சிரியா நாட்டில் ACN அமைப்பின் வழியே உதவி பெற்றுள்ள குடும்பம் - கோப்புப் படம் 2019 சிரியா நாட்டில் ACN அமைப்பின் வழியே உதவி பெற்றுள்ள குடும்பம் - கோப்புப் படம் 2019 

"இரக்கத்தின் பேக்கரி" - சிரியாவில் 1000 குடும்பங்களுக்கு உணவு

சிரியா நாட்டிற்குத் தேவையான உதவிகளை வழங்க, Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, பத்து இலட்சம் பவுண்டுகளை வழங்க முன்வந்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டிற்குத் தேவையான உதவிகளை வழங்க, ‘தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவி’ என்று பொருள்படும், Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, பத்து இலட்சம் பவுண்டுகளை வழங்க முன்வந்துள்ளது.

சிரியாவின் தமஸ்கு நகரில் உள்ள மெல்கித்திய கிரேக்க கத்தோலிக்க தலைமைப்பீடத்துடன் இணைந்து, ACN அமைப்பு, "இரக்கத்தின் பேக்கரி" என்ற பெயரில், அந்நகரில், பட்டினியால் துன்புறும் மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று, ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

2011ம் ஆண்டு உள்நாட்டுப்போர் துவங்கிய வேளையில், விற்கப்பட்ட ரொட்டியின் விலையைப்போல், தற்போது விற்கப்படும் ரொட்டியின் விலை, 30 மடங்கு கூடியுள்ள நிலையில், 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுவப்பட்ட "இரக்கத்தின் பேக்கரி" என்ற திட்டத்தின் வழியே, தமஸ்கு நகரில் உள்ள 1000 குடும்பங்களுக்கு ACN அமைப்பு உணவு வழங்கி வருகிறது.

மேலும், அலெப்போ நகரில் உள்ள 100 குடும்பங்களுக்கு வீட்டு வாடகை உட்பட பல்வேறு உதவிகளை வழங்கிவரும் ACN அமைப்பு, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், கோடைவிடுமுறையை செலவிடத் தேவையான உதவிகளையும் வழங்கிவருகிறது.

பத்தாண்டுகளாய் தொடர்ந்துவரும் உள்நாட்டுப் போர், பன்னாட்டு அரசுகளால் கைவிடப்பட்ட நிலை, சிரியாவுக்கு எதிராக பன்னாட்டு அரசுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், லெபனோன் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஆகிய பல்வேறு காரணங்களால் ஏற்கனவே துன்புற்றுவந்த சிரியா நாட்டு மக்கள், தற்போது, கோவிட் பெருந்தொற்றினால் மிகப்பெரும் துன்பத்தை அடைந்துவருகின்றனர் என்று மாரனைட் வழிபாட்டு முறையைச் சேர்ந்த அருள்பணி அஷ்கார் அவர்கள் கூறினார்.

ACN அமைப்பு உருவாக்கியுள்ள மருத்துவ உதவிகள் திட்டத்தில் பணியாற்றும் அருள்பணி அஷ்கார் அவர்கள், இத்திட்டத்தின் வழியே 2,385 நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர் என்று கூறினார்.

உள்நாட்டுப்போரினால் வேலைகளை இழந்து தவிப்போர், சுயமாக தொழில்களைத் துவங்க, ACN அமைப்பு இவ்வாண்டு ஜூலை மாதம் முதல், தமஸ்கு நகரில் கிறிஸ்தவ நம்பிக்கை மையம் என்ற பெயரில் மக்களுக்கு உதவிகள் செய்துவருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2021, 12:57