AICU - அனைத்திந்திய கத்தோலிக்க அமைப்பின் இலச்சனை AICU - அனைத்திந்திய கத்தோலிக்க அமைப்பின் இலச்சனை 

இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட

இந்தியாவில், சீக்கியர்கள், புத்தமதத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் போன்று, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்படவேண்டும் - AICU அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் மாநில அமைப்புகள், மற்றும், மாநிலங்களைச் சாராத அமைப்புகள், சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுமாறு, இந்தியாவின் பழமையான பொதுநிலை கத்தோலிக்கர் அமைப்பு ஒன்று, நடுவண் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக, அண்மையில் மாலத்தீவுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற, கட்டுபாடற்ற வன்முறைகள், மிகுந்த கவலை தருகின்றன என்று தெரிவித்துள்ள, AICU எனப்படும், அனைத்திந்திய கத்தோலிக்க அமைப்பு, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த உரிமைகள் காக்கப்படுமாறு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்திய சிறுபான்மையினர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்றவை உட்பட, தேசிய, மற்றும், பன்னாட்டு உரிமைகள் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றிக் குறிப்பிட்டுள்ள, அந்த கத்தோலிக்க அமைப்பு, பல மாநிலங்களின் கிராமங்களில் கிறிஸ்தவ சமுதாயங்கள் அடக்குமுறைக்கு உள்ளாகின்றன என்று கூறியுள்ளது.

மதமாற்றத் தடைச் சட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன என்றும், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உரிமைகள் மறுப்பு உட்பட, வெளிநாட்டு நிதியுதவிகளை முழுவதுமாக தடைசெய்யும் முயற்சி இடம்பெற்று வருகின்றது என்றும், AICU அமைப்பு கூறியுள்ளது.

சீக்கியர்கள், புத்தமதத்தினர் போன்று, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமைகள் வழங்கப்படுமாறும், அந்த அமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளது.

AICU அமைப்பு, இந்தியாவில் 1919ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2021, 15:36