பிலிப்பீன்ஸ் தங்கப்பதக்க வீராங்கணை ஹிடிலின் டயஸ் பிலிப்பீன்ஸ் தங்கப்பதக்க வீராங்கணை ஹிடிலின் டயஸ்  

பிலிப்பீன்ஸுக்கு முதல் தங்கப்பதக்கம் – கத்தோலிக்கப் பெண்

ஹிடிலின் டயஸ் அவர்கள், வெற்றிபெற்றதும், அன்னை மரியாவின் உருவம் பதித்த அற்புத பதக்கத்தை இறுகப்பற்றிக்கொண்டு, 'ஆண்டவரே உமக்கு நன்றி, ஆண்டவரே உமக்கு நன்றி' என்று உரக்கக்கூறியது, உலக ஊடகங்களில் பதிவானது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒலிம்பிக் விளையாட்டுக்களில், பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு, முதல் தங்கப்பதக்கத்தை வென்ற, ஹிடிலின் டயஸ் (Hidilyn Diaz) என்ற பெண்மணி, தங்கள் நாட்டுக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை, தன் கத்தோலிக்க மத நம்பிக்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஜூலை 26, இத்திங்களன்று நடைபெற்ற பெண்களின் 55 கிலோகிராம் பளுதூக்கும் நிகழ்வில், ஹிடிலின் டயஸ் அவர்கள், தன நாட்டுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்றதோடு, ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்த குறிப்பிட்ட பிரிவில் ஒலிம்பிக் சாதனையையும் பதிவு செய்துள்ளார்.

இவரது சாதனையைக் குறித்து, வெரித்தாஸ் வானொலியில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, மணிலா பேராயர், கர்தினால் ஹோஸே அத்வின்குலா (Jose Advincula) அவர்கள், மிக நெருக்கடியான சூழலில் இருக்கும் பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களுக்கு, ஹிடிலின் டயஸ் அவர்கள், மகிழ்வையும் நம்பிக்கையையும் கொணர்ந்துள்ளதோடு, தன் மத நம்பிக்கைக்கு ஒரு சிறந்த சாட்சியத்தையும் வழங்கியுள்ளார் என்று கூறினார்.

ஹிடிலின் டயஸ் அவர்கள், பளுதூக்கும் நிகழ்வில் வெற்றிபெற்றதும், தன் கரங்களில், அன்னை மரியாவின் உருவம் பதித்த அற்புத பதக்கத்தை இறுகப்பற்றிக்கொண்டு, 'ஆண்டவரே உமக்கு நன்றி, ஆண்டவரே உமக்கு நன்றி' என்று உரக்கக்கூறியது, உலக ஊடகங்களில் பதிவானது.

ஹிடிலின் டயஸ் அவர்கள், இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அன்னை மரியா மீது வைத்திருந்த பக்தி அனைத்தையும் தான் பாராட்டுவதாகக் கூறிய பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Romulo Valles அவர்கள், தன் கத்தோலிக்க நம்பிக்கையிலிருந்து பெற்றுக்கொண்ட சக்தியால், அவர் பளுதூக்குவதில் சாதனை புரிந்துள்ளார் என்று கூறினார்.

தங்கப்பதக்கத்தைப் பெற்றபின், ஜூலை 27, இச்செவ்வாயன்று, ஹிடிலின் டயஸ் அவர்கள், ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில், டோக்கியோ நகருக்கு வருவதற்குமுன், தன் நண்பர்களோடு சேர்ந்து, அன்னை மரியாவுக்கு, நவநாள் வேண்டுதல்கள் மேற்கொண்டதாகவும், ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு புறப்பட்ட வேளையில், தன் நண்பர்கள், தனக்கு, அன்னை மரியாவின் அற்புத பதக்கத்தை அளித்ததாகவும் கூறினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள Zamboanga நகரில், வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்த ஆறு குழந்தைகளில், ஐந்தாவது குழந்தையாக, 1991ம் ஆண்டு பிறந்தவர், ஹிடிலின் டயஸ். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2021, 13:53