தென் ஆப்ரிக்காவில் போராட்டதாரர்களைக் கட்டுப்படுத்தும் படைவீரர் தென் ஆப்ரிக்காவில் போராட்டதாரர்களைக் கட்டுப்படுத்தும் படைவீரர் 

வன்முறையை நிறுத்த தென் ஆப்ரிக்க ஆயர்களின் விண்ணப்பம்

அரசியல் தளத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, வன்முறை கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, நாடு முழுவதையும் நிலைகுலையைச் செய்வதை நாம் அனுமதிக்கக்கூடாது - தென் ஆப்ரிக்க ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரசியல் தளத்தில் நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, வன்முறை கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, நாடு முழுவதையும் நிலைகுலையைச் செய்வதை நாம் அனுமதிக்கக்கூடாது என்று, தென் ஆப்ரிக்க ஆயர்கள், தங்கள் மக்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் ஜேக்கப் ஸுமா (Jacob Zuma) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து ஆரம்பமான கலவரங்கள், விரைவில் கட்டுக்கடங்காமல் சென்றதால், மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல்கள் உருவாகி, தற்போதைய நிலையில் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையைக் குறித்து தங்கள் ஆழ்ந்த வேதனையை வெளியிட்டுள்ள தென் ஆப்ரிக்க ஆயர்கள், வன்முறைகளை மேற்கொள்வதால் எவ்வித நேர்மறையான விளைவையும் பெறஇயலாது என்றும், உண்மையில், தற்போதுள்ள நிலையைவிட மோசமான நிலையை நாம் அடைவோம் என்றும், கூறியுள்ளனர்.

மேலும், ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கையில், நாடெங்கும் பரவியுள்ள வறுமை, மற்றும் ஏற்றத்தாழ்வுகளை, தற்போது நிலவும் கலவரங்களின் பின்னணியில், அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அவர்களது கடமை என்றும் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, நாடெங்கும் பரவிவரும் வறுமை, மக்களிடையே ஒரு வறட்சியான சூழலை உருவாக்கியுள்ளது என்றும், இந்த வறண்டுபோன பூமியை பற்றவைக்க சிறு பொறிகள் போதுமானதாக இருந்தன என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2009ம் ஆண்டு முதல், 2018ம் ஆண்டு வரை, ஒன்பது ஆண்டுகள் அரசுத்தலைவராகப் பணியாற்றிய ஜேக்கப் ஸுமா அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் வழக்குகளுக்கு அவர் சரியான பதில் தராத காரணத்தால், அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் விடுதலையாகும்வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறிவரும் அவரது ஆதரவாளர்களால் துவங்கப்பட்ட போராட்டம், விரைவில், கடைகளைச் சூறையாடுதல், தீ வைத்தல் போன்ற கலவரங்களாக மாறியதால், காவல் துறையினரின் தலையீடு துவங்கியது.

ஜூலை 13, இச்செவ்வாய் முடிய, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில், 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் 1,234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2021, 15:03