பழஙகுடியின மக்களோடு போராட்டத்தில் ஈடுபட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி - கோப்புப் படம் பழஙகுடியின மக்களோடு போராட்டத்தில் ஈடுபட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி - கோப்புப் படம் 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 1

நீதியுடன், நேர்மையுடன் வாழும் ஒருவரின் உள்ளத்தை அரசுகள் எவ்வாறு உடைக்கின்றன என்பதை, ஸ்டான் அவர்களின் எடுத்துக்காட்டின் வழியே, Arun Ferreira அவர்களின் கட்டுரை, தெளிவாகக் கூறுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 1

மாசற்றவனின் மன்றாட்டு என்று தலைப்பிடப்பட்டுள்ள 17ம் திருப்பாடலில் நம் விவிலியத்தேடல் இன்று ஆரம்பமாகிறது. இத்திருப்பாடலின் ஆரம்ப வரிகளில், "ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்று மன்னர் தாவீது, ஆண்டவரிடம் எழுப்பும் வேண்டுதல், 'வழக்கு' என்ற பெயரில், இந்திய நடுவண் அரசு அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்குச் செய்த சித்ரவதைகளையும், 'வழக்கு' என்ற பெயரில் இந்தியாவில் நடைபெற்ற மற்றொரு நாடகத்தையும், இணைத்து சிந்திக்க நம்மை அழைக்கிறது.

1984ம் ஆண்டு, டிசம்பர் 2 நள்ளிரவு துவங்கி, டிசம்பர் 3 அதிகாலை வரை, இந்தியாவில், மத்தியப்பிரதேச மாநிலத்தின், போபால் என்ற நகரில், 'Union Carbide' என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகையினால், 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்த ஒரு சில ஆண்டுகளில் 20,000க்கும் அதிகமானோர் இறந்தனர். குறைந்தது, ஆறு லட்சம் பேர் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலைத் தொடர்பான விபத்துக்களில், உலகிலேயே, மிக அதிகமான உயிரிழப்பை உருவாக்கிய விபத்து, போபால் விபத்து என்று அதிகாரப்பூர்வப் பதிவுகள் கூறுகின்றன.

1984ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுநலவழக்கில், 26 ஆண்டுகளுக்குப் பின், 2010ம் ஆண்டு, எட்டு பேர் குற்றவாளிகள் என்று, போபால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வளவு பகிரங்கமாக நடைபெற்ற மனிதப் பலிகளுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க, இந்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் 26 ஆண்டுகள் ஆயின. குற்றம் சுமத்தப்பட்ட அந்த எட்டு பேரில் ஒருவர், இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே மரணமடைந்தார். ஏனைய ஏழுபேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், அவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டன. அதுவே, அன்று நிலவிய இந்தியச் சட்டத்தின்படி விதிக்கப்படக்கூடிய மிக அதிகமான தண்டனை என்பதையும், போபால் நீதிமன்றம் தெளிவாக்கியது. தண்டனை பெற்ற ஏழுபேரும், ஒரு சில நாள்களில், பிணையலில் விடுவிக்கப்பட்டனர்.

பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிரைப்பறிக்கக் காரணமான நச்சுவாயு விபத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ஒருசிலநாள்களில், பிணையலில் வெளிவந்தனர். இதேவண்ணம், பல்வேறு கொலைவழக்குகளில், குற்றவாளிகள் என தீர்ப்பிடப்பட்டோர், வெகு எளிதில் பிணையல் பெற்று வெளியேறி, இந்தியப் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர்.

ஆனால், எந்த ஒரு உயிரையும் பறிக்காமல், பல்லாயிரம் பழங்குடியினர் வாழ்வதற்காக தன்னையே அர்ப்பணம் செய்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், வன்முறைகளைத் தூண்டி, உயிர்கள் பலியாகக் காரணமாய் இருந்தார் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது முதிர்ந்த வயது, உடல் நலக்குறைவு, கோவிட் பெருந்தொற்றுச் சூழல் என்ற உண்மையான காரணங்களைக் கூறி, விடுக்கப்பட்ட பிணையல் மனுவை, மீண்டும், மீண்டும் மறுத்து, இந்திய அரசும், நீதித்துறையும், அவரை, 262 நாள்கள் சிறையில் வதைத்து, ஜூலை 5ம் தேதி கொன்றன.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணத்திற்குப்பின், ஊடகங்களில் அவரைப்பற்றிய கட்டுரைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அண்மையில், அதாவது, ஆகஸ்ட் 12, கடந்த வியாழனன்று, 'Scroll' என்ற இணையவழி இதழில், அவரைப்பற்றி வெளியான ஒரு கட்டுரை, இந்தியாவிலும், சொல்லப்போனால், உலகெங்கும், அரசுகளும், நீதித்துறையும், இணைந்து, எவ்வாறு ஒருவரை, கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கின்றன என்பதைத் தெளிவாக்கியது.

