திருத்தந்தை 12ம் யோவான் திருத்தந்தை 12ம் யோவான் 

திருத்தந்தையர் வரலாறு: அரசியலால் அடிமைப்பட்ட காலம்

பேரரசரின் ஆதரவுடன், ஆயர் பேரவையால், திருத்தந்தை 12ம் யோவான், பதவி நீக்கம் செய்யப்பட்டு, லியோ என்ற பொதுநிலை விசுவாசி ஒருவர் தேர்வு செய்யப்பட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை 10ம் யோவானுக்கு அடுத்துவந்த திருத்தந்தை 6ம் லியோ 928ம் ஆண்டு ஜுனில் பொறுப்பேற்று, 7 மாதங்கள், 5 நாட்களே திருஅவையை வழிநடத்தி, 929ம் ஆண்டு பிப்ரவரியில் இறைபதம் சேர்ந்தார். இவர் திருத்தந்தை எட்டாம் யோவானின் கீழ் பிரதமராக இருந்த கிறிஸ்தோபர் என்பவரின் மகன்.

929ம் வருடம் பொறுப்பேற்ற திருத்தந்தை எட்டாம் ஸ்தேவான், பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் பல துறவு மடங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதாக வரலாறு கூறுகிறது. இது தவிர, இத்திருத்தந்தையைப் பற்றியும் வரலாற்றில் அதிகமாக இல்லை. இவர், 931ம் வருடம் மார்ச் மாதம் காலமானார்.

திருத்தந்தை 11ம் யோவான்

931ம் ஆண்டு பொறுப்பேற்றார் திருத்தந்தை 11ம் யோவான். திருத்தந்தை 11ம் யோவான் என்றவுடன் 10ம் யோவானும் நினைவுக்கு வருகிறார். திருத்தந்தை 10ம் யோவான் அவர்கள், Marozia என்ற பிரபுத்துவ குடும்பப் பெண்ணால் சிறைப்பிடிக்கப்பட்டு உயிரிழந்ததைக் குறித்து நோக்கினோம். அந்த Marozia என்பவருக்கும், அவள் முதல் கணவர் Albericக்கும் பிறந்தவர்தான், இந்த திருத்தந்தை 11ம் யோவான். திருத்தந்தை 11ம் யோவான் திருத்தந்தை பொறுப்பை வகித்தபோது, அவரின் தாய் Maroziaவின் அதிகார வெறியாட்டம் நீண்டு விரிந்தது. ஆனால், அவருக்கு குடும்பத்திற்குள்ளேயே எதிர்ப்பு இருந்தது. Maroziaவின் இளைய மகன் இரண்டாம் Alberic, தன் தாயின் ஆட்சியை அகற்றி அவரைச் சிறையிலடைத்தான். Maroziaவின் மூன்றாம் கணவர், அதாவது, கணவரின் சகோதரன் Hugh, உரோம் நகரைவிட்டே தப்பியோடியதால் பிழைத்தார். இதன் வழியாக, திருத்தந்தை 11ம் யோவானின் இளைய சகோதரன் இரண்டாம் Alberic, உரோமை ஆட்சியாளராக தன்னை அறிவித்துக்கொண்டு, தன் சகோதரனான திருத்தந்தையையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தார். அதாவது, ஆன்மீக விடயத்தைத் தவிர, வேறு எதிலும் தலையிட திருத்தந்தை 11ம் யோவானுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருத்தந்தை 11ம் யோவான் திருத்தந்தை பதவியில் இருந்துகொண்டே எவ்வித அதிகாரமும் இன்றி மிகப்பெரும் அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என வரலாறு கூறுகிறது. ஆனால், இவர் செய்த ஒரு நல்ல விடயம் என்னவெனில், திருஅவையில் பல்வேறு மாற்றங்களுக்கும், சீர்திருத்தங்களுக்கும் வித்திட்ட Cluny துறவிகளுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி ஊக்குவித்ததுதான். திருத்தந்தை 11ம் யோவான் 936ம் ஆண்டு காலமானார்.

