தம் இறைவனிடம் குரல் எழுப்புகிறது என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews/CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2021, 13:54