திருநற்கருணைப் பெறுதல் திருநற்கருணைப் பெறுதல்  

மகிழ்வின் மந்திரம் : திருநற்கருணைப் பகிர்வு

கத்தோலிக்க, மற்றும் பிற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த தம்பதியரின் கலப்புத் திருமணத் தயாரிப்புகளிலும், திருமணச் சடங்கிலும், அச்சபைகளின் அருள்பணியாளர்கள் இடையே ஒத்துழைப்பு முக்கியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் ஆறாம் பிரிவில், திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும், திருஅவை வழங்கக்கூடிய மேய்ப்புப்பணி சார்ந்த உதவிகளைக் குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இப்பிரிவில், 'மண முறிவு மற்றும் மண விலக்கிற்குப்பின் உடன் செல்லும் பணி', என்ற தலைப்பில், 6 பத்திகளில் விளக்கியுள்ளதை அண்மைய நாட்களில் கண்டோம். அதற்கடுத்து, 'சில சிக்கலானச் சூழல்கள்' என்ற தலைப்பில் வழங்கியுள்ள பகுதியின் முதல் பத்தியில், இருவேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த தம்பதியர் திருநற்கருணையைப் பகிர்வது குறித்து இவ்வாறு விளக்கியுள்ளார்:

கத்தோலிக்கருக்கும் பிற கிறிஸ்தவ சபை அங்கத்தினருக்கும் இடையே இடம்பெறும் திருமண ஒப்பந்தங்களில் சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது. கத்தோலிக்கருக்கும் திருமுழுக்குப் பெற்ற பிற கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்களுக்கும் இடையே இடம்பெறும்  திருமணம், தன்னிலையில் சிறப்பு இயல்பைக் கொண்டிருந்தாலும், அது கொண்டிருக்கும் பல்வேறு கூறுகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு, முன்னேற்றப்பட்டு, அவைகளின் உள்ளார்ந்த மதிப்புக்கும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கும் பங்களிக்க உதவலாம். இதற்காக, இரு வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த தம்பதியரின் கலப்புத்திருமணத் தயாரிப்புகளிலும், திருமணச் சடங்கிலும், கத்தோலிக்க, மற்றும் பிற கிறிஸ்தவ சபையின் அருள்பணியாளர்கள் இடையே ஒத்துழைப்பின் முயற்சிகள் இடம்பெறவேண்டும். திருநற்கருணையைப் பெறுவதற்கு, தம்பதியருள், பிற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த  ஒருவர் அனுமதிக்கப்படுவது என்பது, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திருஅவை விதிகளைப் பகிர்ந்து, அதாவது திருமுழுக்குப் பெற்ற இருவரிடையே இடம்பெற்ற திருமணத்தில், கத்தோலிக்கரல்லாத மற்றவர் திருநற்கருணையைப் பெறுவது தொடர்பாக, கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் என நடைமுறையில் இருக்கும் விதிகளுக்கு ஏற்ப, அந்தந்த குறிப்பிட்டச் சூழல்களுக்கு இயைந்தவகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். கலப்பு திருமணத்தில் இரு தம்பதியரும் திருமுழுக்கு, மற்றும் திருமண அருளடையாளங்களை பகிர்ந்துகொண்டாலும், திருநற்கருணைப் பகிர்வு என்பது, விதிவிலக்காக நின்று, ஒவ்வொருச் சூழலிலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிகளைப் பொருத்து முடிவு எடுக்கப்படுகிறது. (அன்பின் மகிழ்வு 247)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2021, 11:42