திருத்தந்தையின் இடதுபுறம் நடந்து செல்லும் கர்தினால் Laurent Monsengwo Pasinya - கோப்புப் படம் 2015 திருத்தந்தையின் இடதுபுறம் நடந்து செல்லும் கர்தினால் Laurent Monsengwo Pasinya - கோப்புப் படம் 2015 

காங்கோ கர்தினால் Laurent Monsengwo அவர்களின் மறைவு

திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C-9 எனப்படும் கர்தினால்களின் குழவில் 2018 வரை சிறப்புப் பணியாற்றிய கர்தினால் இறைபதம் சேர்ந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காங்கோ மக்களாட்சி குடியரசின் கர்தினால் Laurent Monsengwo Pasinya அவர்கள், ஜூலை 11, ஞாயிறன்று, பிரான்ஸ் நாட்டின் Versailles நகரில் இறைபதம் சேர்ந்தார். 

காங்கோ குடியரசின் Kinshasa பேராயராக 1988ம் ஆண்டிலிருந்து பொறுப்பேற்று, 2018ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, தன் 79ம் வயதில் பணி ஓய்வுபெற்ற கர்தினால் Laurent Monsengwo அவர்கள், கடந்த வார துவக்கத்தில், உடல் நிலை மோசமடைந்ததையொட்டி, சிகிச்சைக்கென பிரான்ஸ் நாட்டிற்கு கொணரப்பட்டு, 5 நாட்களுக்குப்பின் Versailles நகரில் காலமானார்.

2010ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டப் பேராயர் Laurent Monsengwo அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் C-9 எனப்படும்  குழுவுக்கு, திருத்தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2018 வரை சிறப்புப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்தினாலின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட பிரான்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Eric de Moulins-Beaufort அவர்கள், 81 வயதான கர்தினால் Laurent Monsengwo அவர்கள், அமைதி, கலந்துரையாடல், மற்றும் ஒப்புரவு ஆகியவற்றின் மனிதர் என கர்தினாலைப் பாராட்டியுள்ளார்.

காங்கோ குடியரசின் Kinshasa பெருமறைமாவட்ட இந்நாள் பேராயர், கர்தினால் Fridolin Ambongo Besungu அவர்கள் பேசுகையில், மறைந்த கர்தினால் Laurent Monsengwo அவர்கள், நீதி நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்புவதற்கு தன்னை அர்ப்பணித்தவர் எனக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2021, 13:54