Taize மையத்தில் வழிபாடு Taize மையத்தில் வழிபாடு 

ஓராண்டு அடைப்புக்குப்பின் மீண்டும் இயங்கும் Taize மையம்

ஜூலை 15 இவ்வியாழன் முதல் கோவிட் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகளோடு நடைபெறவிருக்கும் பல்வேறு திட்டங்களை Taize மையம் வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்ததையடுத்து, பிரான்ஸ் நாட்டின் Taize மையமும் மூடப்பட்டிருந்தது.

தற்போது, இந்த பெருந்தொற்றினை எதிர்கொள்ளும் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, ஜூலை 15, இவ்வியாழன் முதல், கோவிட் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகளோடு நடைபெறவிருக்கும் பல்வேறு திட்டங்களை, இம்மையம் வெளியிட்டுள்ளது.

ஜூலை 15 இவ்வியாழன் முதல், 18 வருகிற ஞாயிறு முடிய, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த இளையோரும், அவர்களை வழிநடத்துவோரும் மேற்கொள்ளும் கூட்டம் ஒன்று நடைபெறும்.

ஆகஸ்ட் 22ம் தேதி முதல், 29ம் தேதி முடிய, 18 வயது முதல், 35 வயதுக்கு உட்பட்ட இளையோர் கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும், "காலம் கூடிவந்தாலும், கூடிவரவில்லை எனினும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று Taize இயக்கத்தின் தலைவர் சகோதரர் Alois அவர்கள், 2021ம் ஆண்டுக்கென வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியின் மையக்கருத்துடன் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடைபெறும் கூட்டங்களும், ஒவ்வொரு மாலையும் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வும் இணையத்தளத்தின் வழியே வெளியாகும் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்தி, 1940ம் ஆண்டு சகோதரர் Roger Schütz என்பவரால் உருவாக்கப்பட்ட Taize குழுமம், ஒவ்வோர் ஆண்டும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இளையோரை இந்த மையத்திற்கு ஈர்த்து வருகிறது.

1962ம் ஆண்டு இந்த மையத்தில் உருவாக்கப்பட்ட 'ஒப்புரவின் ஆலயம்' உலகில் அமைதியையும், ஒப்புரவையும் வளர்க்கும் பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகளின் மையமாக அமைந்துள்ளது.

Taize குழுமத்தை உருவாக்கிய சகோதரர் Roger அவர்கள், 2005ம் ஆண்டு இறையடி சேர்ந்ததையடுத்து, தற்போது, Taize இயக்கத்தின் தலைவராக, வழிகாட்டியாக சகோதரர் Alois அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு பின்னர், ஏறத்தாழ ஒவ்வோர் ஆண்டும், சகோதரர் Alois அவர்கள், திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்துவருகிறார் என்பதும், இவ்விருவருக்கும் இடையே இவ்வாண்டு மார்ச் 25ம் தேதி, தனிப்பட்ட சந்திப்பு நிகழ்ந்தது என்பதும், குறிப்பிடத்தக்கன. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2021, 14:20