புனித Andrew Kim புனித Andrew Kim  

வத்திக்கானில் புனித Andrew Kim பிறந்ததன் 200ம் ஆண்டு திருப்பலி

புனித Andrew Kim அவர்களின் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளில், இரு புனிதர்கள், 2 அருளாளர்கள், மற்றும் 6 மறைசாட்சிகள் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரியா நாட்டு முதல் கத்தோலிக்க அருள்பணியாளரும், அந்நாட்டு அருள்பணியாளர்களின் பாதுகாவலருமான, புனித Andrew Kim Taegon அவர்கள் பிறந்ததன் 200ம் ஆண்டு நிறைவு திருப்பலியை, அருள்பணியாளர் பேராயத்தின் தலைவர் பேராயர் Lazzaro You Heung sik அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், ஆகஸ்ட் 21, இச்சனிக்கிழமை மாலையில் தலைமையேற்று நிறைவேற்றினார்.

உரோம் நகரில் வாழ்கின்ற கொரியா நாடுகளின் ஏறத்தாழ முப்பது அருள்பணியாளர்கள், எழுபது அருள்சகோதரிகள் மற்றும், பொதுநிலையினர் பங்குகொண்ட  இத்திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் Lazzaro You அவர்கள், புனித Andrew Kim அவர்களின் வாழ்க்கை பற்றி விரிவாக எடுத்துரைத்து, இரு கொரிய நாடுகளின் ஒப்புரவிற்காக இறைவனை மன்றாடுவோம் என்று அழைப்புவிடுத்தார்.

புனித Andrew Kim அவர்களின் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளில், இரு புனிதர்கள், 2 அருளாளர்கள், மற்றும் 6 மறைசாட்சிகள் உள்ளனர் என்றும், இவ்வாறு ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம், உலகளாவிய திருஅவையின் வரலாற்றில் வெகு அரிது என்றும், பேராயர் Lazzaro You அவர்கள் கூறினார்.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற 6வது ஆசிய இளையோர் மாநாட்டில் பங்குபெற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் கொரியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டு, Solmeo மற்றும், Haemi திருத்தலங்களில் ஆசிய இளையோரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த பேராயர் Lazzaro You அவர்கள், அதற்குப்பின், தென் கொரிய மக்கள் தங்கள் வாழ்வால் நற்செய்திக்கு கூடுதலாக சாட்சிகளாக வாழ்ந்துவருகின்றனர் என்று கூறினார்.

புனித Andrew Kim அவர்களின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, தென் கொரியத் திருஅவை யூபிலி ஆண்டை சிறப்பித்து வருவதையும், யுனெஸ்கோ அமைப்பு, தனது 40வது பொது அவையில், இந்நிகழ்வுக்கு ஆதரவு வழங்கியதையும் பேராயர் Lazzaro You அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

புனித ஆன்டரூ கிம் அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு, தென் கொரிய மக்கள், திருத்தந்தையின் பெயரில் 50 இலட்சம் டாலர்களுக்கு மேற்பட்ட நிதியுதவி செய்திருப்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்தார், பேராயர் Lazzaro You.

கொரியப் போரால், எழுபது ஆண்டுகளுக்கு மேலாக, பிரிந்து வாழ்கின்ற கொரிய மக்கள், ஒப்புரவின் நாளைக் காணவும், தென், மற்றும், வட கொரியா நாடுகளுக்கு இடையே மன்னிப்பு விரைவில் இடம்பெறவும், இறைவனை மன்றாடுவோம் எனவும் கூறிய பேராயர் Lazzaro You அவர்கள், நம் மறைசாட்சிகளின் நம்பிக்கை வாழ்வை நாம் பின்பற்றினால் அந்த நாள் விரைவில் வரும் எனவும் கூறினார்.   

ஹெய்ட்டியில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் வேதனை நிறைந்த சூழல், மியான்மாரில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்துதல், உலகத்தில் பெருந்தொற்று ஒழியாமல் இருத்தல் போன்ற பல துயர்தரும் நிகழ்வுகளால் மக்கள் துன்புறுகின்றனர், அனைவரும் நற்செய்தியின் வழியில் உடன்பிறந்தோராய் வாழ்வதே, இத்துன்பங்களுக்கு மருந்தாக அமையும் என்று, பேராயர் Lazzaro You அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

புனித Andrew Kim Taegon

புனித Andrew Kim
புனித Andrew Kim

1821ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, "Solmeo" என்ற சிறிய கிராமத்தில் பிறந்த புனித Andrew Kim அவர்கள், பாரிஸ் மறைப்பணி சபை அருள்பணியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டு 1845ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி, Shanghai நகரில், அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் கொரியா திரும்பிய இவர், நற்செய்தி அறிவிப்புப்பணியை ஆரம்பித்தார். இவர், நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கிய ஓராண்டுக்குள், கைதுசெய்யப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி, தலைவெட்டப்பட்டு மறைசாட்சியாக, 1846ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, தனது 25வது வயதில் உயிர்துறந்தார்.

1984ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், சோல் நகரில், Andrew Kim அவர்களையும், 102 கொரிய மறைசாட்சிகளையும் புனிதர்கள் என்று, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கொரியாவில் 1839ம் ஆண்டுக்கும், 1867ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடூரமான சித்ரவதைகளுக்குப் பலியான பத்தாயிரம் பேரில், இப்புனிதரும், ஒருவர்.

மேலும் இந்த 200ம் யூபிலி ஆண்டு நிகழ்வுக்கு, கொரிய மக்களுக்குச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் கொரிய மக்கள், ஏழை நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஆற்றியுள்ள உதவிக்கு தன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2021, 15:40