கருத்துப்பரிமாற்றம் செய்யும் தம்பதியர்  கருத்துப்பரிமாற்றம் செய்யும் தம்பதியர்  

மகிழ்வின் மந்திரம்: தம்பதியரிடையே கருத்துப்பரிமாற்றத்தின் அவசியம

திருமண வாழ்வில் பிரச்சனைகள் தீர்க்கப்படாதபோது, முதலில் தம்பதியரிடையே தொடர்புகள் மறையும். சிறிது சிறிதாக, நான் எனது பிள்ளைகளுக்கு தந்தை அல்லது, தாய் என்ற உறவாக மட்டுமே இருக்கும் நிலை உருவாகும் (அன்பின் மகிழ்வு 233

மேரி தெரேசா: வத்திக்கான் 

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" (பிரிவு 6) என்ற தலைப்பின் கீழ், 233,234 ஆகிய இரு பத்திகளில், 'நெருக்கடிகளின் சவால்' என்பதுபற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

பொதுவாக நாம் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, நமது கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருக்கிறோம், அல்லது, நாம் எப்படியோ தவறு செய்கிறோம் என்று உணர்கிறோம், இதனால், அச்சமயத்தில், அப்பிரச்சனையின் துவக்கத்திலேயே அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வதற்கு எதிர்மறையாகச் செயல்பட முனைகிறோம். இது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. அந்தப் பிரச்சனை நம்மைவிட்டு அகன்றுவிடும் என்ற நம்பிக்கையில், அதை மறுக்கவோ, மறைக்கவோ அல்லது, அதை குறைத்து மதிப்பிடவோ முயற்சிக்கிறோம். ஆனால் இந்த வழிமுறை ஒருபோதும் உதவாது, மாறாக, அது காரியங்களை மேலும் மோசமடையச் செய்யும், சக்தியை இழக்கச்செய்யும், மற்றும், அதற்குத் தீர்வுகாண்பதையும் தாமதப்படுத்தும். அந்நிலையால், தம்பதியரிடையே பிரிவினை வளரும், அவர்கள், ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் திறனையும் இழப்பார்கள். பிரச்சனைகள் தீர்க்கப்படாதபோது, முதலில் தொடர்புகள் மறையும். சிறிது சிறிதாக, தம்பதியர், ஒருவருக்கொருவர், வெறும், துணைவர் அல்லது துணைவியாக மாறுவார், நான் எனது பிள்ளைகளுக்கு தந்தை அல்லது, தாய் என்ற உறவாக மட்டுமே இருக்கும். இறுதியில், தம்பதியர் ஒருவருக்கொருவர் அந்நியராக இருக்கும் நிலை உருவாகும். ஆதலால் தம்பதியர் பிரச்சனைகளை ஒன்றுசேர்ந்து எதிர்கொள்ளவேண்டும். இது கடினமாக இருக்கும். ஏனெனில், மனிதர், சிலநேரங்களில், தாங்கள் என்ன உணர்கிறோம் என்பதை சொல்வதைத் தவிர்க்கும்பொருட்டு, அச்சூழலிலிருந்து பின்வாங்குவர். அந்தச் சூழலில் அமைதி காப்பர். அத்தகைய நேரங்களில் இதயத்தோடு இதயம் பேசுவதற்குரிய வாய்ப்புக்களை உருவாக்கவேண்டியது மிகவும் முக்கியம். தம்பதியர், இதைக் கற்றுக்கொள்ளத் தவறினால், நாள்கள் செல்லச் செல்ல, வாழ்வு கடினமானதாக மாறிவருவதை உணர்வார்கள். கருத்துப்பரிமாற்றம், அமைதியான நேரங்களில் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு கலை. அது இன்னலான நேரங்களில் கருத்துப்பரிமாற்றத்திற்கு உதவும். தம்பதியர் தங்களின், உள்ளார்ந்த எண்ணங்கள், மற்றும், உணர்வுகளைக் கண்டுபிடித்து, அவற்றை வெளிப்படுத்த, அவர்களுக்கு உதவிகள் தேவை. இது, குழந்தைபிறப்பைப் போலவே, ஒரு புதிய கருவூலத்தைக்கொணரும் வலிநிறைந்த செயல்முறையாகும். பலர் தங்களின் நெருக்கடியான நேரங்களில் மேய்ப்புப்பணி உதவிகளை நாடுவதில்லை. ஏனெனில் அப்பணிகளில், தனிப்பட்ட விவகாரங்களில் அக்கறை காட்டப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. எனவே திருமண வாழ்வின் நெருக்கடிகளை மிகுந்த அக்கறையோடு திருஅவை அணுகுவதற்கு முயற்சிசெய்ய, இது நம்மைத் தூண்டுகிறது (அன்பின் மகிழ்வு 233,234)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2021, 13:50