தேடுதல்

"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" - யோவான் 6,9 "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" - யோவான் 6,9 

பொதுக்காலம் 17ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

பகிர்வுப் பாடங்களை, பச்சிளம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள, இறைவன், நமக்கு, பணிவான மனதைத் தரவேண்டும் என்றும், பகிர்வுப் புதுமைகள், இவ்வுலகில், பலுகிப்பெருகவேண்டும் என்றும் மன்றாடுவோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 17ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

ஜூலை 23, இவ்வெள்ளியன்று, கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில், துவங்கின. சென்ற ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த விளையாட்டுக்கள், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், இவ்வாண்டு நடத்தப்படுகின்றன. 1896ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், இடையே மூன்று முறை நடத்தப்படவில்லை.

முதல், மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்ற காலத்தில், மனிதர்களாகிய நாம், ஒருவரையொருவர் அழித்துவந்ததால், 1916, 1940, 1944 ஆகிய மூன்று ஆண்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தடைப்பட்டன. 2020ம் ஆண்டு துவங்கியது முதல், மனிதர்களாகிய நம் அனைவரையும், கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி அழித்து வருவதால், ஒலிம்பிக் வரலாற்றில், முதல்முறையாக, இந்த விளையாட்டுக்கள் தள்ளிவைக்கப்பட்டன. இப்போதும்கூட, மக்களின் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெறும் இந்த விளையாட்டுக்கள், ஏத்தருணத்திலும் நிறுத்தப்படலாம் என்ற சந்தேகத்துடன், நடைபெற்று வருகின்றன.

மக்களின் பாதுகாப்பு கருதி, மூன்று முறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், பாதுகாப்பு என்பது, ஒரு பெரும் ஆபத்தாகவே ஏனைய ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் கருதப்பட்டது. 1972ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்றபோது, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 11 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவோரின் உள்ளங்களில் ஆழப்பதிந்த ஓர் எச்சரிக்கையாக செயல்படுகிறது.

மக்களின் கவலைகளைப் போக்கி, அவர்களை ஒன்றிணைப்பதற்காக, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அதே விளையாட்டுத் திடல்கள் பழிக்குப் பழி வாங்கும் கொலைக்களங்களாகவும், மக்கள் கூடிவரும் இடங்கள், கிருமிகள் பரவும் இடங்களாகவும் மாறுவதைக் காணும்போது, வேதனையடைகிறோம். எந்நேரத்தில், எவ்விடத்திலிருந்து, எவ்வகையில் வன்முறைகள் வெடிக்கும், அல்லது, கிருமிகள் பரவும் என்பது தெரியாமல் வாழ்ந்துவருகிறோம். இன்றைய நமது சமுதாயத்தை, ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தும் ஒரு பெரும் பிரச்சனை, பாதுகாப்பின்மை.

பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பது, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை வேட்கை. அண்மையக் காலங்களில், பாதுகாப்பு என்று பேசும்போது, மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதை மட்டும், நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணிப்பார்க்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்காமல், அதை அளவுக்கதிகமாக சீரழித்ததால், கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது, நம்மீது படையெடுத்துள்ளது. நமது சுயநலமும், பேராசையும், நம்மையும் நம் சுற்றுச்சூழலையும், பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன.

சுயநலமும், பேராசையும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் அதிகமாக, மிகமிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். இதன் விபரீத விளைவாக, இல்லாதவர்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். கோவிட் பெருந்தொற்று, கோடிக்கணக்கான வறியோரின் வாழ்வாதாரங்களை அடியோடு பறித்துச் சென்றுள்ள அதே வேளையில், ஒரு சில கோடீஸ்வரர்களின் வருமானம் இன்னும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் ஒட்டுமொத்த வடிவமாக, வேதனை தரும் விளம்பரமாக, மிகப்பெரிய செல்வந்தர்கள் சிலர், அண்மைய நாள்களில் (ஜூலை 11, 20 ஆகிய நாள்களில்), கோடி, கோடியாய் பணத்தைச் செலவழித்து, ஒருசில நிமிடங்களே நீடித்த விண்வெளிப் பயணம் ஒன்றை மேற்கொண்ட நிகழ்வை நாம் எண்ணிப்பார்க்கலாம். இந்த வேறுபாடுதான் நமக்குள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிவிட்டது.

நாடுகளுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையில் வெடிக்கும் வன்முறைகளை, ஆழமாக ஆய்வுசெய்தால், இவற்றின் ஆணிவேராக நாம் காண்பது, இருப்பவர் - இல்லாதவர் என்ற இருவேறு உலகங்களுக்கிடையே நிலவும் அநீதி.

இவ்வாறு பிளவுபட்டு நிற்கும் இந்த உலகங்களை இணைக்கும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, இல்லாதவரின் உலகிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, இருப்பவரின் உலகம், ஆயுதங்களையும், அரசியல் அதிகாரங்களையும் நம்பிவாழ்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி... பகிர்வு. இருப்பது சிறிதளவேயாயினும், அதை இல்லாதாரோடு பகிர்ந்தால், இந்த உலகம், அதிகப் பாதுகாப்பில் வளர்ந்து, பல புதுமைகளைக் காணமுடியும் என்பதை, நமக்கு, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன.

மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி, அரசர்கள் இரண்டாம் நூலிலும், யோவான் நற்செய்தியிலும் எழுப்பப்படுகிறது. இருப்பினும், இறைவனை நம்பி, உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது என்பதை, இரு வாசகங்களிலும் காண்கிறோம்.

இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, மக்களின் பசியைப் போக்க, அல்லது, இல்லாதவர்களின் குறையைத் தீர்க்க, இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இவ்விரு வாசகங்களையும் சற்று ஆழமாக ஆய்வுசெய்தால், ஓர் உண்மை தெளிவாகும். இந்த உணவை, இறைவன், ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. ஒரு மனிதரும், ஒரு சிறுவனும் கொண்டுவந்து கொடுத்த உணவே, இவ்விரு புதுமைகளின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம்.

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் மனமுவந்து தந்த உணவு, ஒரு நூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவர் கொண்டுவந்த உணவு அனைவருக்கும் போதுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், ஆண்டவரை நம்பி, அந்த உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது. மக்கள் உண்டபின், மீதியும் இருந்தது என்று, இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.

பகிர்வைப் பற்றிய அழகியதொரு பாடத்தை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித் தருகிறார். தன்னை நோக்கி பெருந்திரளாய் வந்த மக்களைக் கண்டதும், 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' (யோவான் 6:5) என்ற எண்ணமே, இயேசுவின் உள்ளத்தில் முதலில் எழுந்தது. மக்களுக்கு விருந்து பரிமாற நினைத்த இயேசுவின் ஆர்வத்திற்கு அணைபோடும்வண்ணம், கேள்விகள் எழுகின்றன; பின்னர், ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் இயேசு வழங்கிய ஆசீர், ஆகியவை இணைந்தபோது, 5000த்திற்கும் அதிகமானோர், வயிறார உண்டனர்... மீதி உணவும் இருந்தது.

இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு, தனியொருவராய், ‘பலுகச்செய்தல்’ என்ற புதுமையைச் செய்தார் என்று சிந்திப்பது, பாரம்பரியக் கண்ணோட்டம். அதிலிருந்து மாறுபட்டு, 'பகிர்தல்' என்ற புதுமையை, இயேசு துவக்கிவைத்தார் என்ற இரண்டாவது கண்ணோட்டம், ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. மாறுபட்ட இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திப்பதற்கு நம்மைத் தூண்டுவது, சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான் என்ற ஒரு கேள்வி.

பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று, குழந்தைகளோ, சிறுவர்களோ எண்ணிப்பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, எடுத்துச்செல்வது, அல்லது, கொடுத்தனுப்புவது, பெற்றோரே. இஸ்ரயேல் மக்கள் மத்தியில், இதுபோன்ற முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?

