பெகசுஸ் உளவு மென்பொருள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு பெகசுஸ் உளவு மென்பொருள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  

பெகசுஸ் உளவு மென்பொருள் நடவடிக்கை குறித்து ஆயர் கண்டனம்

சில குறிப்பிட்ட குழு அல்லது ஆள்களைக் குறிவைத்து உளவுபார்ப்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது, மற்றும், இந்நடவடிக்கை குறித்து அரசு விசாரணை நடத்தவேண்டும் - ஆயர் சால்வதோர் லோபோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து உளவு பார்ப்பது, ஒரு சனநாயக நாட்டின் குடிமக்களுக்கு அச்சுறுத்தல் எனவும், இது, முற்றிலும் நன்னெறிக்கு முரணானது எனவும், இந்திய கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

‘பெகசுஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) என்னும் உளவுமென்பொருள் வழியாக, அரசு, குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வு குறித்த இரகசியங்களை உளவுபார்க்கின்றது என்று  குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளதையடுத்து, யூக்கா (UCAN) செய்தியிடம் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புப் பணிக்குழுவின் தலைவரான, Baruipur ஆயர் சால்வதோர் லோபோ அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

ஒருவரின் அந்தரங்க வாழ்வுரிமை, அடிப்படை உரிமைகளில் ஒன்று என, இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஆயர் லோபோ அவர்கள், சில ஊடகவியலாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், சர்ச்சைக்குரிய பெகசுஸ் குறித்து, ஆளும் அரசை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது, சனநாயகத்திற்கும், நாட்டின் சமயச்சார்பற்ற தன்மைக்கும் நல்லது என்று கூறியுள்ளார்.

சில சமூகக் கூறுகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை முன்வைக்கின்றன என்று அரசு நினைக்கும்போது, சில நேரங்களில் அரசு அவற்றை உளவுபார்ப்பதை புரந்துகொள்ள முடிகிறது, ஆனால், சில குறிப்பிட்ட குழு அல்லது ஆள்களைக் குறிவைத்து உளவுபார்ப்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும், இந்நடவடிக்கை குறித்து அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று, ஆயர் லோபோ அவர்கள் கூறியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் மென்பொருள்ஆயுத நிறுவனமான NSO குழு தயாரித்த பெகசுஸ் மென்பொருள் (செயலி), பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அலுவலகர்கள், மற்றும், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்ட இந்தியத் தொலைபேசி எண்ணங்களை உளவு பார்த்துள்ளது என்று ஊடகஙகள் அறிவித்துள்ளன.

இஸ்ரேலின் இந்த NSO குழு, 2019ம் ஆண்டில், 121 இந்தியர்கள் உட்பட, உலகெங்கும் ஏறத்தாழ 1,400 பேரின் தொலைபேசி எண்களை ஒட்டுகேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த மென்பொருளை அழிப்பது எப்படி என, தொழில்நுட்ப வல்லுனர்களே தெரியாமல் உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், பெகசுஸ் உளவு மென்பொருள் பல்வேறு நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள், ஒருவரது ஸ்மார்ட்போனில் புகுந்து, அவரது தகவல்கள் அனைத்தையும், பயனர்களின் அனுமதி இல்லாமல் எடுப்பதுடன், அவர்களின் அனைத்து தொலைபேசி அழைப்புகள், மற்றும், செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்கிறது. அதாவது, ஒருவரது ஸ்மார்ட் தொலைபேசியில், பெகசுஸ் மென்பொருள் நிர்வகிக்கப்பட்டால், அது 24 மணிநேரமும் அவரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் கருவியாக மாறுகிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2021, 13:36