திருத்தந்தை ஏழாம் லியோ

அடுத்து, திருத்தந்தையாகப் பொறுப்பேற்றவர், திருத்தந்தை ஏழாம் லியோ. இளவரசர் என தன்னை அறிவித்துக்கொண்டு உரோம் நகரை ஆண்டுவந்த இரண்டாம் Alberic என்பவரால், அதிகாரத்தைப் பயன்படுத்தி திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட பெனடிக்ட் சபைத் துறவியே இந்த பாப்பிறை எழாம் லியோ. இத்திருத்தந்தையின் காலத்தில் உரோமையில் அரசியல் குழப்பம் தலைதூக்கியது. தன்னை இளவரசர் என Alberic அறிவித்ததைப் பொறுக்காத இத்தாலிய மன்னர் Hugo, உரோமை மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றத் துவங்கினார். தன் தேர்வுக்கு உதவிய Albericக்கு உதவ ஆவல்கொண்டார் திருத்தந்தை ஏழாம் லியோ. அவரின் இவ்விருப்பத்திற்கு உதவி செய்யும் விதமாக, Odo என்ற புகழ்வாய்ந்த குளூனி துறவுமட அதிபர், இருதரப்பிலும் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். அத்துறவியை அணுகிய திருத்தந்தை, மன்னர் Hugoவுக்கும் உரோமைய ஆட்சியாளர் Albericக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார். துறவி Odoவும் இதில் வெற்றி கண்டார். ஆம். அன்றைய அரசர்கள் கடைப்பிடித்த தீர்வையே இவரும் முன்வைத்தார். மன்னர் Hugoவின் மகள் Nuhikaவுக்கும் இளவரசர் என அழைத்துக்கொண்ட Albericக்கும் திருமணத்தை நடத்தி, பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு கண்டார். இந்த திருத்தந்தை ஏழாம் லியோவின் காலத்தில் பலதுறவு சபைகள் பல்வேறு சலுகைகளைப் பெற்றன, குறிப்பாக குளூனி சபை. இத்திருத்தந்தையின் காலத்தில் யூதர்கள் கட்டாயமாக கிறிஸ்தவமறைக்கு மாற்றப்பட்டது கண்டிக்கப்பட்டது, தடையும் செய்யப்பட்டது. ஆனால், கிறிஸ்தவமறையைத் தழுவ மறுத்த யூதர்களை, நகர்களை விட்டு வெளியேற்றும் சட்டங்களை இவர் தடைச் செய்யவில்லை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 939ம் ஆண்டு ஜுலை மாதம் 13ம் தேதி திருத்தந்தை ஏழாம் லியோ காலமானார்.

திருத்தந்தை ஒன்பதாம் ஸ்தேவான்.

939ம் ஆண்டு, திருஅவை தலைமைப் பொறுப்பை ஏற்றார் திருத்தந்தை ஒன்பதாம்  ஸ்தேவான். இவர் 942ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழக்கும் வரை, இளவரசர் Albericன் முழுக்கட்டுப்பாட்டின் கீழேயே இருந்ததால், இவரின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த தெளிவான விவரங்கள் வரலாற்று ஏடுகளில் இல்லை.

அடுத்து வந்த திருத்தந்தை இரண்டாம் Marinusம் இளவரசர் Albericன் அதிகாரத்தால் தேர்வு செய்யப்பட்டார். 942ம் ஆண்டு முதல் 946 வரை திருஅவையை வழிநடத்தினாலும், Albericன் கட்டளைகளை மீறி இவரால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. குளூனி துறவு சபையின் முன்னேற்றத்திற்கும், உரோமை பெருங்கோவில்களின் பழுதுபார்க்கும் பணிகளுக்கும், ஏழைகளின் முன்னேற்ற வாழ்வுக்கும் இவர் சிறப்புப் பணியாற்றினார் என சில ஏடுகள் குறிப்பிடுகின்றன.

திருத்தந்தை இரண்டாம் Agapetus

946ம் ஆண்டு பொறுப்பேற்றார் திருத்தந்தை இரண்டாம் Agapetus. 10 ஆண்டுகள் இவர் திருத்தந்தையாக வழிநடத்தினார். ஆம், திருத்தந்தையர்களின் மிகவும் ஆழமான அவமானத்திற்குரிய காலக்கட்டத்தில் இவரின் வழிநடத்தல் துவங்கியது. ஒரு திருத்தந்தையின் இவ்வுலக அதிகாரங்களெல்லாம் பறிக்கப்பட்டு, அரசியல் ஆட்சியாளர்களே அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டிருந்த காலக்கட்டம் அது. இவர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கியதால், கிறிஸ்தவ உலகம் முழுமையாலும் மதிக்கப்பட்டார். திருஅவையின் அதிகாரங்களைப் படிப்படியாகப் பெற முயன்றார். முதலில் துறவு மடங்களின், பேராலயங்களின், ஆன்மீகத் தனித்தன்மையை, புனிதத்துவத்தை மேம்படுத்த ஆவல் கொண்டார். மிகவும் நேர்மையானவராக, கறைபடியாதவராக, திருஅவையின் மேம்பாட்டிற்காக உழைத்த இத்திருத்தந்தை இறப்பதற்கு முன்னரே இவருக்கு பின்னான திருத்தந்தையை தேர்ந்தெடுத்துவிட்டார்  உரோமைய இளவரசன் Alberic. Agaapetus இறந்தவுடன், தன் மகன் அக்டோவியஸை (Octavius) திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என, 954ம் ஆண்டே உரோமையப் பிரபுக்களிடம், புனித பேதுரு பெருங்கோவிலில் வைத்து வாக்குறுதி பெற்று, மக்களுக்கும் கட்டளையிட்டு வெற்றியும் கண்டார், உரோமைய ஆட்சியாளர் Alberic.

