ஆஸ்திரேலிய பூர்வீக இன மக்கள் ஆஸ்திரேலிய பூர்வீக இன மக்கள்  

ஆஸ்திரேலியத் திருஅவையில் “நாட்டைக் குணப்படுத்தல்” நாள்

ஆஸ்திரேலிய கத்தோலிக்கத் திருஅவையில் தற்போது 1,33,528 பூர்வீக இன மக்கள் உள்ளனர். இவர்களில் 10 விழுக்காட்டினர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“நாட்டைக் குணப்படுத்தல்” என்ற தலைப்பில், ஆஸ்திரேலிய கத்தோலிக்கத் திருஅவை, ஜூலை 04, இஞ்ஞாயிறன்று, பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பூர்வீக இன மக்கள் கத்தோலிக்கத் திருஅவைக்குக் கொடையாக அமைந்துள்ளனர் என்பதை ஏற்று, அதை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் அத்தலத்திருஅவை, சிறப்பித்து வருகிறது.  

நம் பூமி, தண்ணீர் வளங்கள், புனித இடங்கள், கலாச்சார வளங்கள் போன்றவை, மாசுபடாமலும், சுரண்டப்படாமலும் இருப்பதில் நாம் தொடர்ந்து மிகுந்த அக்கறை காட்டவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Laudato Si’ திருமடலில் அழைப்புவிடுத்திருப்பதைச் செயல்படுத்தும்வண்ணம், இந்த நாள் சிறப்பிக்கப்படுகின்றது என்று, ஆஸ்திரேலிய தலத்திருஅவை கூறியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் அதிகமாகவுள்ள இவ்வாண்டில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்ற பொறுப்பு, மிக அதிகமாகவே உள்ளது எனவும் தலத்திருஅவை அறிவித்துள்ளது.

“நாட்டைக் குணப்படுத்தல்” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறை முன்னிட்டு, ஆஸ்திரேலிய ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ம் ஆண்டு, அந்நாட்டில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டதன் 250ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுகிறது எனவும், இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, பூர்வீக இன மக்களில் இறை ஆவி பொழியப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த இறை ஆவியை, பறவைகளின் பாடலில், நீரருவிகளின் இரைச்சலில், காற்றின் சலசலப்பு ஒலியில் உணரமுடிகின்றது என்றும், இது, பூமியையும், கடவுளின் படைப்பு அனைத்தையும் இணைக்கின்றது என்றும் கூறியுள்ள ஆயர்கள், இதுவே பூர்வீக இன மக்களின் அடிப்படை ஆன்மீகம், இவர்கள், முதலில் படைப்பின் பாதுகாவலர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே படைப்பைப் பாதுகாப்பதற்கு, பூர்வீக இன மக்கள் மேற்கொள்ளும் போராட்டத்தில், அவர்களோடு நாம் எல்லாரும் ஒன்றித்திருக்கவேண்டும், மற்றும், அம்மக்களோடு அமர்ந்து, அவர்கள் பேசுவதைக் கேட்டு, அவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை இஞ்ஞாயிறு நினைவுபடுத்துகின்றது என்று ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆஸ்திரேலிய கத்தோலிக்கத் திருஅவையில் தற்போது 1,33,528 பூர்வீக இன மக்கள் உள்ளனர். இவர்களில், 10 விழுக்காட்டினர், ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2021, 15:03