9 ஆண்டு சிறை வாழ்வுக்குப்பின் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபீ 9 ஆண்டு சிறை வாழ்வுக்குப்பின் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபீ  

துன்புறும் கிறிஸ்தவர்களின் குரலாக பணியாற்ற...

தனக்கு இறைவன் வழங்கிய இந்தப் புதுவாழ்வைக் கொண்டு, சிறைகளிலும், வேறு பல துன்பங்களிலும் வாடும் கிறிஸ்தவர்களின் குரலாக இருக்க விழைகிறேன் - ஆசியா பீபீ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் தேவ நிந்தனை சட்டத்தின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபீ என்ற கிறிஸ்தவ பெண்மணி, தற்போது, உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களின் குரலாக பணியாற்ற விழைவதாக பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

கனடா நாட்டில் தற்போது வாழ்ந்துவரும் ஆசியா பீபீ அவர்கள், ஜூலை 13, இச்செவ்வாய் முதல், 15 இவ்வியாழன் முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில், நடைபெற்ற முதல் மதச் சுதந்திர பன்னாட்டு உச்சி மாநாட்டில், காணொளி வழியே கலந்துகொண்டு பேசிய வேளையில் இவ்வாறு கூறினார்.

2009ம் ஆண்டு பாகிஸ்தானில் ஆசியா பீபீ அவர்களுக்கும், ஏனைய இஸ்லாமியப் பெண்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்வை, மதத்துடன் தொடர்புபடுத்தி, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு, 2010ம் ஆண்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்வேறு உலக அமைப்புக்கள், இந்த நிகழ்வைக் குறித்து விண்ணப்பங்கள் விடுத்தும், லாகூர் உயர் நீதிமன்றம் தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்து, இறுதியாக, 2018ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் ஆசியா பீபீ அவர்களை விடுவித்தது.

தன் வாழ்வு அனுபவங்களை விவரித்த ஆசியா பீபீ அவர்கள், தனக்கு விடுதலை வழங்கிய இறைவனுக்கும், தனக்காக போராடிய மற்றும் செபித்தவர்களுக்காக நன்றி கூறியபின், தனக்கு இறைவன் வழங்கிய இந்தப் புதுவாழ்வைக் கொண்டு, சிறைகளிலும், வேறு பல துன்பங்களிலும் வாடும் கிறிஸ்தவர்களின் குரலாக இருக்க விழைகிறேன் என்று தன் காணொளிப் பகிர்வில் கூறினார்.

2014ம் ஆண்டுக்கும், 2018ம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், பாகிஸ்தான் அரசு, தேவ நிந்தனை சட்டத்தை 184 முறை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியது என்றும், இந்த எண்ணிக்கை, உலகின் வேறு எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை என்றும், மதச் சுதந்திர பன்னாட்டு உச்சி மாநாட்டில் கூறப்பட்டது.

இதற்கிடையே, இந்த மதச் சுதந்திர பன்னாட்டு உச்சி மாநாட்டில், ஜூலை 14, இப்புதனன்று பேசிய Tursunay Ziyawudun என்ற 42 வயது பெண்மணி, தான் சீனாவின் Xinjiang தடுப்புக்காவல் முகாமில் உடல் அளவிலும், பாலியல் அளவிலும் அடைந்த துன்பங்களை பகிர்ந்துகொண்டார்.

சீனாவின் Xinjiang தடுப்புக்ககாவல் முகாம்களில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட Uyghur மக்கள், Kazakh, மற்றும், Hui, இனங்களைச் சேர்ந்தவர், இஸ்லாமியர், மற்றும் சில கிறிஸ்தவர்கள் அடைந்துவரும் கொடுமைகளை, பல்வேறு நாடுகளின் அரசுகள் கண்டனம் செய்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2021, 14:14