திருத்தந்தை 12ம் யோவான்

955ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உயிரிழந்தார் திருத்தந்தை Agapetus. ஏற்கனவே திருத்தந்தையாகப் பதவியேற்க காத்திருந்தார் Octavius என்ற அரச வாரிசு. திருத்தந்தை இரண்டாம் Agapetus காலமான அதே ஆண்டு, அதாவது 955ம் ஆண்டு டிசம்பர் 16ல்  இளவரசர் Albericன் மகன் Octavius திருத்தந்தையாகிறார். அப்போது அவருக்கு வயது 18. 12ம் யோவான் என்ற பெயரை எடுத்துக்கொண்ட புதிய திருத்தந்தை, உரோம் நகரின் அனைத்து அதிகாரங்களையும், அதாவது ஆட்சியாளர் என்ற முறையிலும், திருத்தந்தை என்ற முறையிலும், எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் கொண்டிருந்தார். ஒழுக்கம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் அன்றைய ஆட்சி சீர்கெட்டிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருத்தந்தையர்களின் உறைவிடமான இலாத்தரன் அரண்மனை, தீச்செயல்களின் உறைவிடமாக மாறி, அரசியல் விளையாட்டுக்களின் அரங்கானது.

இத்திருத்தந்தை 12ம் யோவான், ஆன்மீக விடயங்களில் காட்டிய ஈடுபாட்டைவிட, போரில் காட்டிய ஆர்வமே அதிகமாக இருந்தது. Capuor பிரபு Pandult என்பவரிடம் போரிட்டு தோற்றார் இத்திருத்தந்தை. திருஅவை சொத்துக்கள் பல, இத்தாலிய மன்னர் Berengariusஆலும் அவர் மகன் Adalbertஆலும் ஆக்கிரமிக்கப்பட்டன. இதையெல்லாம் பொறுக்காத திருத்தந்தை 12ம் யோவான், ஜெர்மன் மன்னர் முதலாம் Ottoவின் உதவியை நாடினார். அவரும் படையைத் திரட்டிக்கொண்டு 962ம் ஆண்டு சனவரி மாதம் 31ம் தேதி உரோம் நகரை வந்தடைந்தார். வந்தடைந்தது மட்டுமல்ல, 12ம் யோவானையே திருத்தந்தையாகவும், உரோம் நகர ஆட்சியாளராகவும் அங்கீகரித்தார். இதற்கு கைமாறாக திருத்தந்தையும், தான் Otto மன்னருக்கே விசுவாசமாக இருப்பேன் என்றும், இத்தாலிய மன்னர் Berengariusடன் எவ்வித தொடர்பும் கொள்ளமாட்டேன் எனவும் வாக்குறுதியளித்தார். இதன் உச்சகட்டமாக, 962ம் ஆண்டு பிப்ரவரி 2ம்தேதி, முதலாம் Otto மன்னர் திருத்தந்தையால் பேரரசராக முடிசூட்டப்பட்டார்.  பேரரசராக முடிசூட்டப்பட்ட 12 நாட்களில் தன் படைகளுடன் மன்னர் Berengarius ஐயும், அவர் மகன் Adalbertயும் தோற்கடிக்கப் புறப்பட்டார் பேரரசர் Otto. இப்போது திருத்தந்தை 12ம் யோவானின் மனது மாறியது. ஜெர்மன் பேரரசர் இத்தாலியில் தன் வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறாரோ என பயந்தார் திருத்தந்தை. மன்னர் Berengariusயின் மகன் Adelbertடன் இரகசிய உடன்பாடு கொண்டு, பேரரசர் Ottoவுக்கு எதிராக போர் தொடுக்கும்படி Hungary மற்றும், Constantinopleக்கு கடிதங்களை தன் இரகசியத் தூதுவர்கள் வழியாக அனுப்பினார். அவர்கள் வழியில் பேரரசரின் இராணுவத்தால் பிடிக்கப்பட்டதால், திருத்தந்தையின் நம்பிக்கைத் துரோகம் தெரியவந்தது. பேரரசர் சினம் கொண்டார். இந்த வேளையில் Adalbert உரோம் வர, திருத்தந்தையும் அவரை வரவேற்றார். இதனால் கோபம் கொண்ட, பேரரசரின் விசுவாசிகளான உரோமையப் பிரபுக்கள் கூட்டம், திருத்தந்தை யோவானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டது. பேரரசர் Ottoவும் உரோமுக்குத் திரும்பினார். 963ம் ஆண்டு நவம்பர் 2ம்தேதி, பேரரசருக்கு பயந்து, திருத்தந்தை யோவானும், Adalbertம் உரோமுக்கு அருகேயுள்ள Tivoli என்ற நகருக்கு தப்பியோடினர்.