“How the system broke Stan Swamy: A cell mate recalls the activist’s last days in prison” அதாவது, "எவ்வாறு இந்த கட்டமைப்பு ஸ்டான் சுவாமியை உடைத்தது: அவரது சிறைத்தோழர், அந்த சமுதாய செயல்பாட்டாளரின், இறுதி நாள்களை நினைவுகூர்கிறார்" என்ற தலைப்பில், திருவாளர் Arun Ferreira அவர்கள், இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

இக்கட்டுரையில் அடியெடுத்து வைக்கும் முன்னர், திருவாளர் Arun Ferreira அவர்களைப்பற்றிய சில விவரங்களைத் தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும். அருண் அவர்கள், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுடன் மும்பை டலோஜா சிறையில், 2020ம் ஆண்டு, டிசம்பர் முதல், ஏழு மாதங்கள், ஒரே அறையில் தங்கியிருந்தவர்.

1993ம் ஆண்டு, தன் கல்லூரி படிப்பை முடித்த அருண் அவர்கள், மும்பை சேரிகளில் வாழும் மக்கள் நடுவே பணியாற்றிவந்தார். வறியோரின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு அவர் செய்துவந்த பணி, அதிகார வர்க்கத்தைச் சார்ந்த பலருக்கு சங்கடங்களை உருவாக்கியதால், அருண் அவர்கள், நக்சலைட் இயக்கத்துடன் தொடர்புகொண்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு, 2007ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியேவந்ததும், குற்றவியல் துறையில் பயிற்சிபெற்று, வழக்கறிஞராக மாறினார். அரசியல் பழிவாங்கும் படலத்தின் ஓர் அங்கமாக, அநீதியான முறையில் சிறைவைக்கப்பட்டிருப்போர் சார்பில், வழக்குகளை ஏற்று நடத்திவந்தார்.

பழங்குடியினரின் உரிமைகளுக்காக, குறிப்பாக, ஆதாரம் ஏதுமின்றி சிறைகளில் அடைக்கப்பட்ட பழங்குடியின இளையோருக்காக போராடிவந்த அருள்பணி ஸ்டான் அவர்களின் போராட்டங்களைத் தடுக்க, பீமா கோரேகானில் நிகழ்ந்த வன்முறைகளுக்குக் அவர் காரணம் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்டார். அதேபோல், அரசியல் கைதிகளுக்காகப் போராடிவந்த Arun Ferreira அவர்கள் மீதும், அதே குற்றம் சுமத்தப்பட்டு, 2018ம் ஆண்டு, மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன், சமுதாய செயல்பாட்டாளரும், கவிஞருமான, Varavara Rao, அவர்களும், கல்லூரி பேராசிரியரும், தலித் மற்றும் பழங்குடியினர் உரிமைகளைப்பற்றி ஊடகங்களில் எழுதிவந்தவருமான, Vernon Gonsalves அவர்களும், இதே பீமா கோரேகான் வழக்கில் இணைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வேளையில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள்மீதும் இதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதை, இம்மூவரும் அறிந்தனர். இனி, Arun Ferreira அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து, ஒரு சில பகுதிகளை, அவரே கூறுவதுபோல் கேட்போம்:

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை தேசியப் புலனாய்வுத் துறை (NIA), அக்டோபர் 8ம் தேதி கைதுசெய்தது என்பதை அறிந்த நாங்கள் மூவரும், அவரை, மும்பைக்கு, அவ்வதிகாரிகள், விசாரணைக்காக அழைத்துவருகினறனர் என்றே எண்ணினோம். ஆனால், அவ்வாறின்றி, அவரை சிறையில் அடைப்பது ஒன்றே, அவர்களது குறிக்கோளாக இருந்தது என்பதை, பின்னர் அறிந்தோம்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் அவரைச் சந்தித்தோம். சிறையில் முதல்நாள் அவர் அடைந்த துயரங்கள், எங்கள் மூவரைக் கண்டதும் பறந்தது என்று கூறினார். அடுத்த இரு மாதங்கள், எங்கள் நால்வருக்கும் இடையே, ஆழமான நட்பு உருவானது. மக்களுக்காக, அவர், பல ஆண்டுகளாக ஆற்றிய பணியில், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டது, எங்களுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தது. அவரது பகிர்வுகளில், தெளிவும், நகைச்சுவை உணர்வும் வெளிப்பட்டன. அவ்வப்போது, அவர், ஒருசில பாடல்களும் பாடுவார்.