பல தலைமுறைகளாய், இஸ்ரயேல் மக்கள், அடிமை வாழ்வு வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போதெல்லாம், மறவாமல், மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது, அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. குடும்பமாய்ச் சென்ற அவர்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும், குடும்பத்தலைவி முன்மதியோடு தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

இதில் மற்றொரு நுணுக்கமான தகவலையும் நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ளார். ஏனைய மூன்று ஒத்தமை நற்செய்திகளில், 'ஐந்து அப்பங்கள்' என்று கூறப்பட்டுள்ள வேளையில், அந்தச் சிறுவன் கொண்டுவந்திருந்தது, 'ஐந்து வாற்கோதுமை அப்பங்கள்' என்று, யோவான் மட்டும் குறிப்பிட்டுள்ளார். 'வாற்கோதுமை அப்பங்கள்' என்ற அடையாளத்தின் வழியே, அச்சிறுவனின் குடும்பம், வறுமைப்பட்டக் குடும்பம் என்பதைக் யோவான் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

மாலையானதும், பசி, வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலைநிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப்பற்றி பேசியது பலருக்கு நினைவிலிருந்தது. ஆனால், எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்வது? இத்தகைய அறிவு சார்ந்தக் கேள்விகளில் பெரியவர்கள் முழ்கி இருந்தபோது, அங்கிருந்த சிறுவனின் எண்ண ஓட்டம் வேறுபட்டிருந்தது. அதுவே, அந்தப் புதுமைக்கு வழிவகுத்தது.

தன்னைத் தேடிவந்த மக்களுக்கு உணவளிப்பது எப்படி என்று இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அச்சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தான். பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், அச்சிறுவன், தன்னிடம் இருந்ததையெல்லாம், இயேசுவிடம் தந்தான். அச்சிறுவனின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர். ஆரம்பமானது, ஓர் அற்புத விருந்து. இயேசு அன்று திபேரியக் கடல் அருகே நிகழ்த்தியது, ஒரு பகிர்வின் புதுமை.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச்செய்தார் என்பதை, நாம் மாபெரும் ஒரு புதுமையாகக் கருதலாம்.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்கமுடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான் இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை, அந்தச் சிறுவனைப் போல், நம்மில் யாரும் ஆரம்பித்துவைக்கலாம். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு மாநிலமான மிசோராம், நமக்குப் பகிர்வுப் பாடத்தைச் சொல்லித் தருகிறது.

"Buhfai tham" அதாவது, "ஒரு கைப்பிடி அரிசி" என்ற ஒரு திட்டம் இங்கு செயல்வடிவம் பெற்றுள்ளது. இங்குள்ள மக்களில், பெரும்பாலானோர், வசதிகள் குறைந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு முறையும் சோறு சமைக்கும்போது, ஒரு கைப்பிடி அரிசியை தனியே எடுத்து வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் சேர்க்கப்படும் அரிசி, ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குக் கோவிலுக்குக் கொண்டு வரப்படும். கோவிலில் சேர்க்கப்படும் அரிசி, ஞாயிறுத் திருப்பலியின் இறுதியில், அப்பகுதியில் வாழும் மிகவும் வறியோர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும்.

மிசோராம் மக்கள் சொல்லித்தரும் வழியை நாம் அனைவருமே பின்பற்ற முடியுமே! இதைத்தானே இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் சிறுவன் நமக்குச் சொல்லித் தருகிறார்? பகிர்வதால், பாசம் வளரும், பாதுகாப்பும் உலகில் பெருகும். பகிர்வுக்குப் பதில், சுயநலக் கோட்டைகளை, பிரம்மாண்டமாக எழுப்பினால், அந்தக் கோட்டைகளைக் காப்பதற்கு, இன்னும் தீவிரமான பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும். ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உட்பட, இவ்வுலகம் மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் இடித்துரைக்கப்படும் போட்டி, பாதுகாப்பு ஆகிய பாடங்களைப் பயிலப்போகிறோமா? அல்லது, நற்செய்தியில் நாம் சந்திக்கும் சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும், பகிர்வுப் பாடத்தைப் பயிலப்போகிறோமா?

பகிர்வுப் பாடங்களை, பச்சிளம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள, இறைவன், நமக்கு, பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம். பகிர்வுப் புதுமைகள், இவ்வுலகில், பலுகிப்பெருகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

24 July 2021, 15:08