புனித யாக்கோபு கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ள Santiago de Compostela பேராலயம் புனித யாக்கோபு கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ள Santiago de Compostela பேராலயம் 

"Compostela யூபிலி" - அருள் நிறைந்த, குணமளிக்கும் காலம்

யாக்கோபின் புனித ஆண்டு, இவ்வுலகிற்கு, அருள்நிறைந்த, குணமளிக்கும் ஒரு காலமாகவும், இறைவனைச் சந்திக்கும் ஒரு காலமாகவும் விளங்கட்டும் - Santiago de Compostela பேராயர், Julián Barrio Barrio

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

யாக்கோபின் புனித ஆண்டு, இவ்வுலகிற்கு, அருள்நிறைந்த, குணமளிக்கும் ஒரு காலமாகவும், இறைவனைச் சந்திக்கும் ஒரு காலமாகவும் விளங்கட்டும் என்று இஸ்பெயின் நாட்டின் Santiago de Compostela பேராயர், Julián Barrio Barrio அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தூதரான புனித யாக்கோபு கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ள Santiago de Compostela பேராலயம், 1211ம் ஆண்டு முதல், ஆயிரமாயிரம் திருப்பயணிகள் கூடிவரும் திருத்தலமாக புகழ்பெற்றுள்ளது.

திருத்தூதரான புனித யாக்கோபு திருநாள், ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 25ம் தேதி சிறப்பிக்கப்படும் சூழலில், இத்திருநாள், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பிக்கப்பட்டால், அதனை, Santiago de Compostela திருத்தலத்தில், "Compostela யூபிலி" என்று கொண்டாடுவது வழக்கம்.

2021ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட்ட புனித யாக்கோபு திருநாளையொட்டி, யூபிலி திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் Barrio Barrio அவர்கள், இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, திருத்தூதர் யாக்கோபு நம்மில் நம்பிக்கையை தூண்டுகிறார் என்று கூறினார்.

கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்சென்ற திருத்தூதர்களில் முக்கிய இடம் வகிக்கும் புனித யாக்கோபு, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் அநீதிகளையும், வேறுபல அவல நிலைகளையும் வெற்றிகொள்ள சக்தியை வழங்குவாராக என்று கூறிய பேராயர் Barrio Barrio அவர்கள், உலகை வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து நம்மைக் காக்க, புனித யாக்கோபு உதவி செய்வாராக என்று சிறப்பாக வேண்டிக்கொண்டார்.

ஸ்பெயின் நாட்டில் ஜூலை 26ம் தேதி நிலவரப்படி, 42,80,000 பேர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இவர்களில் 81,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

உயிரிழந்த அனைவருக்காகவும் வேண்டிக்கொண்ட பேராயர் Barrio Barrio அவர்கள், நலமளிக்கும் பணிகளில் அயராது உழைத்துவரும் பணியாளர்களுக்காகவும் சிறப்பான மன்றாட்டுக்களை எழுப்பினார்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட "Compostela யூபிலி"யையொட்டி, 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, Santiago de Compostela திருத்தல பேராலயத்தின் புனிதக் கதவுகள் திறக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்புச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார்.

2021ம் ஆண்டு இறுதியில், "Compostela யூபிலி" நிறைவடையும் என்று முதலில் தீர்மானம் செய்யப்பட்டிருந்தாலும், கோவிட் பெருந்தொற்றினால் திருப்பயணிகள் இத்திருத்தலத்திற்கு வருகை தருவது தடைப்பட்டதை மனதில் கொண்டு, இந்த யூபிலி ஆண்டு 2022ம் ஆண்டு முடிய நீட்டிக்கப்படும் என்று திருத்தந்தை, சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2021, 13:56