உடல்நலக் குறைவால், Varavara Rao  அவர்கள் மருத்துவ மனைக்குச் சென்றபின், அவருடன் அதே அறையில் தங்கியிருந்த என்னை, 2020, டிசம்பர் 5ம் தேதி, ஸ்டான் அவர்களின் அறைக்கு மாற்றினர். அன்று முதல், ஸ்டான் அவர்களை, ஒரு மனிதராக, உன்னத உணர்வுகள் கொண்ட மனிதராக, நேரடியாகக் காணமுடிந்தது. அவர், யாரைச் சந்தித்தாலும், தன் நெஞ்சின் மீது கரத்தை வைத்து, அவர்களுக்கு வணக்கம் சொன்னது, தன்னைவிட வயதில் குறைந்தவர்கள் உட்பட, அனைவருக்கும் அவர் உண்மையான மதிப்பளித்தது, ஆகிய குணங்கள், என்னை, பெரிதும் கவர்ந்தன.

ஸ்டான் அவர்கள் பேசியபோதெல்லாம், இந்திய சட்டங்கள், நீதி சார்ந்த அமைப்பு ஆகியவை மீது அவருக்கிருந்த நம்பிக்கை வெளிப்பட்டது. ஆனால், நாள்கள் செல்ல, செல்ல, அவரது பிணையல் மனு, மீண்டும், மீண்டும் மறுக்கப்பட்டபோது, அவரிடம் ஒருவித சோர்வு உருவானதைக் காணமுடிந்தது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமானத்திலிருந்து, ஸ்டான் அவர்கள், அதிக நேரம் மெளனமாக இருந்தார். அவரது இறுதி பிணையல் மனுவை மறுத்து, NIA நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அடிக்கடி வாசித்துப்பார்த்தார். அத்தீர்ப்பில் எழுதப்பட்டிருந்தவற்றை, அவரால்  நம்பமுடியவில்லை என்பதை, நான் உணர்ந்தேன். அவரது நகைச்சுவை உணர்வு, வெகுவாகக் குறைந்துபோனது. அவரது உடல் நடுக்கம், கட்டுக்கடங்காமல் அதிகமானது. கேட்கும் திறன் குறைந்தது, கண்பார்வை மங்கியது.

மே 28ம் தேதி, அவர் மருத்துவமனை செல்வதற்கு விடைபெற்றபோது, அவர் மருத்துவ மனையிலிருந்து வெளியேறி, தன் பிணையல் மனு வழக்கில் வெற்றிபெற்று, தான் செல்ல விரும்பிய இராஞ்சிக்கு மீண்டும் சென்றுவிடுவார் என்ற நம்பிக்கையுடன் நான் அவரைக் கட்டியணைத்து விடையளித்தேன். என் எண்ணங்கள் தவறாகிப்போனது. ஸ்டான் அவர்களை இழந்தோம்.

நீதியுடன், நேர்மையுடன் வாழும் ஒருவரின் உள்ளத்தை அரசுகள் எவ்வாறு உடைக்கின்றன என்பதை, ஸ்டான் அவர்களின் எடுத்துக்காட்டின் வழியே, Arun Ferreira அவர்களின் கட்டுரை, தெளிவாகக் கூறுகிறது. ஸ்டான் அவர்கள், தன் வயதாலும், உடல்நலக் குறைபாடுகளாலும் ஏற்கனவே உடலளவில் உடைந்தவர்தான், ஆனால், அவரது உள்ளம் உடையாமல் இருந்தது. உண்மை தன்பக்கம் இருக்கும்வரை, தனக்கு எவ்வாறாகிலும் நீதி கிடைக்கும் என்று நம்பிவந்தது. அந்த உள்ள உறுதியைக் கண்ட NIA அமைப்பு, அதை உடைப்பதில் தீவிர கவனம் செலுத்தியது என்பதையும், அதில் ஓரளவு வெற்றி கண்டது என்பதையும், இந்தக் கட்டுரை வழியே உணர்கிறோம்.

2ம் உலகப்போரின்போது, நாத்சி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டோரின் உள்ளத்தை உடைக்க, ஜெர்மானிய அரசு, பல்வேறு வழிகளை பின்பற்றியது. அருள்பணி ஸ்டான் சுவாமி உட்பட, பல்லாயிரம் மாசற்றவர்களை சிறையில் அடைத்து, அவர்களது உள்ளங்களை உடைக்கும் வழிகளை, இந்திய நடுவண் அரசு தற்போது கச்சிதமாகச் செய்துவருகிறது.

"Justice delayed is justice denied", அதாவது, “தாமதமாக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி” என்பது, ஓர் ஆங்கிலக்கூற்று. உலகின் நீதிமன்றங்களில் சரியான தீர்ப்பு கிடைக்காமல், மனிதர்கள், அதிலும், முக்கியமாக, நீதியை விலைகொடுத்து வாங்கமுடியாத ஏழைகள், அணுகும் நீதி மன்றம், கடவுளின் சந்நிதி. இத்தகையச் சூழலில், "ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்று மன்னர் தாவீது எழுப்பும் வேண்டுதலுடன் ஆரம்பமாகும் 17ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, நாம், அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2021, 14:46