தென் ஆப்ரிக்காவில்  சூறையாடல்கள் தென் ஆப்ரிக்காவில் சூறையாடல்கள் 

தென் ஆப்ரிக்காவில் சமத்துவமின்மைகள் களையப்பட

ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் கொலைகள், அத்துமீறிய கைதுகள், கடத்தல்கள், சித்ரவதைகள் போன்றவை நிறுத்தப்பட்டு, அனைவரும் ஒப்புரவு மற்றும், அமைதிப் பாதையில் நடக்க ஆயர்கள் வலியுறுத்தல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் Jacob Zuma அவர்கள், ஊழல் குற்றச்சாட்டின்பேரில், கைதுசெய்யப்பட்டதையொட்டி, அவரின் ஆதரவாளர்களால்  நடத்தப்பட்ட வன்முறைகள், உயிரிழப்புகள், மற்றும், சூறையாடல்கள் ஆகியவை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே நலிவுற்றிருக்கும் நிலையில், இத்தகைய வன்முறைகள், நாட்டை கூடுதலாக நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன என்று கூறியுள்ளனர்.

வன்முறையில் ஈடுபடமாட்டோம் என அனைவரும் உறுதி எடுக்குமாறு வலியுறுத்திக் கூறியுள்ள தென் ஆப்ரிக்க ஆயர்கள், நாட்டை வழிநடத்துவோர் உரையாடலின் பாதையைத் தேர்ந்துகொள்ளுமாறும் அழைப்புவிடுத்துள்ளனர்.

கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவை சூறையாடப்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும், இவற்றுக்கு மத்தியில் நம்பிக்கையின் அடையாளத்தைக் காண முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ள கேப் டவுன் பேராயர் Stephen Brislin அவர்கள், நன்மனம்கொண்ட மக்கள், தெருக்களைச் சுத்தம் செய்யத் துவங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். (Fides)

இதற்கிடையே, தென் ஆப்ரிக்காவில், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால் பாதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும், மக்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு அரசு ஏறத்தாழ 240 கோடி டாலர்களை ஒதுக்கியுள்ளது.

தென் மண்டல ஆப்ரிக்க ஆயர்கள்

மேலும், ஆகஸ்ட் 2, வருகிற திங்களன்று ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தைத் துவங்கும் தென் மண்டல ஆப்ரிக்க ஆயர்கள், அப்பகுதியில், குறிப்பாக, தென் ஆப்ரிக்காவில் நிலவும் சமுதாய-அரசியல் பதட்டநிலை, தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருமணம் பற்றிய சட்டம், 2023ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தயாரிப்பு ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில், குறிப்பாக, Swatiniல், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் கொலைகள், அத்துமீறிய கைதுகள், கடத்தல்கள், சித்ரவதைகள் போன்றவற்றுக்கும், ஆயர்கள் தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2021, 14:41