வாழ்க்கைத் துணையின்றி 5 குழந்தைகளுடன் வாழும் பெண்மணி Chaunda Leeயும் அவரின் ஒரு குழந்தையும் வாழ்க்கைத் துணையின்றி 5 குழந்தைகளுடன் வாழும் பெண்மணி Chaunda Leeயும் அவரின் ஒரு குழந்தையும் 

மகிழ்வின் மந்திரம் : ஒற்றை பெற்றோருடன் குடும்பங்கள்

ஒரே பாலின ஈர்ப்புடையவர்கள் இணைந்து வாழ்வதை, திருமணமாக அங்கீகரிப்பதற்கு, திருமணம் மற்றும் குடும்பம் குறித்த இறைத்திட்டத்தில், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலில், குடும்ப வாழ்வில் நிலவும் அன்பு குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதை, இவ்வாண்டில் நாம் மேற்கொண்டுள்ள மகிழ்வின் மந்திரம் நிகழ்ச்சி வழியாகக் கேட்டுவருகிறோம். இத்திருத்தூது அறிவுரை மடலில், 'மேய்ப்புப்பணி சார்ந்த சில கண்ணோட்டங்கள்' என்ற 6ம் பிரிவின் கீழ், திருமண உறவிலும், குடும்பங்களிலும் நிலவும் 'சில சிக்கலானச் சூழல்கள்' பற்றி, 6 பத்திகளில் விளக்கியுள்ளதை, அண்மைய நாட்களில் கண்டுவருகிறோம். கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த தம்பதியர் திருநற்கருணையைப் பகிர்வது, கத்தோலிக்கர், மற்ற மதத்தவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது உருவாகும் சிக்கல்கள், ஒரே பாலின ஈர்ப்பு, ஒற்றை பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள், என்பவைபற்றி தன் கருத்துக்களை இந்த ஆறு பத்திகளில் பகிர்ந்துள்ள திருத்தந்தை, இதன் இறுதி இரண்டு பத்திகளில் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

குடும்பத்தின் மாண்பு, மற்றும் பணி குறித்து கலந்துரையாடிய ஆயர் மாமன்றத் தந்தையர்கள், ஒரே பாலின ஈர்ப்புடையவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு, திருமணத்திற்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்ற பரிந்துரையை, பலமாக மறுத்துள்ளனர். ஏனெனில், ஒரே பாலின ஈர்ப்புடையவர்கள் இணைந்து வாழ்வதை, திருமணமாக அங்கீகரிப்பதற்கு, திருமணம் மற்றும் குடும்பம் குறித்த இறைத்திட்டத்தில், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்தலை திருமணமாக அங்கீகரிக்க, தலத்திருஅவைகளைக் கட்டாயப்படுத்துவது, ஏழைநாடுகளில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரிடையே திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை உருவாக்க கட்டாயப்படுத்தி, அதனோடு பொருளாதார உதவிகளை அனைத்துலக அமைப்புக்கள் இணைப்பது போன்றவை, எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. (அன்பின் மகிழ்வு 251)

தம்பதியருள் ஒருவர் குடும்பத்தின் அங்கத்தினராக தொடர்ந்து வாழ மறுக்கும்போது, ஒற்றை பெற்றோரால் வழிநடத்தப்படும் குடும்பங்கள் உருவாகின்றன. வன்முறைச் சூழல்களில், பெற்றோருள் ஒருவர், குழந்தைகளுடன் தப்பிச் செல்லுதல், தம்பதியருள் ஒருவரின் மரணம், தம்பதியருள் ஒருவர், குடும்பத்தைக் கைவிடுவது உட்பட, இன்னும் பல்வேறுச் சூழல்களில், ஒற்றை பெற்றோர் எனும் நிலை உருவாகிறது. எத்தகையச் சூழலில் ஒற்றைப் பெற்றோர் நிலை உருவானாலும்,  அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தின் குடும்பங்களாலும், பங்குத்தள மேய்ப்புப்பணி அமைப்புக்களாலும், தேவையான உதவிகளைப்பெற வழிவகைச் செய்யப்பட வேண்டும். இவர்கள், பலவேளைகளில், பொருளாதாரச் சிரமங்கள், வேலை வாய்ப்பின்மைகள், குழந்தைகளுக்கு ஆதரவின்மை, உறைவிடமின்மை என பல்வேறு துயர்களைச் சந்திக்கின்றனர். (அன்பின் மகிழ்வு 252)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2021, 14:33