புனித பூமியில் திருப்பயணிகள் - கோப்புப் படம் 2018 புனித பூமியில் திருப்பயணிகள் - கோப்புப் படம் 2018 

புனித பூமி மீண்டும் மூச்சுவிட உதவும் திருப்பயணங்கள்

திருப்பயணிகள் மீண்டும் எருசலேமுக்கு வருகை தந்துள்ளதால், இப்புனித நகரம், இனி, தன் இரு நுரையீரல்களைக் கொண்டு மூச்சுவிட முடியும் - பேராயர் பிட்ஸபல்லா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பயணிகள் மீண்டும் எருசலேமுக்கு வருகை தந்துள்ளதால், இப்புனித நகரம், இனி, தன் இரு நுரையீரல்களைக் கொண்டு மூச்சுவிட முடியும் என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, பேராயர், பியெர்பத்திஸ்தா பிட்ஸபல்லா (Pierbattista Pizzaballa) அவர்கள் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், கடந்த பல மாதங்களாக திருப்பயணங்கள் தடை செய்யப்பட்டிருந்த புனித பூமியில், இத்தாலியின் Opera Romana Pellegrinaggi என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருப்பயணிகளின் வருகையையொட்டி, பேராயர் பிட்ஸபல்லா அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

கடந்த ஓராண்டளவாக வெறிச்சோடி போயிருந்த எருசலேம் கோவில்கள் மற்றும் வீதிகள், பெரும் வருத்தத்தை தந்தாலும், அந்த அமைதியான காலம், சிந்தனைகளைத் தூண்டும் காலமாகவும் அமைந்திருந்தது என்று, பேராயர் பிட்ஸபல்லா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

எண்ணிக்கையில் மிகுந்த கூட்டங்கள் தேவையில்லை எனினும், திருப்பயணிகளின் வருகையை தங்கள் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு இயங்கும் குடும்பங்களுக்கு, தற்போது வருகை தந்துள்ள திருப்பயணிகள், மீண்டும் மகிழ்ச்சியைக் கொணர்ந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை என்று, பேராயர் பிட்ஸபல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

பல மாதங்களுக்குப் பின், எருசலேம் நகருக்கு வருகை தந்தை திருப்பயணிகள், கெத்சமனி தோட்டத்திற்கருகே அமைந்துள்ள ஆலயத்தில் திருப்பலியில் பங்கேற்றபின், பெத்லகேம் சென்றனர். அதற்குப் பின், அவர்கள் இறுதியாக, இயேசுவின் கல்லறை அடங்கியுள்ள ஆலயத்திற்குச் சென்றனர் என்று இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் கூறினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2021, 13:59