இத்தகைய ஒரு சூழலில் நவம்பர் 6ம்தேதி ஜெர்மனி, மற்றும், இத்தாலியின் 50 ஆயர்கள் கூடி, புனித பேதுரு பெருங்கோவிலில் ஆயர் மாநாட்டைக் கூட்டி, திருத்தந்தை யோவான் மீது பல குற்றங்களை சுமத்தி அவரை பதில் சொல்ல அழைத்தனர். ஆனால், திருத்தந்தையோ வர மறுத்ததுடன், தனக்குப் பதிலாக இன்னொரு திருத்தந்தையை தேர்வுசெய்தால், அந்த ஆயர்கள் அனைவரையும் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்போவதாக அறிவித்தார். இந்த வேளையில் பேரரசர், ஆயர் பேரவைக்கு தன் ஆதரவை வழங்க, திருத்தந்தை 12ம் யோவான், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்தில், ஆயர்களால் லியோ என்ற பொதுநிலை விசுவாசி ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனேயே அனைத்து திருநிலைப்பாடுகளும் வரிசையாக வழங்கப்பட்டு, எட்டாம் லியோ என்ற பெயரில் திருத்தந்தையாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தேர்வும், திருநிலைப்பாடுகளும் திருஅவை சட்டத்திற்கு புறம்பானதாக அன்று கருதப்பட்டது. இருப்பினும் வேறுவழியில்லை. இதையெல்லாம் நிகழ்த்திவிட்டு 964ம் ஆண்டு ஜனவரி 3ம்தேதி பேரரசர் கிளம்பியபோது, திருத்தந்தை யோவானின் ஆதரவாளர்கள், பேரரசருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இதில் பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்டதாகவும், பேரரசரே வென்றதாகவும் வரலாறு கூறுகிறது. புதிய திருத்தந்தை லியோவின் விண்ணப்பத்தின் பேரில், கிளர்ச்சியாளர்கள் மீது பேரரசர் இரக்கம் காட்டினார். ஏறத்தாழ 100 கைதிகளையும் விடுவித்தார். 

பேரரசர் உரோம் நகரை விட்டு கிளம்பியதும், மீண்டும் புரட்சி வெடித்தது. புதிய திருத்தந்தை எட்டாம் லியோ உரோம் நகரைவிட்டு தப்பியோட வேண்டியிருந்தது. அதேவேளை, பழைய திருத்தந்தை 12ம் யோவான் உரோமுக்குள் புகுந்தார். பலர் பழிவாங்கப்பட்டனர். தன்னை பதவி விலக்கிய ஆயர் பேரவையின் தீர்மானங்கள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டன. திருத்தந்தை லியோ, அவரைத் தேர்ந்தெடுத்த ஆயர்கள், பதவிப் பிரமாணம் செய்துவைத்த Ostia ஆயர் Sico என அனைவரும் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அதேவேளை, இதையெல்லாம் கேள்வியுற்ற பேரரசர் Otto, இத்தாலிய மன்னர் Berengariusஐ தோற்கடித்த பின் மீண்டும் உரோம் நோக்கி திரும்பினார். ஆனால், அவருக்கும் திருத்தந்தை 12ம் யோவானுக்கும் இடையேயான மோதலுக்கு அவசியமில்லாமல் ஆகிவிட்டது. பேரரசர் வருமுன்னே 964ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதி, பக்கவாத நோயால் தாக்கப்பட்ட 8ம்நாள் உயிரிழந்தார் திருத்தந்தை 12ம் யோவான். 955ம் ஆண்டு தன் 18ம் வயதில் திருத்தந்தையான 12ம் யோவான் ஒன்பது ஆண்டுகள் திருஅவை தலைமைப் பொறுப்பில் இருந்து, 964ல் காலமானார்.

    நேயர்களே! வரும்வாரம் திருத்தந்தை எட்டாம் லியோவிலிருந்து நம் பயணத்தைத் துவக்குவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2021, 14:57